‘கம்ப்யூட்டர் பெண்கள் 4’ - உலகின் முதல் பெண் பொறியாளர்!
அறிவுலகில் கிளார்க்கின் சாதனைகள் வியக்க வைப்பவை என்பது மட்டும் அல்ல, தனிப்பட்ட முறையிலும் அவரது வாழ்க்கை ஊக்கம் தருவதாகவே அமைகிறது.
கம்ப்யூட்டர் பெண்கள் வரிசையில், இப்போது நாம் ஒரு பொறியாளர் பற்றி பார்க்க இருக்கிறோம். கம்ப்யூட்டர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய முன்னோடி பெண்கள் பற்றி விவரிப்பதே இந்த தொடரின் நோக்கம் எனும் நிலையில், இடையே ஒரு பொறியாளரை பார்க்க இருப்பதற்கான காரணம், அவர் முன்னோடி பொறியாளர் என்பது மட்டும் அல்ல, கம்ப்யூட்டர் வளர்ச்சியிலும் தவிர்க்க இயலாதவராக இருப்பது தான்.
அமெரிக்காவைச்சேர்ந்த எடித் கிளார்க் (EDITH CLARKE) தான் அந்த பொறியாளர். கிளார்க், உலகின் முதல் பெண் பொறியாளர், பொறியியல் சமூகத்தின் முன் முதல் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்த முதல் பெண் என்பது உள்ளிட்ட பல்வேறு முதல் பெருமைகளுக்குச் சொந்தக்காரரான கிளார்க், பெண் கம்ப்யூட்டராகவும் சிறந்து விளங்கியவர் என்பதே நம் கவனத்திற்கு உரியது.
அறிவுலகில் கிளார்க்கின் சாதனைகள் வியக்க வைப்பவை என்பது மட்டும் அல்ல, தனிப்பட்ட முறையிலும் அவரது வாழ்க்கை ஊக்கம் தருவதாகவே அமைகிறது.
கணித ஆர்வம்
எடித் கிளார்க், 1883ம் ஆண்டு அமெரிக்காவின் மேரிலாண்டில் பிறந்தார். பெரிய குடும்பத்தில் 9 பிள்ளைகளில் ஒருவராக பிறந்த கிளார்க், சிறுவயதில் ஒருவிதமான கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டார். எழுதுவதிலும், படிப்பதிலும் அவருக்கு இருந்த சிக்கலை மீறி கணித பாடத்தில் ஆர்வமும், திறமையும் இருந்தது. மேலும், சோதனையாக அவருக்கு 12 வயது இருந்த போது பெற்றோர்கள் இருவருமே மறைந்துவிட்டனர்.
பெற்றோர்கள் மறைவுக்கு பின், தனது மாமாவின் ஆதரவில் படிப்பை த்தொடர்ந்தார். 18 வயதில் பெற்றோர்களின் சொற்பமான சொத்து அவரிடம் வந்து சேர அதைக்கொண்டு மேற்படிப்பை தொடர்ந்தார். வாஸர் கல்லூரியில் சேர்ந்து படிக்கத்துவங்கினார்.
அமெரிக்காவில் பெண்கள் உயர் கல்வி படிக்க அனுமதித்த ஆரம்ப கல்லூரிகளில் இந்த கல்லூரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்லூரி கணிதம் மற்றும் வானவியலில் அதிக கவனம் செலுத்தியது. இதன் மாணவிகள் பலர் வானவியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றி அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
1908ல் பட்டம் பெற்றவர் சான் பிரான்சிஸ்கோவில் பெண்கள் பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். பின்னர், வாஷிங்டன் கல்லூரி ஒன்றில் இரண்டு ஆண்டுகள் கணித ஆசிரியராக இருந்தார்.
கணித ஆசிரியர்
கணித ஆசிரியராக தனது எதிர்காலத்தை வலுவாக்கிக் கொள்வதற்காக விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பிரிவில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இந்த காலகட்டத்தில் தான் ஏ.டி & டி நிறுவனத்தில் அவருக்கு கம்ப்யூட்டர் உதவியாளராக வேலை கிடைத்தது. நாம் ஏற்கனவே பார்த்தது போல, கம்ப்யூட்டர் இயந்திரம் இன்னமும் முழுவீச்சில் உருவாக்கப்படாத அந்த காலத்தில், பெண்களே கம்ப்யூட்டர்களாக செயல்பட்டனர். அதாவது ஆய்வாளர்களுக்குத் தேவைப்பட்ட சிக்கலான கணித சமன்பாடுகளை மேற்கொள்பவர்களாக இருந்தனர்.
