கம்ப்யூட்டர் பெண்கள் 19 - இணைய வரலாற்றை அறிந்த ‘எலிஸிபெத் பெயின்லர்’
இணையத்தின் ஆரம்ப கால கட்டத்தில், அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி, டொமைன் முகவரி உள்ளிட்ட இணையத்தின் ஆதார அம்சங்கள் பலவற்றை உருவாக்கிய முன்னோடியாக எலிஸிபெத் பெயின்லர் திகழ்கிறார்.
“நாம் கற்றுக்கொள்ளும் மற்றும் தொடர்பு கொள்ளும் வழியை மாற்றியமைத்த தொழில்நுட்ப நிகழ்வான இணையத்தின் வளர்ச்சியில் எனக்கு சிறிய பங்கு இருப்பதில் பெருமை கொள்கிறேன்...” என்று சொல்லும் எலிஸிபெத் பெயின்லர் இணைய முன்னோடிகளில் ஒருவர் என்பது தான் வியப்பிற்குறிய விஷயம்.
பெயின்லர் வார்த்தைகளில் வெளிப்படும் தன்னடக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். இந்த கருத்தை அவர் தன்னிறைவாக கூறியிருக்கிறார் என்பதையும் உணர வேண்டும்.
இணையம் எனும் வலைப்பின்னல் ஒற்றை புள்ளியில் இருந்து ஒற்றை நபரின் கண்டுபிடிப்பாக உருவாகாமல், பல முன்னோடி மனிதர்களின் பங்களிப்பால் உருவானது என்பதால், எந்த ஒரு தனிநபரும் அதன் ஆக்கத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது எனும் போது, எலிஸிபெத் பெயின்லர் (Elizabeth “Jake” Feinler) தனது பங்களிப்பை சிறியது என குறிப்பிடுவது பொருத்தமானது தான்.
அதே நேரத்தில், பெயின்லரின் பங்களிப்பு சிறியதாக இருந்தாலும், இணைய வளர்ச்சியில் மையமாக அமைந்திருப்பதோடு, இணைய வரலாற்றை சரியாக புரிந்து கொள்ள உதவுவதாகவும் அமைகிறது.
இணையத்தின் மூல விதையாக கருதப்படும் அர்பாநெட்டிற்கான முதல் கையேட்டை உருவாக்கியது, இணையம் தொடர்பான தேவையான தகவல்களை அளிக்கும் வலைப்பின்னல் தகவல் மையத்தை நிர்வகித்தது மற்றும் இணையத்தின் இன்றியமையாத அடையாளங்களில் ஒன்றாக அமைந்துள்ள 'டாட் காம்' போன்ற டொமைன் முகவரி கருத்தாக்கத்தை அறிமுகம் செய்ததும் அவரது முக்கிய பங்களிப்புகளாக அமைகின்றன.
இணைய மூலம்
பெயின்லரின் சாதனையை திரும்பி பார்க்கும் போது, இணையம் எனும் வலைப்பின்னல் உருவாகி வளர்ந்த விதத்தை தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஏனெனில், இணையம் என்னவாக, எப்படி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது பெரும்பாலானோருக்கு புரியாத புதிராக இருந்த காலத்தில், அதை ஒருங்கிணைத்து, தகவல்களை பெறும் வழியை பெயின்லர் உருவாக்கினார். அந்த வகையில் அவரது பங்களிப்பு மிகவும் விஷேசமானதாகிறது.
இணையம் உருவாகத்துவங்கிய ஆரம்ப காலத்தில் அதன் வளர்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த நிலையில், பெயின்லர் சரியான இடத்தில் சரியான நேரத்தில் வந்தவராக, இணையத்தின் தன்மையை புரிந்து கொண்டு செயல்பட்டவராக விளங்குகிறார்.
இத்தனைக்கும் பெயின்லர் இணையத்திற்கோ, கம்ப்யூட்டர் துறைக்கோ நேரடியாக வந்தவர் இல்லை. ரசாயனம் தான் அவரது துறையாக இருந்த நிலையில் காலம் அவரை இணையத்தை நோக்கி அழைத்து வந்தது.
