Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

கம்ப்யூட்டர் பெண்கள் 16 - ஸ்டீவ் ஜாப்சுக்கு ஊக்கம் அளித்த முன்னோடி அடிலி கோல்ட்பர்க்!

கம்ப்யூட்டர் என்பது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் எனும் தொலைநோக்கான பார்வைக்காகவும், அதை நிறைவேற்றும் வகையிலான மென்பொருள் அமசங்களை உருவாக்கியதில் முக்கிய பங்களிப்பு செலுத்தியதற்காகவும் கோல்ட்பர்க் கொண்டாடப்பட வேண்டியவராகிறார்.

கம்ப்யூட்டர் பெண்கள் 16 - ஸ்டீவ் ஜாப்சுக்கு ஊக்கம் அளித்த முன்னோடி அடிலி கோல்ட்பர்க்!

Friday May 13, 2022 , 7 min Read

ஒருவிதத்தில் இந்த தொடர் கம்ப்யூட்டர்களின் மாற்று வரலாறாக அமைந்திருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். கம்ப்யூட்டர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய பெண்களின் சாதனைகளை விவரிப்பதால், இவ்விதம் அமைகிறது.

கம்ப்யூட்டர் வளர்ச்சியில் அதிகம் பேசப்படாத சாதனை பெண்களை விவரிக்கும் இந்த தொடரில், இப்போது பர்சனல் கம்ப்யூட்டர்களின் மாற்று வரலாற்றை கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

அதாவது, ஆப்பிளுக்கு பதிலாக ஜெராக்ஸ் நிறுவனம், பிசிகள் உலகில் வெற்றி பெற்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவ்வாறு நிகழ்ந்திருந்தால், ஆப்பிள் உருவாக்கிய மேகிண்டாஷ் கம்ப்யூட்டருக்கு பதில் ஜெராக்சின் கம்ப்யூட்டரை பிசி உலகின் முன்னோடி கம்ப்யூட்டராக விளங்கியிருக்கும். அதைவிட முக்கியமாக ஸ்டீவ் ஜாப்சை விட, அடிலி கோல்ட்பர்க் (Adele Goldberg) கம்ப்யூட்டர் உலகில் அதிகம் கொண்டாடப்பட்டிருப்பார்.

அடிலி

முதலில் மேக், அதன் பிறகு ஐபாட், ஐபேடு பின்னர் ஐபோன் என நவீன தொழில்நுட்ப உலகின் மைல்கல் சாதனங்களை அறிமுகம் செய்த ஸ்டீவ் ஜாப்சின் திறனையோ, தொழில்நுட்ப தீர்கதரிசனத்தையோ எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்றாலும், அடிலி கோல்ட்பர்கை முன்னிலைப்படுத்தும் வகையில் பர்சனல் கம்ப்யூட்டர் வரலாறு அமைந்திருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்ப்பதில் தவறில்லை. ஏனெனில், ஒருவிதத்தில் ஸ்டீவ் ஜாப்சுக்கே ஊக்கம் அளித்த முன்னோடியா கோல்ட்பர்க் விளங்குகிறார்.

ஆரம்ப காலம்

ஆம், ஆப்பிள் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸின் வெற்றிக்கதையை அறிந்தவர்களுக்கு, அந்த கதையில் அடிக்குறிப்பாக அடிலி கோல்ட்பர்க் பெயர் தவிர்க்க இயலாமல் இருப்பதை கவனித்திருக்கலாம். ஆப்பிளின் ஆரம்ப கால கம்ப்யூட்டர்களில் முதல் முதலில் இடம் பெற்ற மவுஸ் வழி நகர்த்தல் மற்றும் அதற்கு வழி வகுத்த வரைகலை சார்ந்த இடைமுகத்தை ஜாப்ஸ், கோல்ட்பர்க் பணியாற்றிய ஜெராக்ஸ் ஆய்வு கூடத்தில் இருந்து தான் தெரிந்து கொண்டார் எனும் விதமாக இந்த குறிப்பு அமைகிறது.

