சென்னையில் உணவின்றி தவிக்கும் முதியவர்கள், ஏழைகளுக்கு லாக்டவுனில் எப்படி உதவலாம்?
21 நாள் ஊரடங்கால் தவிக்கும் சென்னை முதியவர்கள், ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவும் பல தன்னார்வலர்கள், மாநகராட்சிக்கு நீங்களும் உங்கள் பங்குக்கு வீட்டில் இருந்தபடியே உதவுங்கள்.
உலகம் முழுவதும் மிரட்டிக் கொண்டிருக்கும் கொள்ளை நோயான கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா கொரோனா வைரஸ் பரவலை எப்படி கட்டுபடுத்தப் போகிறது என்று உலக நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் உற்று நோக்கி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவிட்–19 கட்டுப்படுத்த ஒரே வழி இன்குபேஷன் காலத்தில் அவரவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது என அறிவுறுத்தப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை தான் என்றாலும் ஊரடங்கால் தினக்கூலிகள், முதியவர்கள், முதியோர் இல்லங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், தனியாக வசிக்கும் முதியவர்கள் உணவு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இவர்களுக்கு உதவும் விதமாக தன்னார்வலர்களும், நிதி திரட்டுபவர்களும் தங்களால் முடிந்த பணமோ அல்லது மளிகைப் பொருட்களையோ சேகரித்து சென்னை மாநகராட்சிக்கு அளித்து வருகின்றனர்.
நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்ய நினைக்கிறீர்களா? இந்தத் தகவல்களைப் படித்து உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.
சென்னை மாநகராட்சி
கொரோனா பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த பயன்படுத்தப்படாத வீடுகள், இடங்களை மாநகராட்சிக்கு அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
நடிகர் கமல்ஹாசன், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் தங்களது வீடுகளை தனி வார்டுகளாக மாற்றி பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இதே போன்று சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் ஜோதி திருமண மண்டபம் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு இலவசமாக கொரோனா அவசரத் தேவைக்காக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண மண்டபத்தின் உரிமையாளர் கார்த்திக் இது குறித்து கூறுகையில்,
“ஊரடங்கால் திருமண மண்டபம் பூட்டித் தான் கிடக்கிறது, இந்த இடத்தை மக்களுக்கு பயன்படுத்துவதற்காக இலவசமாக மாநகராட்சி அதிகாரிகள் வசம் அளித்துள்ளோம். அவசரப் பணியில் இருப்பவர்களுக்கு எங்கள் திருமண மண்டபத்தில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. அதிகாரிகள் மேற்பார்வையில் இந்தப் பணிகள் அனைத்தும் நடைபெறுகிறது, எங்களால் முடிந்த மளிகைப் பொருட்களை சேகரித்து அவர்களுக்கு கொடுத்து வருகிறோம்,” என்கிறார்.
இது தவிர நகர்ப்புற ஏழைகளுக்கு உதவ நினைப்பவர்கள் நிவாரண நிதிகளை வழங்கலாம் எனவும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமோ அல்லது காசோலை மூலமாகவோ நிதிஉதவியை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கான வங்கி விவரங்கள்:
வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பெயர்: THE COMMISSIONER, GREATER CHENNAI CORPORATION – CSR
வங்கி கணக்கு எண்: 000901126630
வங்கி: ICICI BANK
கிளை: NUNGAMBAKKAM BRANCH
MICR Number : 600229003
IFSC Code : ICIC0000009
உணவுப் பொருட்களாகத் தர விரும்புபவர்கள் சமைத்த உணவுகளை தானம் செய்யாமல், மளிகைப் பொருட்களாக அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் இதர சமையல் பொருட்கள், முகக்கவசங்கள், சோப்கள், சானிடைசர்கள், கிருமி நாசினிகள் உள்ளிட்டவற்றை அளிக்கலாம்.
- ஜே ஜே உள்விளையாட்டு அரங்கம், கீழ்ப்பாக்கம் கார்டன் காலனி, கீழ்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600102.