பிறப்பும் வளர்ப்பும்
பெயின்லர், அமெரிக்காவின் விர்ஜினியாவில் 1932ம் ஆண்டு பிறந்தார். அவரது குடும்பத்தில் இருந்து கல்லூரிக்குச் சென்று படிக்கும் முதல் நபராக அவர் விளங்கினார். சிறு வயதில் இயற்கை சார்ந்த விஷயங்களிலும், அதன் நீட்சியாக அறிவியலிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதே நேரத்தில் கலைகளிலும் ஆர்வம் இருந்தது. விளம்பர வடிவமைப்பில் ஊக்கத்தொகை பெற்றவர் அது தொடர்பான படிப்பிற்கான அனுமதி கிடைக்காததால் ரசாயன பாடத்தை எடுத்து படித்தார்.
கல்லூரி காலத்தில் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே படித்தார். இரண்டாம் ஆண்டின் போது அவருக்கு கல்லூரி நூலகத்திலேயே உதவியாளராக வேலை கிடைத்தது. பின்னர், உயிரி ரசாயனத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பிஎச்டி படித்துக்கொண்டிருந்த போது கிடைத்த ஊக்கத்தொகை போதுமானதாக இல்லாததால், ஒராண்டு வேலை பார்த்து கொஞ்சம் பணம் சேர்த்துக்கொள்ள விரும்பினார். இந்த நிலையில் தான் மியாமி வேலைவாய்ப்பு முகாமில் வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதை பார்த்தார். அவற்றில் இருந்து கெமிக்கல் அப்ஸ்டிராக்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
தகவல் சேகரிப்பு
இந்நிறுவனத்தில் அவருக்கான வேலை தகவல் சார்ந்ததாக இருந்தது. ரசாயனத்துறை தொடர்பான தகவல் பட்டியலை தயாரிக்கும் பணிக்கான எடிட்டராக அவர் பணியாற்றினார். ஒவ்வொரு முறை பரிசோதனை மேற்கொள்ளப்படும் போதும், அதற்கு முன்னர் அதே போன்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதை தேடிப்பார்த்து உறுதி செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது.
இதற்காக ஆய்வறிக்கைகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அலசி ஆராய்ந்து தகவல் சேகரிக்க வேண்டும். கட்டுரைகளை வாசித்து, அதன் சாரம்சத்தை சிறிய அட்டைகளில் தொகுத்து எழுதி, பட்டியலிடும் பணியை பெயின்லர் செய்து வந்தார்.
இந்தப் பணிகள் எல்லாமே கம்ப்யூட்டர் உதவி இல்லாமலே செய்யப்பட்டு வந்தது. நிறுவனம் இவற்றை தானியங்கிமயமாக்க விரும்பினாலும், பொருத்தமான மென்பொருளோ, கம்ப்யூட்டர் வசதியோ இல்லை. இந்த நிலையில் தான், கலிபோர்னியாவின் ஸ்டார்ன்போர்டு ஆய்வு மையத்தில் (SRI), தகவல் வல்லுனர்களை ஆய்வாளர்களுடன் இணைக்கும் ஒரு குழு உருவாக்கப்பட்டிருப்பதை ரசாயனத்துறை சஞ்சிகை ஒன்றில் படித்து தெரிந்து கொண்டார்.
அப்போது ஓஹையோவில் இருந்தவர், இந்த ஆய்வு மையத்தில் பணியாற்ற விரும்பி, கடிதம் மூலம் தொடர்பு கொண்டார். அவரை பணிக்கு அமர்த்திக்கொள்ள சம்மதம் என்றாலும், இப்போதைக்கு வேலைவாய்ப்பு இல்லை என பதில் வந்தது. அவரும் அது பற்றி கவலைப்படாமல், தோழிகளோடு ஐரோப்பிய பயணம் சென்று விட்டார். இதனிடையே, ஸ்டான்போர்டு ஆய்வு மையத்தில் இருந்து வேலைக்கு சேருமாறு அழைப்பும் வந்து சேர்ந்தது. சுற்றுப்பயணம் முடிந்து வந்த கையோடு அங்கு பணிக்குச்சேர்ந்தார்.
இணைய பயணம்
அவரது இணைய பங்களிப்பு இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. 1960-களில் பெயின்லர் இணைந்த போது, ஸ்டான்போர்டு ஆய்வு மையம் பலவிதமான ஆய்வுகளில் ஈடுபட்டுருந்தது. அமெரிக்க அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் ஆய்வுப் பணியை மையம் மேற்கொண்டது.