ஆனால், கோல்ட்பர்க்கின் கம்ப்யூட்டர் உலக பங்களிப்பு இப்படி அடிக்குறிப்பாக சுருங்குவதை வரலாற்று அநீதி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், கோல்ட்பர்க் கம்ப்யூட்டர் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில் முக்கியமான பங்களிப்பை செலுத்தி அதன் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலுக்கு வழிவகுத்தார். அவர் பணியாற்றிய ஜெராக்ஸ் ஆய்வுக்கூடம் அந்த காலத்தில் கம்ப்யூட்டர் ஆய்வில் முக்கிய மையமாக விளங்கியது.

உண்மையில் ஜெராக்ஸ் ஆய்வகக் கண்டுபிடிப்புகளே பர்சனல் கம்ப்யூட்டர் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பவையாக அமைந்தன. இதற்குக் காரணமான கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளில் ஒருவராக அடிலி கோல்ட்பர்க் அறியப்படுகிறார்.

முன்னோடி கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஆலன் கே உள்ளிட்டோருடன் இணைந்து கோல்ட்பர்க் உருவாக்கிய ஸ்மால்டாக் -80 (Smalltalk-80) புரோகிராமிங் மொழியே பிசிகள் பொதுவான பயன்பாட்டிற்கு வருவதற்கான அடித்தளமாக அமைந்தது.

புதிய பாதை

கம்ப்யூட்டருக்கு புரியக்கூடிய மொழியில் அவற்றுடன் தொடர்பு கொண்டு ஆணைத் தொடர்களை எழுத உதவும் பேசிக் உள்ளிட்ட புரோகிராமிங் மொழிகள் உருவாக்கப்பட்டதையும், இந்த மொழிகள் உருவாக்கத்தில் பெரும்பாலும் பெண் கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் முக்கியப் பங்கு வகித்ததையும் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த வரிசையில் தான், ஸ்மால் டாக் மொழியை உருவாக்கிய கோல்ட்பர்க் வருகிறார்.

இதற்கு முன் அறிமுகம் ஆகியிருந்த ’பேசிக்’ போன்ற புரோகிராமிங் மொழிகளில் இருந்து ஸ்மால் டாக் பெரும் முன்னேற்றமாக அமைந்திருந்தது. மனித –கம்ப்யூட்டர் தொடர்பை மையமாகக் கொண்ட புதிய கம்ப்யூட்டர் உலகின் அடிநாதமாக உருவாக்கப்பட்டது என ஸ்மால்டாக் தொடர்பான விக்கிபீடியா கட்டுரை இதை வர்ணிக்கிறது.

தொழில்நுட்பம் சார்ந்த சிக்கலான வார்த்தைகள் எல்லாம் இல்லாமல் விளக்குவது என்றால், இப்போது பர்சனல் கம்ப்யூட்டர்களில் மிக இயல்பாக சாத்தியமாகும் பல அடிப்படையான விஷயங்களுக்கு அடிப்படையாக விளங்கும் வகையில் உருவாக்கப்பட்ட புரோகிராமிங் மொழி என இதைக் குறிப்பிடலாம். வரி வடிவம் சார்ந்தே கம்ப்யூட்டருடன் தொடர்பு கொண்ட நிலையை மாற்றி, வரைகலை மூலமாக கம்ப்யூட்டரை இயக்குவதை சாத்தியமாக்கிய மொழியாகவும் இதைக் கொள்ளலாம்.

அதாவது, கம்ப்யூட்டரில் படம் வரைவதும், அசையும் சித்திரங்களை உருவாகுவதும் இதன் பிறகே சாத்தியமானது.

smalltalk

ஜெராக்ஸ் அத்தியாயம்

உண்மையில், இந்த பெருமை எல்லாம் ஜெராக்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் பிரிவுக்கு உரியது. நகலெடுக்கும் சாதனங்களுக்காக அறியப்படும் ஜெராக்ஸ் நிறுவனம் 1970 களில் கம்ப்யூட்டர் சார்ந்த முக்கிய ஆய்விலும் ஈடுபட்டிருந்தது.

