‘கம்ப்யூட்டர் பெண்கள்-3’ - வானத்தை அளந்த ஹார்வார்ட் பெண்கள்!
கம்ப்யூட்டர் என்பது அடிப்படையில் கணக்கிடும் இயந்திரமாகவே கருதப்படுவதால், கம்ப்யூட்டர் வருகைக்கு முன்னர் அதை கச்சிதமாக நிறைவேற்ற வல்லவர்களாக பெண்கள் கருதப்பட்டதன் தொடர்ச்சியாக ஹார்வர்டு கம்ப்யூட்டர் பெண்கள் வருகின்றனர்.
ஒளியையும் விழுங்கி விடக்கூடியதாகக் கருதப்படும் கருந்துளையை புகைப்படம் எடுத்தது இந்த நூற்றாண்டின் அறிவியல் சாதனையாக அமைகிறது. கருந்துளைகள் பற்றிய ஆய்வில் முக்கிய பாய்ச்சலாக அமையும் இந்த சாதனையை சாத்தியமாக்கிய அல்கோரிதமை உருவாக்கியவர் கேட்டி போமென் (Katie Bowman) எனும் இளம் பெண் விஞ்ஞானி என்பது தற்செயலானது அல்ல என்றே தோன்றுகிறது.
அதிலும், குறிப்பாக கேட்டி போமென் ஹார்வர்டு பல்கலைக்கழத்தைச் சேர்ந்தவராக இருப்பதையும் பொருத்தமாக நினைக்கத்தோன்றுகிறது. ஏனெனில், ஒரு நூற்றாண்டுக்கு முன் வானவியல் ஆய்வில் முக்கியப் பங்கு வகித்து வானத்தை அளந்து விண்மீன்களைக் கணக்கிட உதவிய பெண் விஞ்ஞானிகளின் வரிசையில் தான் போமெனும் வந்து நிற்கிறார்.
இன்னும் சரியாகச் சொல்வது என்றால், வானவியலில் சாதனை படைத்த பெண்களின் தோள் மீது ஏறி நின்று தான் போமென் இந்த சாதனையை படைத்திருக்கிறார். போமென் பூமியில் இருந்து தொலைநோக்கிகள் மூலம் எடுக்கப்பட்ட எண்ணற்ற படங்களில் சிக்கிய தகவல்களை அதிதிறன் கொண்ட கம்ப்யூட்டர்களைக் கொண்டு புகைப்படமாக்கிய அல்கோரிதத்தை உருவாக்கித் தந்தார் என்றால், கம்ப்யூட்டர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் தாங்களே கம்ப்யூட்டர்களாக செயல்பட்டு, வானத்தை அளந்து வானவியிலுக்கு வழிகாட்டினர் சிலர்.
இந்த செயற்கறிய சாதனையை மீறி அந்த பெண்கள் வாழும் காலத்தில் அறிவியலாளர்களாக மதிக்கப்படவில்லை என்பது மட்டும் அல்ல, அவர்கள் செய்த நிகரில்லாத பணிக்காக அற்ப சொற்பமான ஊதியமே பெற்றனர் என்பதும் இன்னமும் வேதனையானது. எனினும், அறிவியல் ஆய்வில் முக்கியப் பங்காற்றிய ’ஹார்வர்டு கம்ப்யூட்டர்கள்’ என வர்ணிக்கப்படும் இந்த சாதனைப் பெண்கள் பற்றி பார்க்கலாம்...
கம்ப்யூட்டருக்கு முன்…
கம்ப்யூட்டர் என்பது அடிப்படையில் கணக்கிடும் இயந்திரமாகவே கருதப்படுவதால், கம்ப்யூட்டர் வருகைக்கு முன்னர் அதை கச்சிதமாக நிறைவேற்ற வல்லவர்களாக பெண்கள் கருதப்பட்டதைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகவே ’ஹார்வர்டு கம்ப்யூட்டர் பெண்கள்’ வருகின்றனர்.
இந்தப் பெண்களில் ஒருவர், முன்னணி வானவியல் விஞ்ஞானியின் சமையல்காரப் பெண்ணாக இருந்தவர். ஆனால், அதன் பிறகு வானவியல் ஆய்வில் அவர் பெரும் சாதனையை நிகழ்த்தினார். சமையல் செய்பவராக இருந்தவர் வானவியல் ஆய்வில் ஈடுபட்டதை வியப்பான செய்தி மட்டும் அல்ல, அந்த காலத்தில் கல்வியிலும், ஆய்வுலகிலும் நிலவிய பாலின பாகுபாட்டையும் உணர்த்துவதாக இருக்கிறது.
