கம்ப்யூட்டர் பெண்கள் 15 - ‘இணையத்தின் தாய்’ ரேடியா பெர்ல்மன்!
இணையத்தின் தந்தை என பலர் போற்றப்படும் நிலையில், அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானி ரேடியா பெர்ல்மன் இணையத்தின் தாய் எனும் அடைமொழிக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
கம்ப்யூட்டர் வரலாற்றில் பர்சனல் கம்ப்யூட்டர்களின் யுகம் அரும்பத்துவங்குவதற்கு முன்பாகவே கம்ப்யூட்டர்களை இணைத்து வலைப்பின்னலை உருவாக்கும் முயற்சி துவங்கிவிட்டது.
இன்று வலைப்பின்னல்களின் வலைப்பின்னலாக அறியப்படும் இணையத்திற்கான மூல விதை 1969ல் அர்பாநெட் வடிவில் விதைக்கப்பட்டதும், தொடர்ந்து இணையம் படிப்படியாக வளர்ந்து 1991ல் வைய விரிவு வலையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்ததும் வரலாறு.
கம்ப்யூட்டர் வளர்ச்சியிலும், அவற்றை இயக்குவதற்கான புரோகிராமிங் மொழிகள் உருவாக்கத்திலும் பெண்கள் முக்கியப் பங்காற்றியது போலவே, இணையத்தின் வளர்ச்சியிலும் பெண்கள் முத்திரை பதித்திருக்கின்றனர். இந்த வரிசையில் தான் ரேடியா பெர்ல்மன் (Radia Perlman) வருகிறார்.
வலைப்பின்னல்களுக்குள் தரவுகள் பரிமாற்றத்தை நெறிப்படுத்தும் எஸ்டிபி எனும் தொழில்நுட்ப வழிமுறையை உருவாக்கியதற்காக இணையத்தின் தாய் என வர்ணிக்கப்படுவதில் இருந்தே அவரது பங்களிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.
தன்னடக்கம்
இணையத்தின் தாய் என பரவலாக அழைக்கப்பட்டாலும், இப்படி ஒரு மகுடம் சூட்டப்படுவதை விரும்பாதவராகவே பெர்ல்மன் இருக்கிறார். சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்ததால் தற்செயலாக எல்லாம் நிகழ்ந்தது என தனது கண்டுபிடிப்பு பற்றி தன்னடக்கத்தோடு குறிப்பிடுபவர், இணையம் என்பது எந்த ஒற்றை மனிதரும் அல்ல என்பதையும் குறிப்பிடுகிறார்.
ரேடியா சொல்வது உண்மை தான் என்றாலும், இணையத்தின் வளர்ச்சியில் அவரது இடமும், பங்களிப்பும் தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது. மேலும், குழந்தைகளுக்கான கம்ப்யூட்டர் கற்றுத்தரும் புரோகிராமிங் மொழியை உருவாக்கியதும் அவரது சாதனையாக அமைகிறது. 80க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை பெற்றிருப்பவர், வலைப்பின்னல் தொழில்நுட்பம் தொடர்பான பாலபாடமாக கருதப்படும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
இணைய வலைப்பின்னலின் அடிப்படையை தாங்கி நிற்கும் அல்கோரிதமை எழுதியவர், இந்த அல்கோரிதம் தொடர்பாக ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார். அந்த வகையிலும் பெர்ல்மன் தனித்து நிற்கிறார்.
இளமைக்காலம்
பெர்ல்மன் அமெரிக்காவின் விர்ஜினியாவில் 1951ல் பிறந்தார். அவரது தந்தை பொறியாளராகவும், தாய் கம்ப்யூட்டர் புரோகிராமராகவும் இருந்தார். கல்வி சூழலில் வளர்ந்ததால் சிறு வயதில் பெர்ல்மன், கணிதத்திலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். குறிப்பாக தர்கம் சார்ந்த புதிர்களை விடுவிப்பதில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
1960-களின் இறுதியில் அவர் எம்.ஐ.டி பல்கலையில் பட்டப்படிப்பிற்காக சேர்ந்த போது கணிதத்தில் ஆர்வம் கொண்டிருந்தாரேத் தவிர கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் ஆர்வம் கொள்ளவில்லை. அதற்குக் காரணம், உயர் நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது கம்ப்யூட்டர் கற்பது தொடர்பாக ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான்.
பெர்ல்மனின் ஆசிரியை பள்ளி முடிந்ததும் தனது வாகனத்தில் அவரை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்கு அழைத்துச்சென்றார். ஆசிரியரின் இந்த அன்பையும், அக்கரையையும் மீறி கம்ப்யூட்டர் வகுப்பில் பெர்ல்மனுக்கு மிரட்சியாக அனுபவமே ஏற்பட்டது. அங்கிருந்த மாணவர்கள் எல்லாம் ஏழு வயதிலேயே ஹாம் ரேடியோ உருவாக்கினோம் என்பது போல பேசிக்கொண்டிருக்க பெர்ல்மன் ஹாம் ரேடியோ பற்றி கேள்விபட்டது இல்லை என்பதால் ஒடுங்கிப்போனார்.