எடித் கிளார்க்கும் இந்த வரிசையில் ஏ.டி & டி நிறுவனத்தில் ஜார்ஜ் கேம்பல் என்பவருக்கு கம்ப்யூட்டர் உதவியாளராக பணியாற்றத் துவங்கினார். தொலைபேசி இணைப்பு சேவை வழங்குவதில் ஈடுபட்டிருந்த அந்நிறுவனம் சார்பாக நீண்ட தொலைவு தொலைபேசி சேவை பரிமாற்றத்தில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஆய்வுல் கேம்பல் ஈடுபட்டிருந்தார். இதற்காக தேவைப்பட்ட கடினமான கணக்கீடுகளை போட்டுத்தரும் பணி கிளார்க்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடினமான வேலை தான். ஆனால், கணிதத்தின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக கிளார்க் அதை விரும்பியே செய்தார். அதோடு கணித ஆற்றலை தொலைபேசி பரிவர்த்தனை தொடர்பான தொழில்நுட்பப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பயன்படுத்துவதற்கான பயிற்சியாகவும் அமைந்தது. பின்னாளில் அவரது சாதனைகளுக்கான அடித்தளமாகவும் அமைந்தது.
கம்ப்யூட்டர் பெண்
அடுத்த சில ஆண்டுகளில், தன்னைப்போன்ற கம்ப்யூட்டர் பெண்கள் குழுவுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இதனிடையே, அவர் வானொலி தொடர்பான வகுப்பிலும் சேர்ந்து படித்தார். தனது துறையில் சாதிக்கத் துடித்தவர் 1918ல் வேலையை விட்டுவிட்டு. எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் முதுகலை பட்ட படிப்பில் சேர்ந்து படித்து, முதல் பெண் மின்சார பொறியாளர் எனும் சிறப்பை பெற்றார்.
எம்.ஐ.டியில் கிளார்க் மாணவியாக இருந்த காலத்தில், கம்ப்யூட்டர் துறை மற்றும் இணைய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் வானவர் புஷ் (Vannevar Bush) பேராசிரியராக இருந்தார். நவீன கம்ப்யூட்டர்களின் முன்னோட்டம் என்று சொல்லக்கூடிய டிபரன்ஷியல் அனலைசர் எனும் சாதனத்தை புஷ் உருவாக்கியிருந்தார். இந்த அனுபவமும், கிளார்க்கிற்கு பின்னாளில் கணக்கிடுதலில் மிகவும் உதவியாக இருந்தது.
முதல் பெண் பொறியாளர் எனும் சாதனையை மீறி கிளார்க்கிற்கு பொறியாளராக உடனே வேலை கிடைக்கவில்லை. எனவே அவர் மீண்டும் மனித கம்ப்யூட்டராக ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் டர்பைன் பொறியியல் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். இங்கு பணியில் இருந்த ஆண்டுகளில் அவர் டர்பைனின் அதிவேக சுழற்சியால் ஏற்படும் இயந்திர அழுத்தத்தை கணக்கிடுவதற்கான வழிமுறையில் சக ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இந்த காலகட்டத்தில் தொலைபேசி சேவை வளர்ச்சி கண்டு வந்தது போலவே அமெரிக்கா முழுவதும் மின்மயமாக்கலும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. தொலைவான பகுதிகளுக்கு மின்கம்பிகள் வழியே மின்சாரத்தை கொண்டு செல்வதில் சிக்கல்களும் இருந்தன. பரிவர்த்தனையின் போது மின் இழப்பு ஏற்படுவதை சரி செய்ய, மின் பாதை, அவற்றின் நீளம் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு கணக்குகளை போட வேண்டியிருந்தது, இதற்காக, மின் கம்பிகளின் அமைப்பை (ஹைபர்போலா) கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது.
