2030ல் இந்தியா விண்வெளி ஆய்வு மையம் அமைக்கத் திட்டம்: தொடரும் இஸ்ரோ சாதனைகள்!
இரண்டாவது முறையாக வெற்றிகரமான நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி வைத்திருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு கழகம் இஸ்ரோ, 2030 ம் ஆண்டில் விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையத்தை அமைப்பதையும் இலக்காக கொண்டுள்ளது.
நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி அதன் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்து உலகை வியக்க வைத்த இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ, அண்மையில் சந்திராயன் -2 விண்கலத்தை நிலவை நோக்கி அனுப்பி வைத்து ஒட்டு மொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
முதல் முறை, ஏற்பட்ட தொழில்நுட்பத் தடங்களை மீறி, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் -2 விண்கலம் நிலவின் இதுவரை ஆய்வு செய்யப்படாத தென் துருவத்தை நோக்கி பயணத்திக்கொண்டிருக்கிறது.
இந்தச் சாதனைகளின் தொடர்ச்சியாக, இஸ்ரோ விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைக்கவும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. 2030ம் ஆண்டில் 20 டன் விண்வெளி ஆய்வு மையம் செலுத்தப்படும் என்றும், இதில் மைக்ரோ கிராவிட்டி தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் கடந்த மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
பூமிக்கு 400 கிமீ தொலையில் அமையும் இந்த ஆய்வு மையத்தில் விண்வெளி வீரர்கள் 15 முதல் 20 நாட்கள் தங்கி ஆய்வு செய்வார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன், இஸ்ரோ விண்வெளி ஆய்வுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்கும் ’ககன்யான்’ (Gaganyaan) திட்டத்தில் கவனம் செலுத்த உள்ளது. ககன்யான் திட்டம் வெற்றி அடைந்த பிறகு, விண்வெளி ஆய்வு மையம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று சிவன் தெரிவித்திருந்தார்.
“விண்வெளி வீரர்களை அனுப்பிய பிறகு, ககன்யான் திட்டத்தை தொடர வேண்டும். இதற்காக இந்தியா சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது,” என்று அவர் கூறியிருந்தார்.
ககன்யான் திட்டம் 2022ல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10,000 கோடியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. விண்வெளி வீரர்களை அனுப்பி வைப்பது தொடர்பான இந்தியாவின் முதல் திட்டமாக இது அமைகிறது.
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ககன்யான் திட்டம் அமையும் என்று தெரிகிறது. ஜி.எஸ்.எல்.வி எம்கே-III ராக்கெட் ககன்யானை விண்ணில் செலுத்தும். 16 நிமிடங்களில் இது புவி வட்டப்பாதையில் செலுத்தப்படும். இரண்டு அல்லது மூன்று விண்வெளி வீரர்கள் இதில் ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்படுவார்கள்.
2022ல் ககன்யானை விண்ணில் செலுத்துவதற்கு முன், சோதனை விண்வெளி வெள்ளோட்டத்தையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை தயார் செய்யும் வகையில் மனிதர்கள் இல்லாமல் இரண்டு விண்கலன்கள் சென்று வர உள்ளன.
ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ண ரெட்டி | தமிழில் : சைபர்சிம்மன்