இந்தியாவின் முதல் ’விண்வெளி பூங்கா’ கேரளாவில் அமைக்கப்பட உள்ளது!
விண்வெளி பூங்காவை விண்வெளி தொடர்புடைய தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முக்கிய உற்பத்தி மையமாக உருவாக்குவதே நோக்கமாகும்.
விண்வெளிப் பிரிவில் செயல்படும் உலகளவிலான ஸ்டார்ட் அப்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்தியாவின் முதல் நவீன விண்வெளி பூங்காவை திருவனந்தபுரத்தில் அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த பூங்காவை அமைக்க கேரள அரசாங்கம் 20.01 ஏக்கர் நிலத்தை குத்தகை முறையில் கேரளா ஸ்டேட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (KSITIL) நிறுவனத்திற்கு மாற்ற உள்ளது. கேரள அரசாங்கத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இஸ்ரோவின் முக்கிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் முன்னணி விண்வெளி விஞ்ஞானி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறிவு மையம் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கேரள அரசாங்கத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் எம் சிவசங்கர் கூறும்போது,
“இந்த விண்வெளி பூங்கா அமைக்கப்பட்டால் நாட்டின் முக்கிய விண்வெளி தொழில்நுட்ப மையமாக கேரளா உருவாகும். ’ஸ்பேஸ் 2.0’ வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த விண்வெளி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்,” என்றார்.
இந்த ஒருங்கிணைக்கப்பட்ட வளாகம் GIS மற்றும் இதர தரவு அமைப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு உற்பத்தி மையமாக விளங்கும். அத்துடன் இங்கு ஸ்டார்ட் அப் இன்குபேட்டர், Airbus Bizlab உள்ளிட்ட ஆக்சலரேட்டர்கள், திறன் பயிற்சி அமைப்பு, உற்பத்தி தொழிற்சாலைகள் போன்றவை இடம்பெற்றிருக்கும்.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் தவிர நகரைச் சுற்றிலும் இஸ்ரோவின் மற்ற முக்கிய மையங்கள் அமைந்துள்ளன. இவற்றுடன் விண்வெளி பூங்காவும் ஒன்றிணைவது விண்வெளி தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான ஒரு வலுவான சுற்றுச்சூழல் உருவாக உதவும்.
கேரள அரசாங்கத்தின் ஐசிடி அகாடெமியின் சந்தோஷ் குருப் விண்வெளி பூங்கா திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்திட்டத்தின் இணை மேம்பாட்டாளரான KSITIL வளாகத்தில் இடத்தை எடுத்துக்கொள்ளும் நிறுவனங்களிடம் இருந்து பிரீமியம் சேகரிக்க உள்ளது.
விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் அதிகரித்து வருவதால் இந்தியா தற்போது விண்வெளி புரட்சியை சந்தித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி புதுமைகள் படைத்துள்ளது.
ஆதாரம்: பிடிஐ