இந்த அனுபவத்தை அடுத்து அவர் புரோகிராமிங் பக்கமே போகவில்லை. ஆனால், காலம் அவரை புரோகிராமிங்கை நோக்கி அழைத்துச்சென்றது. பல்கலையில் படித்துக்கொண்டிருந்த போது, இயற்பியல் ஆய்வு உதவியாளர் ஒருவர் அவரிடம் தனக்கான புரோகிராமை எழுதித்தருமாறு கேட்டிருக்கிறார்.
ஆனால், எனக்கு புரோகிராமிங் தெரியாதே என பெர்ல்மன் பதில் அளித்த போது, உதவியாளர் அதனால் தான் உன்னிடம் கேட்கிறேன் எனக் கூறியிருக்கிறார். எப்படியும் என்னால் ஊதியம் தர முடியாது என்பதால் வேறு ஒருவரை பணிக்கு அமர்த்திக்கொள்ள முடியாது என்றவர் எப்படியும் நீ புத்திசாலி என்பதால் புரோகிராமிங் கற்றுக்கொள்வாய் எனக் கூறியிருக்கிறார்.
புரோகிராமிங் சவால்
இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டவர் புரோகிராமிங் கற்றுக்கொள்ளத்துவங்கினார். அவரது வாழ்க்கை பாதையும் மாறத்துவங்கியது. முதுகலை படிப்பின் போது, புரோகிராமிங் தொடர்பான மற்றொரு வாய்ப்பு தேடி வந்தது. எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம், குழைந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கோடிங் கற்றுத்தருவதற்கான புரோகிராமிங் மொழியை தொடர்பான பணியை அவரிடம் ஒப்படைத்தது.
பெர்ல்மனும் மிகுந்த ஆர்வத்தோடு குழந்தைகள் கோடிங் அடிப்படைகளை புரிந்து கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்கத்துவங்கினார். முதலில் பட்டன் வடிவில் கட்டளைகளை உருவாக்கியவர் அவற்றை குழந்தைகள் புரிந்து கொள்வதில் சிக்கல் நிலவியதால், பெட்டிகள் முறையை பின்பற்றினார். இதன் பயனாக டார்டிஸ் (TORTIS) எனும் புரோகிராமிங் மொழியை உருவாக்கினார். இதன் பயனாக குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுத்தரும் புதிய பிரிவு உண்டானது.
குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுத்தருவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாலும், குழந்தைகளுக்கான ஆக்கத்தில் ஈடுபட்டால் ஒரு கண்டுபிடிப்பாளராக தன்னை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள் எனும் எண்ணத்தில் பெர்ல்மன் தனது பயணத்தின் திசையை மாற்றிக்கொண்டார்.
பிபிஎன் எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிக்குச்சேர்ந்தவர் அங்கிருந்து டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு மாறினார். டிஜிட்டல் எக்யூப்மெண்ட் நிறுவனம் அப்போது கம்ப்யூட்டர் வலைப்பின்னல் சார்ந்த பணிகளில் ஈடுப்பட்டிருந்தது.
கம்ப்யூட்டர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு நம்பகமான வழியை நிறுவனம் தேடிக்கொண்டிருந்தது. இது தொடர்பான பணியை தான் பெர்ல்லினிடம் ஒப்படைத்தது. இதனிடையே, பத்தாண்டு இடைவெளிக்கு பிறகு அவர் கம்ப்யூட்டர் அறிவியலில் டாக்டர் பட்டத்தையும் முடித்திருந்தார். இது அவருக்குக் கூடுதல் நம்பிக்கையை அளித்திருந்தது.
வரலாற்று பணி
கம்ப்யூட்டர் வரலாற்றில் சரியான காலத்தில் சரியான வேலையாக டிஜிட்டல் நிறுவன பணி அமைந்தது என பெர்ல்மன் கூறியிருக்கிறார். அவருக்கு ஏற்கனவே கம்ப்யூட்டர் வலைப்பின்னல் உருவாக்கம் தொடர்பாக அனுபவம் இருந்தது. கம்ப்யூட்டர் பின்னல்களை இணைக்கும் வழிமுறைகளை உருவாக்கும் பணியில் அவர் அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த இணையத்தின் ஆரம்ப வடிவமான அர்பாநெட் வலைப்பின்னல் அமைப்பின் கட்டமைப்பு மீது ஈர்ப்பு கொண்டிருந்தார்.
அர்பாநெட் வலைப்பின்னலில் கம்ப்யூட்டர்களை இணைத்து தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கான அல்கோரிதம் பலவீனமாக இருப்பதையும் அவர் கவனித்தார். வலைப்பின்னலில் ஏதேனும் தவறான தகவல் நுழைந்தால் அதன் செயல்பாடு பாதிக்கப்படும் நிலை இருந்தது. ஒரு வலைப்பின்னல் இவ்விதம் இருக்கக் கூடாது என நினைத்தார்.