பெயின்லர் பணியாற்றிய குழு, ஆய்வு கட்டுரைகளில் இருந்து தேவையான தகவல்களை திரட்டி தொகுத்தளிக்கும் பணியை செய்தது. இந்த தகவல்களும் சிறிய அட்டைகளில் எழுதி வழங்கப்பட்டன. இந்த பணிகளும் கம்ப்யூட்டர்மயமாக்கப் பட்டிருக்கவில்லை.
பெயின்லர் இந்த மையத்தில் மெல்ல நிலைப்பற்று நிர்வாகி எனும் நிலைக்கு உயர்ந்தார். அப்போது தீப்பிடிக்காத ரசாயனங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது, பெயினர்ல் கம்ப்யூட்டர் உதவியை நாட தீர்மானித்தார். ஜெனரல் எலெக்டிர் நிறுவனத்தின் நேர பகிர்வு கம்ப்யூட்டரில், புரோகிராமர்கள் உதவியோடு, தகவல்களை தேடுவதற்கான புத்தகப் பட்டியல் அமைப்பை உருவாக்கினார்.
முன்னோடி அறிமுகம்
இந்த காலகட்டத்தில் தான், அவர் டோக் எங்கல்பர்ட்டை (Doug Engelbart) சந்தித்தார். கம்ப்யூட்டருடன் தொடர்பு கொள்வதை எளிதாக்கிய மவுஸ் சாதனம், கம்ப்யூட்டருக்கான வரைகலை இடைமுகத்தின் அடிப்படை உள்ளிட்ட பங்களிப்புக்கு சொந்தக்காரரான எங்கல்பர்ட் ஸ்டான்போர்டு மையத்தில், ஆக்மண்டேஷன் ரிசர்ச் செண்டர் எனும் ஆய்வு பிரிவை நடத்தி வந்தார்.
அர்பாநெட்டின் மூல அமைப்பான அர்பாவின் நிதியை எதிர்பார்த்து நெட்வொர்க் இன்பர்மேஷன் செண்டர் எனும் வலைப்பின்னல் தகவல் மையத்திற்கான ஒப்பந்ததை பெறும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.
கம்ப்யூட்டர் முன்னோடிகளில் ஒருவரான எங்கல்பர்ட், ஆன்லைன் சிஸ்டம் (oN-Line System) எனும் புதுமையான கம்ப்யூட்டர் அமைப்பையும் உருவாக்கியிருந்தார்.
அந்த கால கம்ப்யூட்டர்களில் இந்த அமைப்பை பெரும் பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த கம்ப்யூட்டரில் புரோகிராமிங் எழுத முடிந்தது, வரி வடிவத்தை திருத்த முடிந்தது, வரைகலையை பயன்பாட்டுடன், தொலைசந்திப்பு, ஹைபர்டெக்ஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் இருந்தன. இதில் ஆவணங்களை உருவாக்க முடிந்தது, இவற்றோடு மவுஸும் இருந்தது.
இந்த கம்ப்யூட்டரை தான், வலைப்பின்னல் தகவல் மையத்திற்கு எங்கல்பர்ட் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார். எம்ங்கல்பர்ட்டின் கம்ப்யூட்டரை பார்த்து வியந்து போன பெய்ன்லர், இந்த திட்டத்தில் பணியாற்ற விரும்பி, தனக்கு இதில் வேலை இருக்குமா? என அவரிடம் கேட்டுப்பார்த்தார்.
ஆனால், அந்த நேரத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாததால் அதை அப்படியே மறந்துவிட்டார். சில மாதங்கள் கழித்து எங்கல்பர்ட்டே தேடி வந்து பெயின்லரிடம் ‘இப்போது வேலை இருக்கிறது வர சம்மதமா’ எனக் கேட்டார்.
வலை கையேடு
என்ன வேலை எனும் கேள்விக்கு, அர்பாநெட்டிற்கான வளங்கள் கையேட்டை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். வளங்கள் கையேடு என்றால் என்ன என்று அவர் அடுத்த கேள்வி கேட்ட போது எங்கல்பர்ட் எனக்கேத்தெரியாது, ஆனால், அர்பாநெட்டிற்கு ஒரு கையேடு தேவை, என்று மட்டும் தெரியும் என பதில் அளித்தார். இந்த கையேடு ஆறு வாரங்களில் தேவை என்றும் தெரிவித்தார். பெயின்லரும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
இப்படி தான் இணையத்துடனான அவரது உறவு ஆரம்பமானது. அர்பாநெட்டுக்கும், அதிலிருந்து உருவாக இருந்த இணையத்திற்குமான முதன்மை தகவல் மையமாக வலைப்பின்னல் தகவல் மையம் அமைந்திருந்தது.
