அமெரிக்க மக்களின் கடவுளான இந்திய பெண் டாக்டர்!
மைசூரைச் சேர்ந்த டாக்டர் உமா, அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு அளித்த சிகிச்சைக்கு அவர்கள் அளித்த அன்பு பரிசு என்ன தெரியுமா?
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
தற்போது மருத்துவர்களே மக்களின் தெய்வங்களாக பார்க்கப்படும் அளவிற்கு அவர்களின் பணிகள் அளப்பரியது. ஒரு பக்கம் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை பார்த்த மருத்துவர்களைத் தாக்கும் செய்திகளும், கொரோனா வந்து இறந்த டாக்டர்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தடுப்பதும் நடந்துவருகின்றன.
அதேசமயம் மற்றொருபுறம் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும் செவிலியர்களும் மக்கள் கைதட்டி தங்கள் அன்பினை வெளிப்படுத்தும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது உலகத்திலேயே அதிகப்படியாக அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சேரும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். அப்படி கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த இந்திய வம்சாவளி பெண் மருத்துவரை, நூற்றுக்கணக்கான கார்களில் வந்த அமெரிக்கர்கள் அவரது வீட்டு வாசலில் வைத்து பாராட்டிச் சென்ற சம்பவம் அண்மையில் நடந்தேறியது.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவில் பெண் மருத்துவர் அவரின் வீட்டு வாசலில் நிற்க, அவரது வாசல் வழியாக நூற்றுக்கணக்கான கார்களில் வந்த மக்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துச் செல்கின்றனர்.
வரிசைக் கட்டி வந்த வாகனங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், சில காவலர்கள் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் இடம்பெற்றிருந்தன.
டாக்டரின் வீட்டுக்கு முன்னால் வரும் வாகனங்கள் சில ஹாரன் அடித்தும், கரகோஷ ஓசை எழுப்பியவாறும், பூச்செண்டுகள் கொடுத்தும் டாக்டருக்கு நன்றியை தெரிவித்து விட்டுச் சென்றனர்.
அப்படி மக்களைக் கவர்ந்த இந்த இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் யார்?
அந்தப் பெண் மருத்துவர் பெயர் உமா மதுசூதனா. இவர் கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர். தற்போது அமெரிக்காவில் சவுத் வின்ட்சோர் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இவரின் பங்கு அதிகமாக இருந்திருக்கிறது.
நூற்றுக்கும் அதிகமான வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தக் காரணத்தினால் டாக்டர்.உமாவுக்கு தங்களது மரியாதையையும், நன்றியையும் அமெரிக்க மக்கள் செலுத்தி விட்டுச் சென்றனர்.
சமூக விலகல் பின்பற்றி மருத்துவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க அவரின் வீட்டு வாசலில் நிற்கச் சொல்லி 150க்கும் மேலான வாகனங்களில் வந்த மக்கள் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவருக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்து விட்டுச் சென்றனர்.
கொடிய கொள்ளை நோயான ககொரோனாவை விழுத்தி வரும் மருத்துவர்களின் உயிர் காக்கும் பணியை மக்கள் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சரியான நிகழ்வாக இருக்கும்.