பெண்கள் பங்களிப்பை முடக்குவதில் எல்லா சமூகங்களுமே பிற்போக்குத்தனமாகவே இருந்துள்ளது என்றாலும், அமெரிக்காவில் அந்த காலத்தில் இருந்த நிலைமையை கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம். அந்த காலத்தில் பெண்கள் பொதுவாக வீட்டு வேலை செய்வதற்கு உகந்தவர்களாகவும், கணவர்களை மகிழ்விப்பதை கடமையாக கொண்டவர்களாகவும் கருதப்பட்டனர். பெண் கல்வி என்பதே அரிதாக இருந்த நிலையில், பெண்கள் வீட்டுக்கு வெளியே பணியாற்றுவது அதைவிட அரிதாக அமைந்திருந்தது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பெண்கள் தொடர்பாக இருந்த மனநிலைக்கு உதாரணமாக, எட்வர்டு கிளார்க் என்பவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.
”ஒரு பெண்ணின் உடல், ஒரு நேரத்தில் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்யக்கூடியது. பூப்பெய்தும் காலத்தில் தங்கள் மனதை வளர்த்துக் கொள்வதில் அதிக ஆற்றலை செலவிடும் பெண்கள் கருத்தரிக்கும் திறனில் பாதிப்பு உண்டாகும்,” என கிளார்க் கல்வியில் பாலினம் (Sex in Education ) எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்கள் கல்வி
இந்த கருத்தை விட அதிர்ச்சி அளிக்கக் கூடியது, இதைத் தெரிவித்த எடுவர்டு கிளார்க் ஒரு மருத்துவர் மற்றும் பேராசிரியர் என்பதாகும். பேராசிரியர் ஒருவரே இத்தகைய கருத்தை கொண்டிருந்தார் என்றால், அந்த காலத்தில் பெண்கள் நிலையை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை கொஞ்சம் மாறி ஒரு சில கல்வி நிலையங்கள் பெண்கள் உயர் கல்வி பயில அனுமதிக்கத்துவங்கின. அப்போது கூட செல்வம் மிகுந்த குடும்பத்தைச்சேர்ந்த பெண்களே அறிவியல் பாடம் பயில ஊக்குவிக்கப்பட்டனர். ஆய்வு என்று வரும் போது பெண்களுக்கான வாய்ப்பு இன்னும் மோசமாக இருந்தது.
எனினும், ஒரு சில முற்போக்கு ஆண்கள் இந்த பாகுபாட்டை நீக்கும் முயற்சியாக அறிவியல் ஆய்வில் பெண்களை ஊக்குவிக்கதனர். இந்த முற்போக்காளர்களில் ஒருவரான எட்வர்டு பிக்கரிங் (Edward Pickering) தான் நாம் பார்க்க இருக்கும் ஹார்வர்டு கம்ப்யூட்டர் பெண்களை உருவாக்கியவர்.
அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியைச்சேர்ந்த பிக்கரிங், 1865ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பின்னர் எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். மாணவர்கள் ஆய்வில் பங்கேற்கும் வகையில் அறிவியல் பாடம் நடத்தும் விதத்தையே மாற்றி அமைத்து அவர் புதுமையை கொண்டு வந்தார்.
மேலும், விஞ்ஞானியாக வேண்டும் எனும் ஆர்வம் கொண்டிருந்த சாரா பிரான்சிஸ் ஒயிட்டிங் (Sarah Frances Whiting) எனும் இளம் பெண் தனது உரைகளை கேட்க வாய்ப்பளித்தார். சாரா இந்த அனுபவத்தை தான் ஆசிரியராக பணியாற்றிய கல்விகூடத்தில் பயன்படுத்திக் கொண்டார்.
பிக்கரிங் தான் ஈடுபாடு கொண்டிருந்த வானவியல் ஆய்விலும் இதே போன்ற முற்போக்கான அணுகுமுறையை கொண்டிருந்தார். தொலைநோக்கிக் கொண்டு வானத்தை பார்வையிடுவதன் மூலம் கிடைத்த குறிப்புகளை மட்டும் நம்பியிருக்காமல், தொலைநோக்கி மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களைக் கொண்டு ஆய்வு செய்யும் முறையை வலியுறுத்தினார். இந்த முறை இப்போது வானியல் புகைப்படக்கலை எனக் குறிப்பிடப்படுகிறது.
