கோவிட்-19: ‘Covaxin தடுப்பூசி மருந்து தயாரிப்பு நம்பிக்கை அளிக்கிறது’
கோவிட்-19-க்கு எதிரான போரில் தடுப்பு மருந்துகளின் தயாரிப்பு நம்பிக்கைக் கீற்றாக இருக்கிறது,” என்று எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை & ஆய்வு மையத்தின் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
“கோவிட்-19-க்கு எதிரான போரில் தடுப்பு மருந்துகளின் தயாரிப்பு நம்பிக்கைக் கீற்றாக இருக்கிறது,”
என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதரபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் என்னும் கோவிட்-19 தடுப்பு மருந்தை பரிசோதிக்க ஐசிஎம்ஆர்-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நிறுவனங்களில் ஒன்றான சென்னையைச் சேர்ந்த எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை & ஆய்வு மையத்தின் நிபுணர்கள் கூறினர்.
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் நடத்திய 'கொவிட்-19 தடுப்பு மருந்துகள் - வெளிச்சத்தை நோக்கி' என்னும் இணைய கருத்தரங்கில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
திரு.எஸ்.வெங்கடேஸ்வர், ஐஐஎஸ், தலைமை இயக்குநர், தென் மண்டலம், வரவேற்புரை ஆற்றினார். திரு. குருபாபு பலராமன், ஐஐஎஸ், இயக்குநர், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை, இந்த இணைய கருத்தரங்கை நெறியாண்டார்.
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் துறை பேராசிரியரும், கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனையின் முதன்மை பரிசோதனையாளருமான டாக்டர்.சத்யஜித் மொகாபத்ரா மற்றும் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை & ஆய்வு மையத்தின் மருத்துவ மருந்தியல் துறை துணை பேராசிரியரும், கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனையின் இணை பரிசோதனையாளருமான டாக்டர். மெல்வின் ஜார்ஜ் ஆகியோர் இந்த கருத்தரங்கில் பேசினர்.
ஜூலை மாதம் முதல் கோவாக்சின் தடுப்பு மருந்தின் மனிதர்கள் மீதான பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை & ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது.
தடுப்பு மருந்தின் உருவாக்கம் மற்றும் பரிசோதனைகளை குறித்து பேசிய டாக்டர். சத்யஜித்,
"முதல் கட்டமாக, 18-55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சீரான இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பம், மருத்துவ வரலாறு மற்றும் கோவிட் தொற்று இல்லாமை ஆகியவை அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணிகளாக இருந்தன," என்றார்.
இரண்டாம் கட்ட பரிசோதனை குறித்து பேசிய அவர், 12 முதல் 65 வயதுடையவர்கள் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் அவர்களின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பம், மருத்துவ வரலாறு மற்றும் உடல் தகுதி ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
"BBV152 தடுப்புப் மருந்தை செலுத்திய ஆரோக்கியமான தன்னார்வலர்களின் பாதுகாப்பு, மருந்துக்கு அவர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றனர், தாங்கும் தன்மை மற்றும் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றை மதிப்பிட இந்த ஆய்வு நடத்தப்பட்டது," என்று அவர் கூறினார்.
ஆரோக்கியமான மொத்த தன்னார்வலர்களின் எண்ணிக்கை 1,125 என்றும், இதில் முதல் கட்டத்தில் 375 பேர் பங்கேற்றதாகவும், இரண்டாம் கட்டத்தில் 750 பேர் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.
தடுப்பு மருந்து உருவாக்கத்தின் பல்வேறு கட்டங்களைக் குறித்து பேசிய டாக்டர் மெல்வின் ஜார்ஜ்,
“ஒரு நோய்க்கான தடுப்பு மருந்தை தயாரிக்க சாதாரணமாக ஏழிலிருந்து பதினேழு வருடங்கள் வரை ஆகும் என்றும், ஆனால் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி சில கட்டங்களை ஒன்றிணைத்ததன் மூலம் கோவிட்-19க்கான தடுப்பு மருந்து விரைந்து உருவாக்கப்பட்து,” என்று தெரிவித்தார்.
செயல்முறையை துரிதப்படுத்தியதன் மூலமும், ஒப்புதலுக்காக எடுத்துக் கொள்ளப்படும் கால அளவை குறைத்ததன் மூலமும், மிருகப் பரிசோதனைத் தேவைகளை குறைத்ததன் மூலமும், அரசின் சிறப்பான ஆதரவின் மூலமும் இது சாத்தியமாகியுள்ளதாக அவர் கூறினார். அதே சமயம், தவறு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு செயல்முறையிலும் அதீத கவனம் காட்டப்பட்டது.
தேவையான அனைத்து ஒப்புதல்களும் கிடைத்தவுடன் தடுப்பு மருந்து உற்பத்தியை துரிதப்படுத்தவும், மக்களுக்கு அது விரைவில் சென்றடைவதை உறுதிப்படுத்தவும் பெரிய மருந்து நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தை பகிர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தகவல் உதவி: பிஐபி