1972ல் வாஷிங்டன்னில் நடைபெற்ற கம்ப்யூட்டர் தகவல் தொடர்பு முதல் சர்வதேச மாநாட்டில் அர்பாநெட்டின் தகவல் மையம் காட்சிக்கு வைக்கப்பட்டது. இணையத்தின் முதல் பொது அறிமுகமாகவும் இது அமைந்தது.
காகித பரிமாற்றம்
இந்த மாநாட்டிற்காக 'அர்பாநெட்' வளங்கள் கையேடு உருவாக்கப்பட்டது. புரியும் வகையில் கூற வேண்டும் என்றால், அர்பாநெட்டுக்கான தொலைபேசி கையேடு போன்ற புத்தகம் என வைத்துக் கொள்ளலாம். இந்த கையேடு உருவாகிய விதத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் இப்போது புரிந்து கொள்வது கடினம் தான். இந்த செயல்முறையை பெயின்லரே விரிவாக விவரித்திருக்கிறார்.
1972ல், இணையம் (அர்பாநெட்) என்பது 30 முனைகளைக் கொண்ட வலைப்பின்னலாக இருந்தது. முனை என்பதை இணைய வலைப்பின்னலில் இணைந்த கம்ப்யூட்டர் என கொள்ளலாம். இந்த கம்ப்யூட்டருக்கு பின் பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வு அமைப்புகள் இருக்கலாம். இவை பெரும்பாலும் அமெரிக்காவில் தான் அமைந்திருந்தன.
அர்பாநெட் பின்னலில் இணைந்திருந்தவர்கள், அது பற்றி எத்தகைய எண்ணம் கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. முக்கியமாக அதன் பயன்பாட்டை முழுமையாக உணர்ந்திருந்தனரா என்றும் தெரியவில்லை. ஏனெனில், அப்போது தகவல் பரிமாற்றத்திற்கான இ-மெயில் எனும் நுட்பம் இன்னமும் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. கோப்பு பரிமாற்றத்திற்கான எப்டிபி முறையும் அறிமுகம் ஆகவில்லை. இத்தகைய சூழலில் ஆய்வாளர்கள் தங்கள் தேவைக்கும், புரிதலுக்கும் ஏற்ப இந்த வலைப்பின்னலை பயன்படுத்தியிருக்கலாம்.
ஆரம்ப இணையம் பற்றிய முழு சித்திரம் இதுவல்ல என்றாலும், இணையம் என்பது இன்னமும் முழுவீச்சில் உருவாகியிராத ஆரம்ப காலத்தில், புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பம் என்ற முறையில் அதைச்சுற்றி உண்டான குழப்பம் மற்றும் புதுமையாக்க தன்மையை மட்டுமே இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பின்னணியில், அர்பாநெட்டுக்கான கையேட்டின் தேவையும், முக்கியத்துவத்தையும் ஒருவரால் தெளிவாக புரிந்து கொண்டிருக்க முடியுமா என்றுத்தெரியவில்லை. இந்த விதத்தில் தான் பெயின்லர் முன்னோடியாகிறார். ஏனெனில், அப்போதைய இணையத்தின் தன்மையை நன்றாக உள்வாங்கி கொண்ட நிலையில், அவர் கையேட்டை உருவாக்கினார்.
இணைய தகவல்கள்
அடிப்படையில் இந்த கையேடு, இணையத்தில் இணைந்திருந்த ஒவ்வொரு மையம் பற்றியும், அவற்றின் செயல்பாடு பற்றிய தகவல்களையும் கொண்டிருந்தது. ஆக, இணைய உறுப்பினர்களால், வலைப்பின்னலில் உள்ள மற்றவர்களை அறிந்து கொள்ளவும், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.
ஆனால், இந்தத் தகவல்களை திரட்ட பெயின்லர் மெனக்கெட வேண்டியிருந்தது. இணையத்தில் உள்ள ஒவ்வொரு முனையின் பின்னே உள்ள அமைப்பும், தங்கள் இணைய திட்டங்கள் பற்றிய தகவல்களை கையேட்டை உருவாக்குவதற்காக தகவல் மையத்திடம் அளிக்க வேண்டும்.
