கிளியோபாட்ரா பாணியில் கழுதைப்பாலில் காஸ்மெட்டிக்ஸ்!
பசும்பால் சோப், ஆட்டுப்பால் சோப் வரிசையின் லேட்டஸ்ட் வரவு கழுதைப் பால் ஃபேஸ் க்ரீம். கழுதைப் பண்ணை அமைத்து கழுதைப்பால் காஸ்மெட்டிக்ஸ் தயாரிப்பில் கலக்கும் கேரளாவை சேர்ந்த எபி பேபி.
“வேலையை விட்டு விட்டு, கழுதை வளர்த்திட்டுகிட்டு இருக்கான் என என்னைச் சுற்றி இருந்தவர்கள் ஏளனம் செய்தனர். ஒவ்வொரு தொழிலிலும் முன்னோடிகள் இருப்பர். ஆனால், கழுதைப்பால் காஸ்மெட்டிக் தயாரிப்பதில் எனக்கான வழிகாட்டிகள் எவருமில்லை. அடிப்பட்டு, அடிப்பட்டு நானாக இன்று எழுந்து நிற்கிறேன்...”
என்று தன் வெற்றிப் பாதையில் சந்தித்த இன்னல் இடறுகளை பகிரத் தொடங்கினார் எபி பேபி.
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ராமமங்கலவாசியான எபி பேபி, பட்டம் வாரியாக ஒரு இன்ஜீனியர், பணி வாரியாக கழுதைப்பால் காஸ்மெட்டிக் தயாரிப்பு நிறுவனத்தின் ஓனர். ஆம், பட்டம் முடித்து பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜீனியராக பணிப்புரிந்து கொண்டிருந்துள்ளார் அவர், எவரும் செய்திராத ஒரு புதுமையானத் தொழிலை தொடங்க வேண்டும் என்பது அவருடைய மனதினுளிருந்த நீண்ட நாள் சொப்னம். கனவை நினைவாக்க தீர்மானித்து, வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். முன்னோர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்த கழுதைப்பால் இன்று அறவே ஒழிந்தது ஏன் என்று சிந்தித்திருக்கிறார். விளைவு,
ஒன்றல்ல இரண்டல்ல சரியாக ஒரு தசாப்தம் கழுதைக் குறித்து முழு ஆய்வு மேற்கொண்டுள்ளார். கழுதைப்பால் என்றாலே அடுத்தக்கணம் நினைவுக்கு வருவது பேரழகி கிளியோபாட்ரா. அரண்மனையில் 700 கழுதைகளை வளர்த்து, அதன் பாலில் குளித்து தன் இளமையை காத்ததாக கூறப்படுகிறது. எபியும், கழுதை சார்ந்த ஆராய்ச்சியில் கழுதைப்பாலை பற்றி முழுமையாக அலசி ஆராயத் தொடங்கினார்.
ஆய்வைப்பற்றி டெக்கான் க்ரானிக்கலில் எபி கூறுகையில்,
2015ம் ஆண்டு, அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக கழுதைப்பாலை ஏற்றுக் கொண்டது. இங்கிலாந்திலும் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கிறது. கழுதைப்பாலின் அதிக மருத்துவக் குணங்களால் அமெரிக்காவில் கழுதைப்பாலுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. அமெரிக்காவில், ‘பாண்டா சிண்ட்ரோம்’-ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், சிகிச்சைக்கு பிரஷ்ஷான கழுதைப்பால் வேண்டி கழுதைப் பண்ணைக்கு அருகிலே குடியேறி வருகின்றனர்.
“தாய்பாலுக்கு நிகரான புரதம், லாக்டோஸ் மற்றும் தாதுப்பொருள்கள் கழுதைப்பாலில் இருக்கின்றன,” என்ற அவர், கழுதைப்பால் கொண்டு காஸ்மெட்டிக் பொருள்கள் தயாரிக்க தீர்மானித்துள்ளார்.
இதற்காக, தமிழகத்திலிருந்து தாய், சேய் என 36 கழுதைகளை வாங்கி வந்து, 2.5 ஏக்கர் நிலத்தில் கழுதைப் பண்ணையை தொடங்கியுள்ளார். அவைகளுக்கு, உணவிலும் இருப்பிடத்திலும் எவ்வித சமரசமுமின்றி சத்தான உணவுப் பொருள்களை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால், முற்றிலும் வேறுப்பட்ட வேளாண் தொழில் என்பதால் 15 கழுதைகள் நோயுற்று இறந்து போயின. தொடங்கிய தொழில், சாதித்து காட்டுவேன் என்ற முனைப்பில் இன்னும் கழுதைகள் வாங்கி வளர்த்துள்ளார்.
“ஒவ்வொரு கழுதையும் தனித்துவமானது. தனித்த நடத்தை பண்பைக் கொண்டது. மனிதர்களை போன்று தான், சிலவை உற்சாகமற்று மந்தமாக இருக்கும், சிலவை எப்போதும் ஆங்கிரி பேர்டு மோடில் இருக்கும், சிலவை உதைக் கொடுப்பதில் வல்லவராக இருக்கும். அதைநாம் மிக அருகில் இருந்து அறிந்து கொள்ளவேண்டும்.”
அதேபோல், கழுதையும் அதன் எஜமானர்களிடம் நெருங்கிபழகக்கூடிய ஒரு பிராணி. இயற்கையான மற்றும் CO3 புற்கள் தான் அதன் பிரதான உணவுகள். கழுதைகள் 90 அடி நீளமுள்ள குடலை கொண்டது. அதனால், அவைகள் எப்போதும் உணவு தேவைப்படும். இதற்காக நாங்கள் பல்வேறு இடங்களிலிருந்து வீட்டுப் புற்களை வாங்கி வந்து உணவாக அளிக்கிறோம்” என்கிறார் அவர்.
நாளொன்றுக்கு ஒரு பெண் கழுதையிலிருந்து அரைலிட்டர் கழுதைப்பாலை கரக்கிறார். அவ்வாறு, 6 லிட்டர் கழுதைப்பால் சேகரிக்கப்படுகிறது. அப்பால் உறைதல் மற்றும் உலர வைத்தல் முறைக்கு உட்படுத்தப்படுகிறது. அதாவது, -40 டிகிரி செல்ஷியசில் பாலானது உறைவிக்கப்படுகையில், பாலில் உள்ள நீர் நீக்கப்படுகிறது. அதற்கடுத்து, உலற வைத்த படிநிலையில் மூலம் பால் பவுடராகிறது. பின், அதிலிருந்து முகப்பூச்சுகள், பாடி லோஷன்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்பொருள்களை Dolphin IBA என்ற இணையதளத்தின் மூலம் விற்பனைசெய்து வருகிறார் எபி.
தவிர, இந்தியாவிலே முதல் முறையாக கழுதைப்பாலில் தயாராகும் காஸ்மெட்டிக் பொருள்கள் தயாரிப்பதாலும், தோல் பிரச்னைகளுக்கான சிறந்த நிவாரணியாக கழுதைப்பால் அமையும் என நம்பப்படுவதால், எபியின் பண்ணையையும் நோக்கியும் படையெடுக்கின்றனர் மக்கள். ஹாலிவுட் முதல் அக்கம் பக்கத்தார் வரை கஸ்டமர்கள் இருக்கின்றனர் என்கிறார் அவர்.
“கீரிம் வாங்குவதற்கு மட்டுமின்றி கழுதையின் பால், சிறுநீர் வாங்குவதற்கும் மக்கள் பண்ணைக்கு வருகின்றனர். இப்போது கழுதையும் விற்கின்றேன். ஒரு தரமான கழுதை ரூ 80 ஆயிரம் முதல் 1,00,000ரூ வரை விற்பனையாகிறது. கழுதை மட்டும் காஸ்ட்லியில்லை, கழுதைப்பால் காஸ்மெட்டிக் பொருள்களும் காஸ்ட்லி தான். 40கிராம் எடையுள்ள பேஸ் க்ரீமின் விலை 1920 ரூபாய்.
சரும பிரச்சினைக்கு தீர்வு நிச்சயம் என்பதால், விலையை பற்றி கவலையில்லாமல் மக்கள் வாங்குகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த ஸ்விட்டி பால் என்பவருடைய 8 வயது குழந்தை ஸ்சேலா, ‘லைகென் பிளானஸ்’ எனும் சரும நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஐதராபாத் முழுவதும் தேடி அலைந்து குணப்படுத்த முடியவில்லை என்று, இறுதியாக என்னிடம் வந்தார். கழுதைப்பால் க்ரீம் பயன்படுத்தத் தொடங்கிய மூன்றே மாதத்தில் சருமநோய் குணமாகிவிட்டது என்று கூறினார் ஸ்விட்டி. என்னுடைய 10 வருட உழைப்புக்கு கிடைத்த விருது அது. இப்போது நன்முறையில் விற்பனையும் நடக்கிறது” என்று இந்தியன் எக்ஸ்பிரசுக்கு கூறியவர், விரைவில் இதை சர்வதேச பிராண்ட்டாக மாற்றுவேன் என்கிறார்.