- அம்மா அரங்கம், 11வது தெரு, குமரன் நகர், A பிளாக், அண்ணாநகர் கிழக்கு, சென்னை, தமிழ்நாடு 600030.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வலராக கொரோனா அவசரப் பணியில் ஈடுபட விருப்பமா(தகுந்த பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளோடு) சென்னை மாநகராட்சியின் இந்த இணையதள பக்கத்தில் பதிவு செய்து பணியாற்றலாம் http://www.chennaicorporation.gov.in/relief_2016
சஃபா இந்தியா (SAFA India)
சஃபா இந்தியா தினக்கூலிகள், சிங்கிள் மாம்கள் மற்றும் வயது முதிர்ந்வர்களுக்கு சமையல் பொருட்கள் அடங்கிய பைகளை விநியோகம் செய்கின்றன. கோதுமை மாவு, அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, உப்பு மற்றும் தேயிலை உள்ளிட்டவை ஒரு பைக்குள் அடைக்கப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
பொருட்களை மொத்தமாக வாங்கி அவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தன்னார்வலர்கள் மூலம் பயனாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது சஃபா இந்தியா.
ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இந்த சேவையை செய்து வரும் சஃபாவுடன் நீங்களும் கைக்கோர்க்க வேண்டுமா ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து உதவிக்கரம் நீட்டலாம். சென்னையில் கொளத்தூர், செங்குன்றம், சேத்துபட், அண்ணா நகர், அடையாறு, கொசப்பேட்டை, வடசென்னை பகுதிகளில் சஃபா உதவி வருகிறது.
ஆன்லைனில் பணம் செலுத்த விரும்புவோர் : https://pages.razorpay.com/Covid19Relief
நோ ஃபுட் வேஸ்ட் (No Food Waste)
நோ ஃபுட் வேஸ்ட் என்ஜிஓ லாக்டவுனால் தவிக்கும் வீடற்ற மக்களுக்கு பசியைப் போக்குவதற்காக நன்கொடைகளைப் பெற்று உதவி வருகிறது. ஒருவர் 20 ரூபாய் தந்தாலே பசியால் வாடும் ஒருவரின் வயிற்றை நிரப்பலாம் என்கிறது இந்த அமைப்பு.
நோ ஃபுட் வேஸ்ட்டுக்கு நிதியுதவி தர விரும்புபவர்கள் இந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்:
பெயர்: No Food Waste
A/C No: 10022800699
வங்கி: IDFC Bank
கிளை: ஆர்எஸ் புரம், கோயம்புத்தூர்
IFSC: IDFB0080531
பூமிகா அறக்கட்டளை
பூமிகா அறக்கட்டளை மூத்தக் குடிமக்களுக்கும், தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு உதவுவதற்காக ஹெல்ப்லைன் அறிமுகம் செய்துள்ளது. இந்த உதவி மையத்தில் செயல்படும் தன்னார்வலர்கள் உதவி தேவைப்படுபவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும், தேவைப்படும் பட்சத்தில் வீட்டிற்கே சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றியும் வருகின்றனர். 044-46314726 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம்.
உதவி தேவைப்படுபவர்களுக்கு தன்னார்வலர்களாக இருந்து உதவ நினைப்பவர்கள் இங்கே பதிவு செய்து சேவையாற்றலாம் : https://docs.google.com/forms/
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவிவரும் பூமிகா அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்து நீங்களும் இந்த சமூக சேவையில் இணைந்து கொள்ளலாம்.
நன்கொடைகளை அளிக்க : http://www.bhoomikatrust.org/donate-for-covid
மண்டலம் 13 நிதித் திரட்டல்
சென்னையில் மண்டலம் 13ல் வசிப்பவர்கள் துப்புரவுத் தொழிலாளர்களுக்காக நிதி திரட்டலை செய்து வருகின்றனர். ஊரடங்கு சமயத்திலும் அயராது உழைக்கும் இந்தத் தொழிலாளர்களுக்காக நிதி திரட்டி வருகின்றனர் குடியிருப்பு வாசிகள்.
நீங்கள் அளிக்கும் நன்கொடையானது நேரடியாக பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கே சென்று சேரும். நன்கொடை அளிக்க : https://milaap.org/fundraisers/support-conservancy-workers
சுமாநாசா அறக்கட்டளை (Sumanasa Foundation)
வீடற்றவர்கள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி சமூகக் கூடங்களில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. இவர்களுக்கு உணவு சமைக்கத் தேவையான பொருட்களை சென்னை மாநகராட்சி நன்கொடையாக பெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சிப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுக்க 2 இடங்களை அறிவித்துள்ளது. எனினும் அந்த இடங்களுக்கு சென்று நன்கொடை தர முடியாதவர்கள் சுமாநாசா அறக்கட்டளை மூலம் உதவி செய்ய முடியும்.
கொரோனாவால் ஊரடங்கில் நாம் முடங்கினாலுன், வீட்டுக்குள் இருந்தபடியே தவிப்போருக்கு உதவி அளித்து பலரையும் நாம் காப்போம்.