வானவியல் ஆய்வு
தொலைநோக்கி மூலம் தொடர்ச்சியாக பார்வையிடும் போது மனித கண்கள் களைப்படைவதாக குறிப்பிட்டவர், இரவு நேர வானில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெளிவான தகவல்களை அளிக்கக் கூடியவை என்று இதற்கான விளக்கத்தையும் அளித்தார்.
ஆரம்ப காலத்தில் டாகரேடைப் புகைப்பட நுட்பத்தின் படி, தொலைநோக்கி காட்சிகள் புகைப்பட கண்ணாடிகளுக்கு மாற்றப்பட்டன. இதற்கு மிகுந்த கால அவகாசம் தேவைப்பட்டது. இதற்குத் தீர்வாக, மேம்பட்ட புகைப்படக் கலை நுட்பங்களை ரிச்சர்டு மேடாக்ஸ் மற்றும் சார்லெஸ் பென்னட் போன்றவர்கள் கொண்டு வந்தனர். குறிப்பாக பென்னட்டின் வானவியல் புகைப்பட நுட்பம், நேரில் கண்களால் பார்க்கப்படும் காட்சிக்கு நிகரான துல்லியத்தையும், தகவல்களையும் கொண்டிருந்தது.
1877ல், பிக்கரிங் ஹார்வர்டு வானவியல் ஆய்வு மையத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், மையத்தின் புகைப்படக் கலை வசதியை மேலும் விரிவாக்க வழி செய்தார். இதன் பயனாக இரவு நேர வானத்தை ஆய்வு செய்து அதிக புகைப்படங்களை எடுக்க முடிந்தது.
ஆனால், இதனால் எதிர்பாராத புதிய பிரச்சனை உண்டானது. தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குவிந்த நிலையில், அவற்றில் இருந்த தரவுகளை ஆய்வு செய்வது சிக்கலானது. அங்கிருந்த ஆய்வாளர்களால் கையாளக்கூடியதை விட பன்மடங்கு அளவில் தரவுகள் குவிந்து கொண்டிருந்தது.
நட்சத்திர தேடல்
ஆய்வாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமே இதற்குத் தீர்வு காண முடியும் என உணர்ந்த பிக்கரிங், இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். இப்படி கூடுதல் ஆய்வாளர்களாக பிக்கரிங் பெண்களை பணிக்கு அமர்த்திக்கொண்டார்.
பிக்கரிங் பெண்களை ஆய்வுப் பணிக்காக நியமித்ததற்கு ஆண்களுக்கு அளிப்பதைவிட அவர்களுக்கு குறைந்த ஊதியம் அளித்தால் போதுமானது என்பதால் அதிக எண்ணிக்கையில் நியமனங்களை மேற்கொள்ளலாம் எனும் எண்ணமும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. ஆனால், இந்த செலவு கணக்கை மீறி, பிக்கரிங் நியமித்த பெண்கள் வானவியல் ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டு பெரும் பங்களிப்பை செய்தனர்.
இந்த பெண்களே ’ஹார்வர்டு கம்ப்யூட்டர்கள்’ என அழைக்கப்பட்டனர். இவர்கள் பணியாற்றிய விதத்தை தெரிந்து கொண்டால் இந்த வர்ணனை எத்தனை சரியானது என்பது புரியும்.
பிக்கரிங் ஆய்வுக்குழுவில் மொத்தம் 80 பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த பெண்கள் வாரம் ஆறு நாட்கள் பணியாற்றினர். ஆனால்,
ஒரு மணி நேரத்திற்கு 25 முதல் 50 செண்ட் வரை மட்டுமே ஊதியம் அளிக்கப்பட்டது. ஆண்களை நியமித்திருந்தால் இதைவிட இருமடங்கு தொகை அளித்திருக்க வேண்டும். ஊதியம் குறைவு என்பதால் இரு மடங்கு ஊழியர்களை ஆய்வு பணிக்கு நியமிக்க முடிந்தது. அதைவிட முக்கியமாக இந்த பெண் ஆய்வாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை வெகு சிரத்தையாக செய்தனர்.