பக்கம் பக்கமாக காகிதங்களை வைத்துக்கொண்டு போட வேண்டிய இந்த கணக்குகளை எளிதாக்கும் வகையில், ஒரு இயந்திரத்தை கிளார்க் உருவாக்கினார். தொலைதூர மின்கம்பிகளின் பாதையை வரைபடமாக சமர்பித்து அதனடிப்படையில் கணக்குகளுக்கு விடை அளிக்கக் கூடிய வரைபட கணக்கிடும் இயந்திரமாக (graphical calculator) இது அமைந்தது.
1921ல் இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்து, அடுத்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்டது. மின்சார பரிவர்த்தனை பாதைகளுக்கான வடிவமைப்பு, உருவாக்கத்தில் இருந்த சிக்கலான கணக்குகளை எல்லாம் எளிதாக்கும் வகையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்தது.
பொறியியல் பாதை
1921ம் ஆண்டு கிளார்க், துருக்கி நாட்டில் ஆசிரியராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். இந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகளை சுற்றுப்பார்க்கும் வாய்ப்பையும் பெற்றார். 1922ல் அவருக்கு ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக வேலை கிடைத்தது. அதுவரை பொறியாளர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியாளராக பணியாற்றி வந்தவர் முதல் முறையாக பொறியாளராக பதவி பெற்றார்.
அதன் பிறகு, மின் பொறியியல் துறையில் அவர் சாதனைகளை நிகழ்த்தினார். மின் பொறியியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டவர், முக்கிய ஆய்வுக்கட்டுரைகளை எழுதி சமர்பித்ததோடு, மாணவர்களுக்கான மின்சார சர்க்யூட்ட் தொடர்பான பாடப் புத்தகத்தையும் எழுதினார்.
ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற கிளார்க், மின்சார பொறியியல் சார்ந்த பல்வேறு பங்களிப்புகளை வழங்கியிருந்தாலும், பொறியியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சிக்கலான கணக்குகளை போடுவதில் நேரத்தை விரையமாக்குவதை தவிர்க்கும் வகையிலான கணிதவியல் முறைகளை உருவாக்கியதே அவற்றுக்கு எல்லாம் அடிநாதமாக அமைந்தது.
அவரது கண்டுபிடிப்பான கிராபிகல் கால்குலேட்டர் இதற்கு சரியான உதாரணம். பெரும்பாலான பொறியாளர்கள் சிக்கலான கணிதவியல் சமன்பாடுகளாக நோக்கிய விஷயங்களை அவர் எளிதாகக் கையாளக்கூடிய வரைபடமாக மாற்றி தீர்வு கண்டார். இதற்குத் தேவையான கணித மாதிரிகளை உருவாக்குவதிலும் வழிகாட்டினார். அந்த வகையில் தரவுகள் ஆய்வுக்கான முன்னோடிகளில் ஒருவராகவும் விளங்குகிறார்.
நவீன கம்ப்யூட்டர்
அதுவரை, மனித கம்ப்யூட்டர்கள் உதவியோடு மேற்கொள்ளப்பட்டி வந்த மின் பொறியியலுக்கான கணிதவியல் சமன்பாடுகளை இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்ளும் போக்கை அவர் துவக்கி வைத்ததாகக் கருதலாம். இந்த போக்கின் நீட்சியாக மின்னணு இயந்திரங்களைக் கொண்டு கணக்கீடுகளை மேற்கொள்ளும் ஆய்வும் தீவிரமாக கம்ப்யூட்டர் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
இந்த போக்கின் முதல் பாய்ச்சலாக அமைந்த ’எனியாக்’ (ENIAC) மின்னணு கம்ப்யூட்டருக்கான உந்துசக்தியாகவும் இந்த போக்கு அமைந்தது.
ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து கிளார்க் ஓய்வு பெற்ற அதே ஆண்டு எனியாக் கம்ப்யூட்டர் அறிமுகமானது. ஆரம்ப கால கம்ப்யூட்டர்களில் மைல்கல்லாக கருதப்படும்
எனியாக் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய ’எனியாக் பெண்கள்’ பற்றி தொடர்ந்து பார்க்கலாம்...