உலகின் முதல் பர்சனல் கம்ப்யூட்டர்களில் ஒன்றான ’ஆல்டோ’ கம்ப்யூட்டரை ஜெராக்ஸ் அறிமுகம் செய்தது. மினி கம்ப்யூட்டர் வகையைச் சேர்ந்தது என்றாலும், இது முதல் தனிநபர் கம்ப்யூட்டர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கம்ப்யூட்டரை இயக்குவதற்கான மவுஸ், அதன் மூலம் கம்ப்யூட்டர் திரையில் ஐகான்கள் வடிவில் தேவையாக இயக்கங்களை இழுப்பது போன்றவற்றை ஜெராக்ஸ் ஆல்டோ கம்ப்யூட்டர் தன்னகத்தே கொண்டிருந்தது. இந்த கம்ப்யூட்டரின் காலத்தை முந்தைய முன்னோடி தன்மையை மீறி, ஜெராக்ஸ் நிறுவனம் இதை ஆய்வு நிலையில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்குக் கொண்டு வரவில்லை என்பது இப்போது திரும்பி பார்க்கையில் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும்,

ஆப்பிள் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட ’மேகிண்டாஷ்’ கம்ப்யூட்டருக்கும், அதில் பயன்படுத்தப்பட்ட மவுஸ், வரைகலை இடைமுகம் உள்ளிட்ட பல்வேறு புதுமையான அம்சங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.

ஆம், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஜெராக்ஸ் கம்ப்யூட்டர் ஆய்வுகூடத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை பெற்ற பிறகே, பர்சனல் கம்ப்யூட்டர்களின் போக்கையே மாற்றி அமைத்த மேகிண்டாஷ் கம்ப்யூட்டரில் மவுஸ், வரைகலை இடைமுகம் உள்ளிட்ட அம்சங்களை இணைக்கும் ஊக்கம் பெற்றார் என்பது தான் இங்கே நினைவில் கொள்ள வேண்டிய கிளைக்கதை.

ஸ்டீவ் ஜாப்ஸிற்கு ஜெராக்ஸ் ஆய்வக முயற்சியை சுற்றிக்காட்டி விளக்கம் அளிக்கும் பொறுப்பை ஏற்றது, ஜெராக்ஸ் ஆய்வுக் குழுவில் முக்கிய அங்கம் வகித்த அடிலி கோல்ட்பர்க் இந்த கிளைக்கதையின் நாயகி என்பதுமே இன்னும் கூடுதலாக கவனிக்க வேண்டிய விஷயம்.

கம்ப்யூட்டர் பயன்பாடு

ஆனால், ஸ்டீவ் ஜாப்சுடனான கோல்ட்பர்கின் தொடர்பை அடிக்குறிப்பாக விட்டு விட்டு, அவரது வாழ்க்கைக் கதையை பிரதானமாக பார்ப்பதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், ஜெராக்ஸ் ஆய்வுப் பிரிவு அறிமுகம் செய்த கம்ப்யூட்டர் புதுமைகள் செயலாக்கம் பெறுவதற்கான புரோகிராமிங் மொழியை உருவாக்கியதில் கோல்ட்பர்கின் பங்கு முக்கியமானது என்பதும், அதைவிட முக்கியமாக கம்ப்யூட்டர்கள் தனிநபர் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்பதில் அவருக்கு இருந்த ஆர்வமும், தொலைநோக்கும் அவரை முன்னோடியாக போற்ற வைக்கிறது.

அடிலி கோல்ட்பர்க் (Adele Goldberg), அமெரிக்காவின் ஓஹியோ, கிளிவ்லாண்டில் 1945ல் பிறந்தவர். இரட்டை குழந்தைகளில் ஒருவராக பிறந்து வளர்ந்தது பற்றி தன்னைப்பற்றிய விரிவான பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். கோல்ட்பர்கிற்கு 11 வயது வரை அவரது குடும்பம் ஓஹியோவில் வசித்த நிலையில், அதன் பிறகு சிக்காகோ நகருக்கு குடி பெயர்ந்தது. அவரது தந்தை ஒரு பொறியாளராக இருந்தார். அவரது அம்மா கணித பட்டதாரி.

பெற்றோர்கள் தன்னை தனியே ஊக்குவித்ததும் இல்லை, அதற்காக அலட்சியம் செய்ததும் இல்லை என்று கோல்ட்பர்க் குறிப்பிட்டிருக்கிறார்.