ஒரு கம்ப்யூட்டர் செயலிழந்தால் அதை மீண்டும் இயக்கலாம், ஆனால் ஒரு வலைப்பின்னல் செயலிழந்தால் அதை இயக்குவது கடினம் என உணர்ந்த பெர்ல்மன், கம்ப்யூட்டர் வலைப்பின்னல்கள் இப்படி செயலிழக்கும் வகையில் இருக்கலாகாது என்றும் நினைத்தார்.
டிஜிட்டல் நிறுவனம், வர்த்தக நிறுவனங்களுக்கு எதர்நெட் எனும் தனிப்பட்ட வலைப்பின்னலை விற்பனை செய்து கொண்டிருந்தது. ஆனால், இந்த வலைப்பின்னல்கள் பரஸ்பரம் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருப்பதையும் அவர் கவனித்தார். வலைப்பின்னல்களுக்கு இடையிலான தரவுகள் பகிர்வு வழிமுறையை உருவாக்குவதன் மூலம் இதற்குத் தீர்வு காணலாம் என அவர் நம்பினார்.
வலைப்பின்னல்களை இணைக்கும் ஒரு மாய பெட்டியை உருவாக்கினால் இதை சாத்தியமாக்கலாம் என்பது பெர்ல்மனின் எண்ணமாக இருந்தது. இத்தகைய பெட்டியை உருவாக்குமாறு அவரது உயர் அதிகாரியும் கேட்டுக்கொண்ட்டார்.
அல்கோரிதம் சாதனை
ஆனால், வலைப்பின்னல் இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கான வழிமுறையை உருவாக்குவது எளிதானதாக இருக்கவில்லை. வலைப்பின்னல்களுக்கு இடையே தரவுகள் சிறு சிறு பாக்கெட்களாக பயணிக்கின்றன. நெடுஞ்சாலையில் செல்லும் கார்கள் போல இவற்றை கருதலாம். ஆனால் என்ன பிரச்சனை என்றால், இடையே வளையம் ஏதேனும் வந்தால், தரவுகள் தங்கள் பாதையை மறந்து அந்த வளையத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் தான் பெர்ல்மன் ஸ்பேனிங் டிரி புரோடோகால் (எஸ்.டி.பி) எனப்படும் அல்கோரிதமை உருவாக்கினார். இதற்கான உந்துதலை இயற்கையில் இருந்து பெற்றுக்கொண்டு ஒரு மரத்தின் வேர்கள் செயல்படுவது போல, இந்த அல்கோரிதமை அமைந்திருந்தார். அதாவது, தரவுகள் பயணத்திற்கான பாதை ஒரு நெடுஞ்சாலை போல் அல்லாமல் மரத்தின் வேர் பின்னல் அடிப்படையில் அமைந்திருந்தது.
வலைப்பின்னலில் ஓரிடத்தில் இருந்து தரவுகள் இன்னொரு இடத்திற்கு செல்வதற்கான குறைந்த தொலைவு பாதையை எப்போதும் இந்த அல்கோரிதம் கணக்கிட்டு கொடுத்தது.
இந்த அல்கோரிதம் செயல்பாடு ஒரு மரத்தில், ஒரு இலையில் இருந்து வேருக்கான பாதை குறைந்த தொலைவு கொண்டிருப்பதையும் அது எப்போதும் பின்னோக்கியே அமைந்திருப்பதையும் ஒத்திருந்தது. இந்த அல்கோரிதமே 1980-களில் இணையத்தின் வளர்சிக்கு முதுகெலும்பாக அமைந்தது. இதை இணைய போக்குவரத்திற்கான அடிப்படை விதிகள் என்றும் கருதலாம்.
எந்த சூழலிலும், எந்த இடத்தில் இருந்து கோரிக்கை வந்தாலும், வலைப்பின்னல் இருந்து தரவுகள் அளிக்கப்படும் வகையில் வலைப்பின்னல் ஏற்ற நிலையில் இருப்பதை அல்கோரிதம் உறுதி செய்கிறது. இதற்காகவே அவர் இணையத்தின் தாய் என பாராட்டப்படுகிறார்.
இதன் தொடர்ச்சியாக பெர்ல்மன், வலைப்பின்னல் அடிப்படைகளை விளக்கும் இண்டர்கனெக்ஷன்ஸ் எனும் புத்தகத்தை 1992ல் எழுதினார். பின்னர் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் வலைப்பின்னல் பாதுகாப்பு தொடர்பாகவும் முக்கியப் பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், பல கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற்றுள்ளார். இணைய வளர்ச்சியில் பங்களிப்புக்காக இணைய புகழரங்கிலும் இடம்பெற்றிருக்கிறார்.