Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

கோவிட்-19 தடுப்பூசி மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் முத்திரை பதித்த 7 பெண்கள்!

கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிப்பு முதல் நோபல் பரிசு வென்றது வரை இந்த பெண் சாதனையாளர்கள் இளம் தலைமுறை பெண்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள்.

கோவிட்-19 தடுப்பூசி மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் முத்திரை பதித்த 7 பெண்கள்!

Thursday December 31, 2020 , 4 min Read

இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். ஆண்களுக்கானது என முத்திரை குத்தப்பட்ட எத்தனையோ துறைகளில் பெண்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து உயர் பதவி வகித்து வருகின்றனர்.


கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்குவதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் இதிலும் வெவ்வேறு பின்னணி கொண்ட வெவ்வேறு வயதுடைய எத்தனையோ பெண்கள் பங்களித்து வருகின்றனர்.


இவர்களது சாதனை அறிவியல் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. அதுமட்டுமின்றி இளம் தலைமுறை பெண்கள் தங்கள் சிந்தனைகளையும் சிறகுகளையும் விரிவுப்படுத்தி நம்பிக்கையுடன் செயல்பட இத்தகைய சாதனைப் பெண்கள் உந்துதலளிக்கின்றனர்.

1

2020ம் ஆண்டு நிறைவடையும் தருவாயில் பாலினம் ஒரு தடையல்ல என்கிற நம்பிக்கையுடன் உறுதியாகவும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு அறிவியல் துறையில் முன்னணி வகிக்கும் பெண்கள் பற்றிப் பார்ப்போம்.

இம்மானுவேல் சார்பெண்டியர் மற்றும் ஜெனிஃபர் ஏ டூட்னா (Emmanuelle Charpentier and Jennifer A Doudna)

மரபணு மாற்றம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட இம்மானுவேல் சார்பெண்டியர், ஜெனிஃபர் ஏ டூட்னா இருவருக்கும் இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.


இம்மானுவேல் சார்பெண்டியர் யூசி பெர்க்லே கல்வி நிறுவனத்தில் பயோகெமிஸ்ட். ஜெனிஃபர் ஏ டூட்னா மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனத்தில் ஆய்வாளராக உள்ளார்.


மரபணுக்களை மாற்றம் செய்ய உதவும் CRISPR/Cas9 என்கிற மரபணு துண்டிப்பான்களை உருவாக்கியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது பிரச்சனைக்குரிய மரபணுத் தகவல்களை மிகவும் துல்லியமாகத் துண்டிக்க உதவும் நுட்பமாகும்.


புற்றுநோய் சிகிச்சை முறைகளிலும் மரபு ரீதியான குறைபாடுகளைக் களைவதிலும் உதவுவதுடன் விவசாயத் துறையிலும் இந்த ஆய்வு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

“அங்கீகாரம் என்பது பாலினம் சார்ந்தது அல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். பெண்ணாக இருந்தாலும் நமக்கான அங்கீகாரத்தைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கை அறிவியல் பிரிவில் செயல்பட விரும்பும் அல்லது ஏற்கெனவே செயல்பட்டு வரும் இளம் பெண்கள் மனதில் பதியவேண்டும்,” என்கிறார் இம்மானுவேல்.

நீடா படேல் (Nita Patel)

56 வயது நீடா படேல் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் கெய்தெர்ஸ்பர்க் நகரில் உள்ள Novavax என்கிற பயோடெக்னாலஜி நிறுவனத்தின் மூத்த இயக்குநர். கோவிட்-19 தடுப்பூசி உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அனைத்து பெண்கள் அடங்கிய குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.


இவர் குஜராத்தின் சோஜித்ரா பகுதியில் இருந்து குடிபெயர்ந்தவர். இவருக்கு நான்கு வயதிருக்கையில் இவரது அப்பாவிற்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. வேலைக்கு செல்ல முடியாத நிலையில் வருவாய் இன்றி குடும்பம் வறுமையில் வாடியது. நீடா மருத்துவர் ஆகவேண்டும் என்பதே அவரது அப்பாவின் விருப்பம்.


நீடாவும் கஷ்டப்பட்டு படித்தார். குஜராத் சர்தார் படேல் பல்கலைக்கழகத்திலும் மேரிலேண்ட் பால்டிமோர் பல்கலைக்கழகத்திலும் இரண்டு முதுகலை பட்டம் பெற்றார்.

