லாக்டவுனில் தோன்றிய புதிய யுக்தி: கோவை Zucca Pizzeria அருண் குமார்-ன் ப்ராண்ட் ஐடியா!
கொரோனாவால் தொழில் முடக்கம் ஏற்பட்டதால், புதிய யுக்தியை யோசித்து, பிஸ்ஸா கடை விற்பனையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கு அருண் குமார்.
ஒட்டுமொத்தமான தொழில் சூழலையும் கொரோனா மாற்றிவிட்டது என்னும் வார்த்தையை அனைவரும் சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் சிலர் கொரோனாவை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தொழிலை அடுத்து கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளனர். அந்த வகையில் அருண்குமார் விஸ்வேஸ்வரன் பிஸ்ஸா தொழிலில் புதிய மாற்றத்தை செய்திருக்கிறார். இது தொடர்பாக அவருடன் நீணட நேரம் உரையாடினேன்.
இந்தத் தொழிலில் என்ன மாற்றம் என்பதற்கு முன்பு அருண்குமார் இதுவரை என்ன செய்தார் என்பதை தெரிந்துகொள்வோம்.
2002-ம் ஆண்டு கோவையில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்தார் அருண். அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். கிரேட் லேக்ஸ் கல்லூரியில் எம்பிஏ படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் ரிலையன்ஸ் வேலையில் இருந்து விலகி எம்பிஏ படித்தார். அதன்பிறகு ஹெச்சிஎல், டாடா இன்ஃபோகாம் உள்ளிட்ட நிறுவனங்களில் சில ஆண்டுகள் பணியாற்றினார் அருண்குமார்.
இதற்கிடையே உணவுத்துறையில் இருக்கும் ஆர்வம் காரணமாக 2010ம் ஆண்டு கோவையில் ஒரு உணவகம் தொடங்கினார். வேலையில் இருந்துகொண்டே அந்த உணவகத்தையும் கவனித்துகொண்டார். 2012ம் ஆண்டு அந்த உணவகத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு அலுவல் நிமித்தமாக வெளிநாடு சென்றுவிட்டார்.
மீண்டும் இந்தியா திரும்பிய அருண், 2014ம் ஆண்டு Zucca Pizzeria என்னும் பெயரில் கோவையில் பிஸ்ஸா உணவகத்தைத் தொடங்கினார். இந்த முறையில் வேலையில் இருந்துகொண்டே இந்த மையத்தை நடத்திவந்தார். நிறுவனம் சீரான வளர்ச்சியில் இருந்துவந்தது. இந்தச் சூழலில் சதர்லேண்ட் நிறுவனத்தில் இருந்து விலகி இரு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணியாற்றினார். ஆனால் அந்த நிறுவனங்களின் சூழலில் இவருக்கு ஏற்றதாக இல்லை. அதே சமயத்தில் Zucca நிறுவனமும் சீரான வளர்ச்சியில் இருந்தது.
முழு நேரமாக தொழிலில் இருந்தால் மட்டுமே உணவகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும் என்பதால் கார்ப்பரேட் லைஃப்க்கு முழுமையான ஓய்வு கொடுத்துவிட்டு, 2016ம் ஆண்டு இறுதியில் இருந்து உணவகத்தை முழு கவனத்துடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டார் அருண் குமார்.
பிரான்சைஸி
ஒவ்வொரு கிளையையும் நாமே வளர்ப்பதைவிட பிரான்சைஸி மூலம் கொண்டு செல்லும்போது அதிகளவுக்கு விரிவடைய முடியும் என்பதால் பிரான்ஸைசி முறையில் பல நகரங்களுக்கு இந்த பிஸ்ஸாவை கொண்டு சென்றார்.
“ஒரு ஸ்டோர் இருந்த நிலையில் தற்போது மூன்று மாநிலங்களில் 15 ஸ்டோர் என்னும் அளவில் விரிவடைந்திருக்கிறோம். இதில் மூன்று ஸ்டோர்கள் சொந்தமாகவும் மீதமுள்ளவை பிரான்ஸைசி முறையிலும் விரிவாக்கம் செய்யபட்டுள்ளது,” என்றார் அருண்.
இந்த ஸ்டோர்கள் பெரிய அளவிலானவை. சுமார் 25 லட்ச ரூபாய் அளவு முதலீடு தேவை. ஆனால் 18 மாதங்கள் முதல் 24 மாதங்களில் இந்த முதலீட்டை மீண்டும் எடுக்கமுடியும் சூழலில் தொழில் நன்றாக சென்றுகொண்டிருந்தது.
