இயற்கை வாழ்க்கையை ஊக்குவிக்க ’மூங்கில் வீடுகள்’ கட்டும் தம்பதி!
தம்பதிகளான பிரசாந்த் லிங்கம், அருணா நிறுவிய நிறுவனம் கட்டுமானத்திற்கு மூங்கில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையை ஊக்குவிக்கிறது.
பிரசாந்த் லிங்கம், அருணா இருவரும் திருமணம் ஆன புதிதில் தங்களுக்கான வீட்டைக் கட்டும்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த ஃபர்னிச்சர்களை தேடினார்கள். இதுவே 2006-ம் ஆண்டு ’பேம்பூ ஹவுஸ் இந்தியா’ (Bamboo House India) தொடங்கக் காரணமாக அமைந்தது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மூங்கிலால் ஆன வீடு, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன நடைபாதை என இந்தத் தம்பதி சுற்றுசூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன் இந்த செயல்முறையில் பல்வேறு விவசாயிகளுக்கும் கைவினைஞர்களுக்கும் வேலை வாய்ப்ப்பை வழங்குகின்றனர்.
இன்று பேம்பூ ஹவுஸ் இந்தியா நிறுவனத்தின் விற்றுமுதல் 2 கோடி ரூபாய்.
ஆனால் இவர்களது பயணம் எளிதாக இருக்கவில்லை என்று பிரசாந்த் நினைவுகூர்ந்தார்.
கடினமான பாதை
ஆரம்ப நாட்களில் இந்தத் தம்பதி சில கடினமான சவால்களை சந்திக்க நேர்ந்தது. மாநில சட்டங்கள் கடுமையாக இருந்ததால் இவர்களால் எளிதாக மூங்கில்களை வாங்க முடியவில்லை. 2010ம் ஆண்டு வரை நிறுவனம் வெற்றிகரமாக செயல்படவில்லை. கடன் சுமை அதிகரித்தது. ஒரு வேளை உணவிற்குக்கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டது.
குடும்பச்சூழல் காரணமாக இவர்களது கடன் சுமை 60 லட்ச ரூபாய் வரை சென்றது. செலவுகளை சமாளிக்கப் போராடினார்கள். இருவரும் தற்கொலை செய்துகொள்வது குறித்துகூட சிந்தித்ததாக தெரிவிக்கின்றனர். கடைசியில் அருணா தனது நகைகளை விற்றார். சொத்துக்களை அடமானம் வைத்து இருவரும் கடன் வாங்கினார்கள்.
விரைவிலேயே நிலைமை மாறியது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மூங்கில் கொண்டு மாடியில் அறை கட்டுவதற்காக இந்தத் தம்பதியை அணுகினார். இவர்களது பணியின் தரமும் கைவினைத் திறனும் பலரது கவனத்தை ஈர்த்தது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்காலம்
இந்த முயற்சி தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த தம்பதி பேம்பூ ஹவுஸ் இந்தியா நிறுவனத்தை நாடு முழுவதும் சென்றடையச் செய்துள்ளனர்.
மூங்கில் வீடுகளுக்கான செலவு ஒரு சதுர அடிக்கு 500-700 ரூபாய் ஆகும். ஒரு சதுர அடிக்கு 1,500-2,500 ரூபாய் வரை செலவிடவேண்டிய கான்க்ரீட் வீடுகளுடன் ஒப்பிடுகையில் மூங்கில் வீடுகளுக்கான செலவு மிகவும் குறைவு. மேலும் மூங்கிலால் கட்டப்படும் வீடுகளில் வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி வரை குறையும் என்பதால் ஏசி பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காது.
இந்தத் தம்பதி பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் தொடர்பான கட்டுமானத்தில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் அபாயத்தை தடுப்பதில் பங்களிக்கின்றனர்.
உதாரணத்திற்கு இவர்கள் 2013-ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிளாஸ்டிக்கைக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டியுள்ளனர். பிரசாந்த இந்த முயற்சி குறித்து ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் கூறும்போது,
“2018-ம் ஆண்டு குகட்பள்ளியில் உள்ள ஒரு பூங்காவிற்காக ஒரு அலுவலகத்தைக் கட்டினோம். இந்த கட்டுமானத்திற்கு பிளாஸ்டிக், மூங்கில் இரண்டையும் சமமாகப் பயன்படுத்தினோம். தரையை அமைக்கவும் பிளாஸ்டிக்கையே பயன்படுத்தினோம். பின்னர் மியாபூரில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மெட்ரோ ஊழியருக்காக ஒரு வீட்டைக் கட்டினோம். இதில் தரை அமைப்பு தவிர முழுவதும் பிளாஸ்டிக்கால் கட்டப்பட்டது. எங்களது திட்டம் பலரால் விரும்பப்பட்டாலும் இத்தகைய வீடுகளின் நிலைத்தன்மை குறித்த தயக்கம் காணப்படுகிறது,” என்றார்.
பேம்பூ ஹவுஸ் இந்தியா தற்போது ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இவர்களது வேலைப்பாட்டினைப் பார்க்கலாம். ஹைதராபாத்தின் கூகுள் அலுவலகத்தில் போட் ஹவுஸ் ஒன்றையும் கட்டியுள்ளனர். இந்தத் தம்பதி சமீபத்தில் மஹாராஷ்டிராவிலும் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் மறுசுழற்சிக்கு உகந்த பிளாஸ்டிக் பொருட்களில் கவனம் செலுத்தவும் குப்பை பொறுக்குபவர்களுக்கு ஆதரவளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்காலத்தை உருவாக்குவதே இவர்களது நோக்கம்.
”நாங்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உரையாற்றி இளம் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்,” என்று பிரசாந்த் தெரிவித்ததாக Efforts For Good குறிப்பிட்டுள்ளது.
பிளாஸ்டிக் கொண்டு கழிப்பறைகள், ஃபர்னிச்சர், அலுவலக அறைகள் போன்றவற்றை கட்டுவதற்கும் பிரசாந்த் திட்டமிட்டுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA