கொரோனா தடுப்புக்கு பிரதமர் நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய ஸ்ரீதர் வேம்பு!
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நிதி சார்ந்த அளவீடுகள் மறுபரிசீலனை செய்யப்படவேண்டியது குறித்தும் கொரோனா வைரஸ் நெருக்கடியை இந்தியா சிறப்பாக கையாள்வது குறித்தும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடன் குறித்தோ அல்லது பங்குதாரர்களின் சொத்து மதிப்பு அதிகரிப்பு குறித்தோ வங்கிகள் அல்லது விசி-க்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாத தனிநபர்கள் வெகுசிலரே. ஸ்ரீதர் வேம்பு அத்தகைய தனிநபர்களில் ஒருவர்.
க்ளௌட் சார்ந்த வணிக மென்பொருள் உருவாக்கும் நிறுவனமான ஜோஹோ கார்ப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஸ்ரீதர் வேம்பு சமீபத்தில் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிக்கு (PM-CARES) 25 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
நிதியுதவி பெறாத நிறுவனத்திற்கு இது எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.
“எங்களது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அளிக்கும் ஆதரவே இந்த நன்கொடையை சாத்தியப்படுத்தியது,” என்கிறார் ஸ்ரீதர்.
அவர் தனது ட்விட்டர் பதிவில்,
“கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிதிக் கொள்கைகள் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதனால் இந்த தசாப்தத்தில் ஒவ்வொரு சொத்து வகைகளும் (அசெட் கிளாஸ்) மிகைப்படுத்தி மதிப்பிடப்பட்டது. ஆகவே நிதி சார்ந்த நிகர மதிப்பு போன்ற அளவீடுகளை நான் ஒதுக்கிவிடுகிறேன். என்னைப் பொறுத்தவரை இவ்வாறு சில சொத்துக்கள் மிகைப்படுத்தி மதிப்பிடப்படுவது சிலவற்றை குறைத்து மதிப்பிடுவதை உணர்த்துகிறது. ஆனால் ஒவ்வொரு சொத்து வகையுமே கூடுதலாக மதிப்பிடப்பட்டது. ஆட்சி முறை, சமூக ஒற்றுமை போன்றவை குறைத்து மதிப்பிடப்பட்டது.
செல்வந்தர்களாக இருப்பதால் தேவை எழும்போது எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என்கிற மாயை ஏற்பட்டிருந்தது. சமூகக் குழுக்களின் திறமையான செயல்பாடுகள், ஒற்றுமை, ஆட்சி முறை போன்றவற்றை விலை கொடுத்து நம்மால் வாங்கிவிடமுடியாது. ஆனால் அத்தியாவசியத் தேவை ஏற்பட்டுள்ள சமயத்தில் முகக்கவசங்களையும் செயற்கை சுவாசக் கருவிகளையும்கூட பணத்தைக் கொடுத்து வாங்கமுடியாத மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள், காவல்துறை, சுகாதாரப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள் போன்றோரின் சேவையைப் பாராட்டியுள்ளார்.
“ஒரு இந்தியக் குடிமகனாக இந்தியாவில் இந்தச் சவாலை எதிர்கொள்வதில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி பாராட்டுகிறேன். நீண்டகால அடிப்படையில், தனியார் துறையில் திறன்களை உருவாக்குவதில் இதுவரை இல்லாத அளவிற்கு கூடுதல் கவனம் செலுத்த உள்ளேன். இதனால் பொருளாதாரத்தின் மீள்திறன் சாத்தியப்படும். நெருக்கடியான சூழலை நம்மால் கணிக்கமுடியாமல் போகலாம். ஆனால் நம்மால் அதை எதிர்கொள்ள முடியும்,” என்றார் ஸ்ரீதர்.
சமீபத்தில் ஜோஹோ நிறுவனத்தின் வர்த்தக ரீதியான ரகசியமான தகவல்களை முறையற்றுப் பயன்படுத்திக்கொண்டதாக ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர்கள் மீது ஜோஹோ கார்ப் குற்றம் சாட்டியுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: ஸ்ரீவித்யா