இப்போதுதான் கொரோனா குறித்த செய்திகள் வெளியாகின்றன. அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பொழுதுபோக்கு, சுற்றுலா, ஓட்டல் உள்ளிட்ட துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
“கொரோனாவால் தொழில் முடக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நேரடி விற்பனை இல்லாமல் ஆன்லைன் மட்டுமே நடத்த அனுமதி இருந்ததால் சற்று சிரமமாக இருந்தது. அப்போதுதான் புதிய யுக்தியை யோசித்து, சில மாற்றங்களைக் கொண்டு வர முடிவெத்தேன்,” என்றார் அருண்.
இதற்கு முன்பாகவே சிறிய ஃபார்மெட்டில் பிஸ்ஸா ஸ்டோர்களை நிறுவ அருண் திட்டமிட்டுவந்தார். கொரோனா காலத்தில் அந்த திட்டத்தை அமல்படுத்தினார்.
“சிறிய அளவிலான முதலீட்டில் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகள் இருக்கும் வகையில் இந்த புதிய பிரிவு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. BOCS Pizza என்னும் பெயரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கோவையில் இந்த புதிய பிராண்ட் தொடங்கப்பட்டது.”
BOCS Pizza சிறப்புகள்
வழக்கமாக பிஸ்ஸா என்பது வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் இந்த பிஸ்ஸா சதுர வடிவில் இருக்கும். இதனால் வழக்கமான பிஸ்ஸாவின் அளவை விட 22 சதவீதம் அளவுக்குக் கூடுதலாகக் கிடைக்கும்.
கடைகளில் ரூ.160 முதல் ரூ.300 வரை பிஸ்ஸா விலை இருந்தாலும் கடைகளில் வாங்குபவர்களுக்கு சிறப்பு விலையில் சில குறிப்பிட்ட பிஸ்ஸாகள் வழங்கப்படும். எதேனும் ஒரு வகையிலான வெஜ் பிஸ்ஸா 129 ரூபாய்க்கும், நான் வெஜ் பிஸ்ஸா 149 ரூபாய்க்கும் வழங்கப்படும். தினமும் ஏதேனும் ஒரு வெரைட்டி இந்த விலையில் விற்கப்படும். இவையெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு தரும் சலுகைகள்.
Zucca Pizza பிரான்ஸைசி எடுப்பவர்களுக்கு குறைந்தபட்ச முதலிடு ரூ.25 லட்சம் வரை ஆகும். இந்த பிரான்ஸைசி அமைப்பதற்கு அதிக இடம், அதிக நபர்கள் அதிக வெரைட்டியை உருவாக்க வேண்டும் என்பதால் அதிக முதலீடு தேவைப்படும். ஆனால்,
”BOCS Pizza பிரான்ஸைசி அமைப்பதற்கு ரூ.10 லட்சம் முதலீடு இருந்தால் போதுமானது. சிறிய முதலீடு, குறைந்த பணியாளர்கள் போதுமானது. முதல் ஸ்டோரை சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி இருக்கிறோம். கோவை, ஒசூரில் இதே மாடல் ஸ்டோர்களை இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறோம்,” என்றார்.
வித்தியாசம் என்ன?
இரண்டு பிராண்ட்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதால் பிரான்ஸைசி எடுப்பவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. சிலருக்கு Zucca மாடல் பிடித்திருக்கும், சிலருக்கு BOCS பிடித்திருக்கும்.
அதனால் ஒரே குழுமத்தில் இருந்து இரு வகையான பிஸ்ஸா பிராண்ட் இருப்பது பிரான்ஸைசிதாரர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதேபோல வாடிக்கையாளர்களுக்கும் விலை, வெரைட்டி, சுவைதான் முக்கியமே தவிர யார் நடத்துகிறார்கள் என்பது முக்கியமில்லை.
அடுத்த சில ஆண்டுகளுக்கு BOCS Pizza-வில் அதிக வளர்ச்சி இருக்கும் என கணிக்கிறோம். காரணம் கோவை போன்ற நகரங்களில் 4 Zucca பிஸ்ஸா மையங்கள் மட்டுமே தேவைப்படும். காரணம் இவை Experience மையங்கள்.
ஆனால் கோவையில் நான்கு மடங்கு அளவுக்கு bocs ஸ்டோர்களுக்கான தேவை இருக்கும். இதன் அடிப்படையில்தான் இந்த பிராண்டை வடிவமைத்திருக்கிறோம். வேறு மாதிரி சொல்வதென்றால் Zucca பிஸ்ஸா பெரு நகரங்களுக்கான பிராண்டாக இருக்கும். Bocs பிஸ்ஸா அடுத்தகட்ட, வளரும் நகரங்களுக்காக பிராண்டாக இருக்கும் என அருண் கூறினார்.
கொரோனா சில தாக்கங்களை ஏற்படுத்தி இருந்தாலும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கி இருக்கிறது.