தீவிர ஆய்வு
இந்த ஆய்வுப் பணி எளிதாக இருக்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் இது இயந்திரகதியான வேலையாக அமைந்தாலும், வானவியல் ஆய்வில் புதிய கதவுகளை திறக்ககூடியதாக அமைந்தது.
முதலில் புகைப்படங்களை தெளிவானதாக மாற்ற வேண்டும். அதன் பிறகு படங்களில் உள்ள நட்சத்திரங்களை எண்ணி வகைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு படத்தில் உள்ள நட்சத்திரங்களை குறித்து வைத்துக்கொண்டு, மற்ற படங்களில் உள்ள நட்சத்திரங்களோடு ஒப்பிட்டு அவற்றை வகைப்படுத்த வேண்டும். படம் எடுக்கப்பட்ட நாளையும், வானில் நட்சத்திரங்களின் இடத்தையும் குறிக்க வேண்டும். இந்த விவரங்களை கட்டங்களில் குறித்து வைத்து, வானில் நட்சத்திரங்களின் நிலையை அடையாளம் காண வேண்டும்.
இந்தப் பணியை வெறும் படங்களைப் பார்த்து குறிப்பெடுப்பதாக நினைத்துவிடக்கூடாது. மாறாக, மிகப்பெரிய வானவியல் கோட்பாட்டிற்கான அடிப்படை தரவுகளாக அவை அமைந்தன.
வானத்து நட்சத்திரங்களை எண்ண முடியாது எனச் சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா? உண்மையில் இந்த பெண்கள் தொலைநோக்கில் எடுக்கப்பட்ட படங்களை வைத்துக்கொண்டு, வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை கணக்கிட்டு பட்டியலிட்டிருந்தனர். இவ்வாறாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை வரைபடமாக்கி, நவீன வானவியலுக்கான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.
ஊதியம் குறைவாக இருந்தது மட்டும் அல்லாமல், பதவி உயர்வோ, உரிய வேறு அங்கீகாரமோ கிடைக்காத நிலையிலும், இந்த பெண்கள் ஆர்வத்தோடு ஆய்வில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த வரம்புகளை மீறி, ஒரு சில பெண் ஆய்வாளர்கள் தங்களை உயர்த்திக்கொண்டு வானவியல் ஆய்வில் முத்திரை பதித்தனர்.
வில்லியமினா பிளம்மிங் (Williamina Fleming) ஒரு கட்டத்தில் இந்த குழுவின் தலைவராக உயர்ந்து, பிக்கரிங்குடன் இணைந்து செயல்பட்டு, ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை அவற்றின் அலைகற்றைகள் கொண்டு வகைப்படுத்தி நட்சத்திர கையேட்டை உருவாக்கினார்.
சாதனை பெண்கள்
முதல் வெள்ளை டுவார்ப் நட்சத்திரமன ’ஹார்ஸ்ஹெட் நெபுலா’வை பிளம்மிங் கண்டுபிடித்ததுடன், 310 மாறும் நட்சத்திரங்களையும் கண்டறிந்தார். பிளம்மிங் எழுதிய டைரி குறிப்புகள், ஹார்வர்டு பெண்கள் மேற்கொண்ட ஆய்வு பற்றிய விரிவான தகவல்களைக் கொண்டுள்ளது.
மற்றொரு ஆய்வாளரான ஆனி ஜம்ப் கேனான் (Annie Jump Cannon), ஆண்டோனியா மரே எனும் ஆய்வாளருடன் இணைந்து, நட்சத்திரங்களை வகைப்படுத்தும் முறையை எளிதாக்கினர். இந்த முறையே பின்னர் வானவியல் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
கேனான் தனது ஆய்வு காலத்தில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை வகைப்படுத்திய சாதனைக்கு சொந்தக்காராக திகழ்கிறார். ஹென்ரியட்டா லிவிட் (Henrietta Swan Leavitt) மேற்கொண்ட ஆய்வுகள் பதிப்பிக்கப்பட்டி ’லிபிட் லா’ என குறிப்பிடப்படுகின்றன.
மாறும் நட்சத்திரங்களின் வேறுபட்ட பிரகாசத்திற்கான காரணத்தை இவர் கண்டறிந்ததன் அடிப்படையிலேயே வெகு தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலங்களை அளப்பதற்கான வழி உண்டானது. பிரபஞ்சத்தை கண்டறிவதற்கான ஆய்வுக்கும் இதுவே அடிப்படையானது.
கம்யூட்டர் பெண்கள் தொடர்வார்கள்...