சிக்காகோவுக்கு குடிபெயர்ந்து அங்குள்ள பள்ளியில் சேர்ந்த நிலையில், புதிய பள்ளியில் கற்றுத்தரப்பட்ட பல பாடங்களை அவர் ஓஹியோ பள்ளியிலேயே கரைத்து குடித்திருந்ததால், ஆசிரியர் பாடம் நடத்தும் போது எல்லாவற்றையும் முன்னதாகவே முடித்துவிட்டு, இதனால் ஆசிரியரின் அதிருப்திக்கு உள்ளாகி வகுப்புக்கு வெளியே நின்றிருப்பேன் என்றும் தனது பள்ளிக்காலம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

அது மட்டும் அல்ல, இரட்டை சகோதரியாக தன்னுடன் வளர்ந்த அக்கா 20 வயதில் திருமணம் செய்து கொண்ட போது, அதற்குள் ஏன் திருமணம் என கோபம் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், கோல்ட்பர்கிற்கு கல்வியிலும், குறிப்பாக கணித பாடத்திலும் ஆர்வம் இருந்தது. அதன் பயனாக மிச்சிகன் பல்கலையில் பட்டம் பெற்றார். பின்னர் சிக்ககோ பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றார். இதனிடையே ஓராண்டுக்கு மேல் ஐரோப்பிய பயணத்தையும் மேற்கொண்டார்.

அடிலி

டாக்டர் பட்டம்

கல்லூரியில் கணித பாடத்தில் பட்டம் பெற்றிருந்தார். கணிதத்துடன் கம்ப்யூட்டர் வகுப்புகளிலும் பங்கேற்றார். ஆரம்ப காலம் என்பதால் கம்ப்யூட்டர் வகுப்புகளில் நியுமரிக்கல் அனாலசிஸ் அடிப்படையில் பாடம் நடத்தப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் ஐபிஎம் கம்ப்யூட்டர்களை இயக்கும் அனுபவமும் பெற்றவர் சிக்காகோ பல்கலையில் தகவல் தொழில்நுட்ப அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றார்.

1973ல் டாக்டர் பட்டம் பெற்ற நிலையில், அதே ஆண்டு ஜெராக்ஸ் நிறுவனத்தின் ஆய்வகத்தில் பணிக்கு சேர்ந்தார். ஜெராக்ஸ் ஆய்வகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டவசமானது என கோல்ட்பர்க் கூறியுள்ளார்.

உண்மையில் இதை காலத்தின் அழைப்பு என்றும் கொள்ளலாம். ஏனெனில் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து கிடைத்த வாய்ப்பாக இது அமைந்திருந்தது. கல்வியில் கம்ப்யூட்டர் பயன்பாடு தொடர்பான ஆய்வில் ஆர்வம் கொண்டிருந்த கோல்ட்பர்கிற்கு ஜெராக்ஸ் ஆய்வகம் போன்ற இடம் தேவைப்பட்டது. ஜெராக்ஸ் ஆய்வகத்திற்கும் கோல்ட்பர்க் போன்ற ஒருவர் தேவையாக இருந்தது.

சிக்காகோ பல்கலையில் டாக்டர் பட்டத்தை சமர்பித்த போது கோல்ட்பர்க் கல்வியில் கம்ப்யூட்டர் பயன்பாடு தொடர்பாக ஆர்வம் கொண்டிருந்தார். இந்த தலைப்பில் மேற்கொண்டு ஆய்வு செய்ய விரும்புவதாக தெரிவித்து ஸ்டான்போர்டு பல்கலையில் அதற்கான வாய்ப்பையும் பெற்றிருந்தார்.

கற்பித்தலில் கம்ப்யூட்டரை பயன்படுத்துவது என்பது 1960-களில் தொலைநோக்கான சிந்தனை என்றே சொல்ல வேண்டும். அத்தகைய பார்வை கோல்ட்பர்கிடம் இருந்தது. இதனிடையே, கோல்ட்பர்க், கம்ப்யூட்டர் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகி அதன் கூட்டங்களிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

கல்வித்துறையில் கம்ப்யூட்டர் பயனாளிகளுக்கான சிறப்பு குழுவும் இந்த சங்கத்தில் இருந்தது. இதே போன்ற பயனர் குழுவை கோல்ட்பர்க் தனது பகுதியிலும் ஏற்படுத்தியிருந்தார். இந்த குழு சார்பிலான மாதாந்திர கூட்டங்களில் ஜான் ஷாக் என்பவரும் கலந்து கொண்டார். ஷாக் அப்போது ஜெராக்ஸ் ஆய்வகத்தில் கம்ப்யூட்டர் முன்னோடி ஆலன் கே (Alan Kay) தலைமையிலான குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த குழு தான், டைனமிக் புக் எனப்படும் புதுவிதமான கம்ப்யூட்டரை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தது.