ஒரு சில அமைப்புகள் தகவல்களை அளித்தன. மற்ற அமைப்புகளிடம் இருந்து தகவல்களை திரட்ட வேண்டியிருந்தது. ஒவ்வொரு அமைப்பிலும் தகவல்களை பெற இரண்டுவிதமான நிர்வாகிகளிடம் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது.
டொமைன் முகவரி
ஆனால், கையேடு உருவான போது, இணையத்தை இன்னும் திறம்பட பயன்படுத்துவதற்கான வழியாக அது அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, அர்பாநெட்டில் இணைந்துள்ளவர்களின் தொலைபேசி முகவரி அடங்கிய பட்டியலும் தயார் செய்யப்பட்டது. இணையத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தகவல் சேகரிப்பு ஆரம்பத்தில் பெருமளவு காகித பரிமாற்றமாக இருந்தது என்பது தான் முரண் நகையானது. பின்னர் வன்தட்டுகள் பயன்படுத்தப்பட்டு மெல்லா எல்லாம் இணைய பரிமாற்ற முறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அர்பாநெட் கையேடு மட்டும் அல்லாது, இணைய பின்னல் தொடர்பான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் மையமாகவும் வலைப்பின்னல் தகவல் மையம் செயல்பட்டது. கோரிக்கைக்கு ஏற்ப பதில் சொல்லும் செயல்முறையையும் இந்த மையத்திற்காக பெயின்லர் உருவாக்கினார். ஒருவிதத்தில் இன்றைய நவீன தேடியந்திரங்களின் மூலங்களில் இதுவும் ஒன்று என கருதலாம்.
அர்பாநெட் கையேட்டையும், தொலைபேசி பட்டியலையும் உருவாக்கியதை அடுத்து, வலைப்பின்னலில் உள்ள ஒவ்வொரு முனையம் பற்றிய தகவலை அளிக்கும் கையேட்டையும் உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாக டாட்.காம் போன்ற டொமைன் முகவரி முறையை உருவானது.
இணைய புகழரங்கு
அர்பாநெட் கையேடு உருவான காலத்தில், இணைய பின்னல் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றிய தகவல்களையும் பெயின்லர் பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலும் நள்ளிரவு நேரத்தில் இணைய பின்னல் வாயிலாக மற்றவர்களோடு தொடர்பு கொண்டு உரையாடுவோம் என்று கூறியிருப்பவர், நேரில் பார்த்திராத பலரை வலைப்பின்னலில் நண்பர்களாக்கி கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இ-மெயில் அறிமுகமான பிறகு, வலைப்பின்னல் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்துவங்கிய விதத்தையும் அவர் விவரித்திருக்கிறார். இதனிடையே, ஆர்பாநெட் டிசிபி எனச் சொல்லப்படும் தொழில்நுட்ப படிமுறைக்கு மாறிய செயல்முறையிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். தொடர்ந்து வலைப்பின்னல் மையத்தின் இயக்குனராக 1986ல் பதவி உயர்வு பெற்றவர், 1989ல் இதில் இருந்து விலகி ஸ்டெர்லிங் சாப்ட்வேர் எனும் நிறுவனத்திற்காக பணியாற்றத்துவங்கினார்.
2012ம் ஆண்டில் இணைய முன்னோடிகளின் வரிசையில் இணைய புகழரங்கில் சேர்க்கப்பட்டார். கம்ப்யூட்டர் அருங்காட்சியகத்தின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த அருங்காட்சியத்திடம் இணைய வரலாறு தொடர்பான ஆவணங்களை பெட்டி பெட்டியாக ஒப்படைத்திருக்கிறார். இணைய உருவாக்கத்தில் முக்கிய காலகட்டத்தில் அதன் மையத்தில் இருந்தவர் என்ற முறையில் அதன் வரலாற்றுக்கு சாட்சியாக நிற்கும் ஆவணங்கள் அவரது வசம் இருந்தன. எல்லாமே வலைப்பின்னல் மையத்திற்காக சேகரித்தவை. ஒரு விதத்தில் இணைய வரலாற்றை தெளிவாக அறிந்து கொள்ள பெயின்லர் துணை நிற்கிறார்.