கொரோனா போண்டா, மாஸ்க் பரோட்டா; மதுரை ஸ்டைலில் விழிப்புணர்வு!
கொத்து பரோட்டா... வீச்சு பரோட்டா... பன் பரோட்டா பார்த்திருப்பீங்க... ஏன் சூரி பரோட்டாக்கூட பார்த்திருப்பீங்க... மூக்கு, வாயை மறைக்காமல், வயித்துக்குள் தள்ளும் ‘மாஸ்க் பரோட்டா' பார்த்திருக்குறீர்களா?
மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்று பரவாமலிருக்க மாஸ்க் அணியவேண்டும் என்று தொடர்ச்சியாக அரசு வலியுறுத்தி வந்தாலும், மக்கள் அதனை சரிவர கடைப்பிடிப்பதில்லை. இந்நிலையில், கோவிட் -19 தொடர்பான பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க மதுரை உணவகம் ஒன்று ஒரு சுவராஸ்யமான வழியைக் கண்டுபிடித்துள்ளது.
கொரோனா காலத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரையின் ஃபேமஸ் ரெஸ்டாரென்டான ‘டெம்பிள் சிட்டி' மாஸ்க் வடிவில் பரோட்டாக்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
1 வித்தியாசம் கூட கண்டுபிடிக்க இயலாத வகையில் மாஸ்க் வடிவிலே தயாரிக்கப்பட்ட ‘மாஸ்க் பரோட்டோ' ஒரே நாளில் வைரலாகி ஆஹோ ஓஹோ கமெண்ட்களுடன் மக்களின் அன்பினையும் பெற்றுள்ளது.
2003ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘டெம்பிள் சிட்டி' இதற்கு முன்பாகவே, கரெண்ட் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் மெனுவை உருவாக்கி பிரபலமாகியது.
மாஸ்க் பரோட்டோ உருவாக்கமும் அதன் பின்னணி குறித்தும் மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்க தலைவரும், டெம்பிள் சிட்டி ஹோட்டல் நிர்வாக இயக்குனருமான கே.எல்.குமார் நம்மிடம் பேசுகையில்,
‘‘எப்போதுமே கிரியேட்டிவ்வாக தான் சிந்திப்போம். முதலில் 101 தோசை வகைகளை அறிமுகப்படுத்தினோம். நடிகர் ரஜினியின் ‘பாபா' திரைப்படம் வெளியாகி போது, ‘பாபா பன்னீர் பட்டர் மசாலா' அறிமுகம் செய்தோம். ஒரு கிரிக்கெட் மேட்ச்சில் டெண்டுல்கர் சதம் அடித்தார். அப்போ, ‘டெண்டுல்கர் தோசை' என்ற பெயரில் பேட் வடிவில் தோசை விற்பனை செய்தோம். இந்த கொரோனா காலத்திலும்,
‘கொரோனா போண்டா', ‘கொரோனா ரவா தோசை' என கொரோனா வைரஸ் வடிவத்திலே செய்தோம். கொரோனா வைரசின் உருவத்தினால், மக்கள் அதனை வாங்குவதற்கும், சாப்பிடுவதற்குமே பயந்தார்கள்.
இப்போ, மதுரையில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிக்கிட்டு இருக்கு. நான் பார்த்த நிறைய இடங்களிலும் மக்கள் மாஸ்க் அணிவதில்லை. நாமே ஏன் மாஸ்க் வடிவில் பரோட்டோ செய்து விழிப்புணர்வு கொடுக்கக்கூடாதுனு தோணியது. உடனே, பரோட்டா மாஸ்டரிடம் ஐடியாவை சொன்னேன். அவரும், வீச்சு பரோட்டோ ஸ்டைலில் சூப்பரா போட்டார். ஒரே நாளில் பயங்கர ரெஸ்பான்ஸ். பரோட்டோ மாலை நேரங்களில் மட்டும் தான் போட்டோம்.
மதுரையில் ஊரடங்கு காலத்தில் பார்சல் மட்டும் தான் கொடுப்பதால், ஒரு நாளுக்கு 50 செட்டு பரோட்டா தான் விற்பனையாகியது. ‘மாஸ்க் பரோட்டோ' போட்டதிலிருந்து, காலையிலேயே மாஸ்க் பரோட்டா இருக்கானு போன் பண்ணிட்டே இருந்தாங்க. நேற்று ஒரு நாளில் 300 செட் பரோட்டா விற்பனையாகியது. ஒரு செட்டு பரோட்டாவின் விலை 50ரூபாய்,'' என்று தெரிவித்தார் அவர்.
சாதாரண பரோட்டா செய்வதற்கான அதே மூலப்பொருள்களுடன், வடிவத்தை மட்டும் மாற்றியமைத்துள்ளனர். கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘கொரோனா தீம்' பதார்த்தங்களை மெனுவில் சேர்த்துவரும் அவர், தொடர்ந்து புதுமையான பதார்த்தங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
இதுதவிர, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க தூதுவளை, ஆடாதொடை பவுடர் கொண்டு ‘மூலிகை ரசம்' செய்து மீல்ஸ் ஆரடருடன் இலவசமாகக் கொடுப்பதாக குமார் தெரிவித்தார்.
மாஸ்க் பரோட்டாவும் -சால்னா குழம்பும், நாவில் ருசியையும், மனதில் விழிப்புணர்வையும் ஒருசேர மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.
தகவல் உதவி: ஜெயஸ்ரீ