2

கேட்டலின் கரிகோ (Katalin Kariko)

ஃபைசர் பயோஎன்டெக் கோவிட் தடுப்பூசி உருவாக்குவதன் பின்னணியில் இருந்தவர் கேட்டலின் கரிகோ. இன்று பயோஎன்டெக் ஆர்என்ஏ பார்மசிடிகல்ஸ் மூத்த துணைத் தலைவராக உள்ளார்.


ஹங்கேரியில் வளர்ந்த இவருக்கு சிறு வயது முதலே அறிவியல் மீது ஈர்ப்பு இருந்து வந்தது. Szeged பல்கலைக்கழகத்தின் பயாலஜிக்கல் ரிசர்ச் செண்டரில் பிஎச்டி முடித்த இவர், இங்கு பணியாற்றியபோது ஆர்என்ஏ-வில் ஆர்வம் ஏற்பட்டது.


1985-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் பணியை இழந்தார். ஆனால் அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆண்டு காரை விற்பனை செய்துவிட்ட பணத்தை தனது இரண்டு வயது மகளின் பொம்மையில் மறைத்து வைத்து அமெரிக்காவிற்கு டிக்கெட் எடுத்து சென்றார்.

ஆண்ட்ரியா கெஸ் (Andrea M Ghez)

ஆண்ட்ரியா கெஸ் வானியற்பியலாளர். வானியல்-இயற்பியல் பேராசிரியர். இயற்பியலில் நோபல் பரிசு பெறும் நான்காம் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருந்துளைக் குறித்த ஆய்வுக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த ஆண்ட்ரியா மாசசூசெட்ஸ் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பிஎச்டி பெற்றார்.

அடுத்தத் தலைமுறை மாணவிகள் அறிவியலாளர்களாக உருவாக ஊக்கமளிக்கிறார்.

சாரா கில்பெர்ட் (Sarah Gilbert)

சாரா கில்பெர்ட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிட்யூட் வேக்சினாலஜி பேராசிரியர். இவர் ஆக்ஸ்போர்டு Astrazeneca தடுப்பூசியை உருவாக்கியதில் பங்களித்துள்ளார்.


2016-ம் ஆண்டு நிறுவப்பட்ட Vaccitech நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இந்நிறுவனம் நோய் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் தடுப்பூசி உருவாக்குவது தொடர்பாக செயல்படுகிறது. நார்த்தாம்ப்டன்ஷயரில் பிறந்து வளர்ந்தவர் 58 வயதான வேக்சினாலஜிஸ்ட் சாரா கில்பெர்ட். இவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிறந்தது.

செலின் கவுண்டர் (Celine Gounder)

செலின் கவுண்டர் தொற்று நோயியல் நிபுணர் மற்றும் தொற்று நோய் மருத்துவர். அமெரிக்காவில் அதிபராகத் தேர்வாகியுள்ள ஜோ பைடன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறப்புக் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட செலின் கவுண்டர் இடம்பெற்றுள்ளார்.

3
அமெரிக்காவின் காசநோய் தடுப்புப் பிரிவில் உதவி இயக்குநராக பணியாற்றிய செலின் தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

1960-களில் செலினின் அப்பா ராஜ் நடராஜன் கவுண்டர் ஈரோடு மாவட்டம் பெரும்பாளையம் கிராமத்தில் இருந்து அமெரிக்கா சென்றார். போயிங் நிறுவனத்தில் பணியாற்றினார்.

அப்பாவின் பூர்வீக கிராமத்தை மேம்படுத்த விரும்பிய செலின் 2018-ம் ஆண்டு ‘ராஜ் ஃபவுண்டேஷன்’ அமைத்து கல்வி உதவி வழங்கி வருகிறார்.

கீதாஞ்சலி ராவ் (Gitanjali Rao)

'டைம்’ பத்திரிக்கை நடத்திய 2020-ம் ஆண்டின் சிறந்த குழந்தைக்கான போட்டியில் 5,000 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு கீதாஞ்சலி ராவ் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு வயது 15.

நீர் மாசு, சைபர் துன்புறுத்தல்கள், போதைப் பொருட்களுக்கு அடிமையாவது போன்ற பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை இவர் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கீதாஞ்சலி

பருவநிலை மாற்றம் தொடங்கி பெருந்தொற்று வரை எத்தனையோ பிரச்சனைகள் தற்போது உருவாகியுள்ளன. இவற்றை இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளவேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று குறிப்பிடும் கீதாஞ்சலி புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் புத்தாக்க சிந்தனை கொண்ட இளம் தலைமுறையினரை குழுவாக ஒன்றுதிரட்ட விரும்புகிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா