எஸ்.ஆர்.எம்-ல் இருவருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை தொடக்கம்!
கொரோனா தடுப்பூசி மருந்தை பரிசோதனை செய்ய SRM மருத்துவமனைக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து இரண்டு தன்னார்வலர்களுக்கு Covaxin செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து மட்டுமே கேட்டு வந்த நிலை மாறி சற்றே ஆறுதலளிக்கக்கூடிய வகையில் தற்போது தடுப்பு மருந்துகளின் அடுத்தடுத்த கட்ட பரிசோதனைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான 'கோவாக்சின்’ மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் என்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி மருந்து முதல் கட்டத்தில் வெற்றியை கண்டு அடுத்த கட்டமான மனித பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்தியா முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் இந்த மருத்துவ பரிசோதனை ஜுலை மாத மத்தியில் தொடங்கியது.
தமிழகத்தில் காட்டான்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இதை அடுத்து இரண்டு தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.
18 வயது முதல் 55 வயதிற்கு உட்பட்ட தன்னார்வலர்கள் பரிசோதனைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மட்டுமல்லாது இதய நோய் உள்ளிட்ட வேறு ஆபத்தான நோய்கள் உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது. ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கே கோவாசின் தடுப்பு மருந்து பரிசோதனை செய்யப்படும்.
இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு 194 நாட்களுக்குப் பிறகு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடத் தேவையான எதிர்ப்புச் சக்தியான ‘ஆன்டிபாடி’ உருவாகியுள்ளதா என அவர்களின் உடலில் பரிசோதிக்கப்படும்.
இதுகுறித்து டாக்டர் சத்யஜித் கூறும்போது,
“ஆரோக்கியமான இரண்டு தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தியுள்ளோம். அடுத்த ஊசி 14 நாட்களில் செலுத்தப்படும். தொடர்ந்து தன்னார்வலர்களின் உடல் நிலை கண்காணிக்கப்படும். 194 நாட்கள் கண்காணிக்கப்பட்டு ஆன்டிபாடி உருவாகியுள்ளதா என்று பரிசோதனை செய்யப்படும்,” என்றார்.
தடுப்பூசி செலுத்தப்பட்ட இந்தத் தன்னார்வலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளனர். பரிசோதனையில் கலந்து கொள்ளும் தன்னார்வலர்களுக்கு ஆகும் செலவினை பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். மேலும் அவர்களுக்கு உரிய காப்பீடும் வழங்கியுள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறு மாதம் வரை இந்த தன்னார்வலர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பரிசோதனை முடிவுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு அனுப்பப்படும் என்றார் டாக்டர் சத்யஜித்.
இதே நேரத்தில் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் மருந்து 30 வயது நபர் ஒருவருக்கு செலுத்தப்பட்டதாகவும், இவரைத் தொடர்ந்து அங்கு 12 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் என்று எண்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல் உதவி: தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்