'தடுப்பூசி பரிசோதனையால் சுய நினைவை இழக்கும் நிலை’ - சீரம் நிறுவனத்தை அதிரவைத்த வழக்கு!
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் மீது சீரம் நிறுவனம் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் மீது சீரம் நிறுவனம் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது.
வழக்கு தொடர என்ன காரணம்?
கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தியதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள சீரம் நிறுவனம், தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து சீரம் இன்ஸ்டிடியூட் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி சென்னையிலுள்ள ஒருவருக்கு சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்யும் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்க முடிவு செய்யபட்டது. அதன்படி, அந்த நபரிடம் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று கூறி, பரிசோதனை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டது. அதன்படி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதல் 10 நாள்களில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. வழக்கமாகத்தான் இருந்தார். ஆனால், நாட்கள் கடந்தன. கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதால் பெரும் பாதிப்புக்கு உள்ளானதாக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, அவரால் மற்றவரை அடையாளம் காணமுடியவில்லை; பேச முடியவில்லை. அவ்வப்போது, அவர் தனது சுய நினைவை இழப்பதாக கூறி நீதிமன்றத்தில் சீரம் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
அந்த மனுவில், ’இப்படியெல்லாம் பின்விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்திருந்தால், மனுதாரர் பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டிருக்கமாட்டார்’ என்று குறிபிட்டப்பட்டிருந்தது.
இதுவரை அனுபவித்த கஷ்டங்களையும், எதிர்காலத்தில் ஏற்படும் சிரமங்களையும் கணக்கில்கொண்டு, மனுதாரருக்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி வழக்கு தொடரப்பட்டது.
இந்த நோட்டீஸூக்கு பதிலளித்து சீரம் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
“மனுதராரின் கூற்று தவறானது. கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை மேற்கொண்ட நபர், தன் மருத்துவப் பிரச்னைகளை காரணம் காட்டி, வேண்டுமென்றே கொரோனா தடுப்பு மருந்து சோதனையின் மீது பழி கூறுகிறார். அவரது சொந்த மருத்துவப் பிரச்னைகளுக்கும், கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கும் சம்பந்தமில்லை என தனி மருத்துவக் குழு மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகும் அவர் வேண்டுமென்றே பொது வெளியில் சீரம் நிறுவனத்தில் பெயரை பாதிக்கும் வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்,” என காரசாரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது சீரம்.
அதுமட்டுமல்லாமல், நோட்டீஸ் அனுப்பியவருக்கு எதிராக 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்ட ஈடு கேட்டு சீரம் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தொகுப்பு: மலையரசு