டைனாபுக்

பின்னாளில் டைனாபுக் என அழைக்கப்பட்ட டைனமிக் புக், கையடக்க கம்ப்யூட்டராக அமைந்திருந்தது. அந்த காலகட்டத்தில் தான் பர்சனல் கம்ப்யூட்டர் எனும் கருத்தாக்கமே அரும்பியிருந்த நிலையில் கையடக்க கம்ப்யூட்டர் என்பது புரட்சிகரமாகவே அமைந்திருந்தது.

dynabook

அதன் காரணமாகவே பெரும்பாலானோருக்கு அதன் கருத்தாக்கமே புரியவில்லை. ஆனால், கல்வித்துறையில் கம்ப்யூட்டர் பயன்பாடு பற்றி சிந்தித்துக்கொண்டிருந்ததால், டைனாபுக்கின் கருத்தாக்கம் அவரை உற்சாகம் கொள்ள வைத்தது. இதை புரிந்து கொண்ட ஜான் ஷாக், ”ஆலன் கே உங்களை சந்திக்க விரும்புவார்,” என கோல்ட்பர்கிடம் தெரிவித்தார்.

ஷாக் கூறிய படி, கோல்ட்பர்கும் ஆலன் கேவை சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பு எல்லாவற்றை பற்றியும் சிந்திக்கும் முறையை அடியோடு மாற்றியது என கோல்ட்பர்க் கூறியிருக்கிறார்.

இன்று கம்ப்யூட்டரில் நாம் சகஜமாக பயன்படுத்தும் பல விஷயங்களைக் கொண்டு வந்த முன்னோடிகளில் ஒருவர் ஆலன் கே எனும் போது, கோல்ட்பர்க் மீதான அவரது தாக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஆலன் கேவின் தொலைநோக்கு பார்வையை உள்வாங்கிக் கொண்டு செயல்படும் திறன் பெற்றவராக கோல்ட்பர்க் விளங்கினார்.

கம்ப்யூட்டர் என்பது பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனும் கருத்தே கூட நம்ப முடியாத புதுமையாக இருந்த காலகட்டத்தில் டைனாபுக் திட்டம் எல்லோரும் கையில் எடுத்துச் செல்லக்கூடிய சொந்த கம்ப்யூட்டராக இருந்தது. கற்றலுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது மாணவர்கள் அதை தங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும் என்பது கோல்ட்பர்கின் எண்ணமாகவும் இருந்தது. இதன் காரணமாக ஆலன் கே ஆய்வு திட்டத்தில் அவர் ஊக்கத்துடன் பங்கேற்றார்.

alan kay

ஆலன் கே

எல்லோருக்கும் கம்ப்யூட்டர்

ஜெராக்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு வந்த கையடக்க கம்ப்யூட்டருக்கான மென்பொருளாக ஸ்மால்டாக் புரோகிராமிங் மொழி  அமைந்திருந்தது. இதன் ஆரம்ப வடிவங்களை ஆலன் கேவே உருவாக்கிய நிலையில், மேம்பட்ட வடிவத்தை உருவாக்கும் பொறுப்பு கோல்ட்பர்கிடம் அளிக்கப்பட்டது. இப்படி தான் ஸ்மால்டால் 80 உருவானது.

கம்ப்யூட்டரை மவுஸ் கொண்டு இயக்குவது, அதில் வரைகலையை பயன்படுத்துவது, ஐகான்களாக கம்ப்யூட்டர் இயக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட புதுமையான அம்சங்களுக்கு ஏற்ற வகையில் ஸ்மால்டாக் இருந்தது. ஸ்மால்டாக் பயன்பாட்டிற்கான விளக்க கட்டுரைகளையும் கோல்ட்பர்க் எழுதினார். இவற்றின் தொழில்நுட்ப அடிப்படைகளையும் அவர் விளக்கி புத்தகமாக வெளியிட்டார்.

இந்த புதுமையான கம்ப்யூட்டர் பயன்பாடு பற்றி கோல்ட்பர்க் மற்றும் குழுவினருக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. குறிப்பாக கோல்ட்பர்க் எல்லோரிடம் கம்ப்யூட்டரை கொண்டு சேர்க்க இது கைகொடுக்கும் என்று நம்பினார்.

ஆனால், ஜெராக்ஸ் நிறுவனமே வேறுவிதமாக நினைத்தது. இந்த திட்டத்தை ஒரு ஆய்வாக மட்டுமே அது பார்த்தது. இந்த கம்ப்யூட்டரை வர்த்தக நோக்கில் கொண்டு வருவதில் நிறுவனம் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. இந்த நிலையில் தான் இளம் ஸ்டீவ் ஜாப்ஸ், ஜெராக்ஸ் ஆய்வகத்திற்கு விஜயம் செய்தார். ஜெராக்ஸ் உருவாக்கி வந்த கம்ப்யூட்டர் தொடர்பான சிறப்பம்சங்களை கோல்ட்பர்க் தான் ஜாப்சிடன் விளக்கிக் கூறினார். துவக்கத்தில் இதற்கு அவர் உடன்படவில்லை.

ஜெராக்ஸ் கம்ப்யூட்டரை வெளி நபர்களுக்கு காண்பிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கடுமையாக வாதாடியும் ஜெராக்ஸ் நிறுவனம் அதை ஏற்க மறுத்து, ஜாப்சிற்கு காட்சி விளக்கம் அளிக்குமாறு கட்டளையிட்டது.

கம்ப்யூட்டர் முன்னோடி

இந்த காட்சி விளக்கத்திற்கு பிறகு நடந்தது கம்ப்யூட்டர் உலகம் நன்கறிந்தது. ஜெராக்ஸ் கம்ப்யூட்டரில் இருந்த ஐகான்கள், மவுஸ், வரைகலை தன்மை உள்ளிட்ட அம்சங்களோடு ஆப்பிளின் மேகிண்டாஷ் அறிமுகமாகி பர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு புதிய பாதை அமைத்துக்கொடுத்தது.

ஜெராக்ஸ் ஐடியாவை அப்படியே திருடிக்கொண்டார் என்று சொல்வது ஸ்டீவ் ஜாப்ஸ் மேதமைக்கு இழுக்கு என்றாலும், மேகிண்டாஷ் கம்ப்யூட்டருக்கான பல அடிப்படை அம்சங்களுக்கு இதன் மூலம் ஊக்கம் பெற்றார் என்றே சொல்ல வேண்டும். ஜெராக்ஸ் தன்னிடம் உள்ள கம்ப்யூட்டரின் வர்த்தக அம்சத்தை அறிந்திருக்கவில்லை என ஜாப்சே ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு வேளை ஜெராக்ஸ் தனது ஆல்டோ கம்ப்யூட்டரை வர்த்தக நோக்கில் அறிமுகம் செய்திருந்தால் கம்ப்யூட்டர் வரலாறு வேறுவிதமாக மாறியிருக்கும். ஜெராக்ஸ் இந்த வாய்ப்பை கோட்டை விட்ட நிலையில், கோல்ட்பர்க் ஸ்மால்டாக் அமைப்பை மேலும் பரவலாக பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காக ஜெராக்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகி ’பார்க்பிளேஸ்’ எனும் நிறுவனத்தை துவக்கினார். அதன் பிறகு அவர் ’நியூமெட்ரான்’ எனும் இணைய நிறுவனத்தையும் துவக்கினார்.

கம்ப்யூட்டர் என்பது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் எனும் தொலைநோக்கான பார்வைக்காகவும், அதை நிறைவேற்றும் வகையிலான மென்பொருள் அமசங்களை உருவாக்கியதில் முக்கியப் பங்களிப்பு செலுத்தியதற்காகவும் கோல்ட்பர்க் கொண்டாடப்பட வேண்டியவராகிறார்.