பள்ளிப் படிப்பை தொடர முடியா மாணவர்களுக்கு ஒளி வீசும் அமைப்பு தொடங்கிய வானதி!
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என கூறுவர், ஆனால் ஒரு வேளை உணவு அப்பொழுது பசியை தீர்க்குமே தவிர நிரந்தரமாக இல்லை. ஒருவன் பசியை ஆற்ற மீனை பிடித்து தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுத் தருவதே சிறந்தது.
கற்றலே ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்; அந்த நோக்கில் பணத்தாலும் சமூக வேற்றுமையினாலும் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு எதிர்காலம் தரும் நோக்கில் பள்ளிக் கல்வியை வழங்க 'தட்ஸ் மை சைல்டு' (Thats my child) என்னும் அரசு சாரா தன்னார்வளர் அமைப்பு இயங்கி வருகிறது.
'தட்ஸ் மை சைல்டு' என்னும் அமைப்பின் நிறுவனர் மிஸ் வானதி. கல்வியை தொடர தான் பட்ட கஷ்டங்களை மற்ற குழந்தைகளும் படக்கூடாது என்னும் சமூக அக்கரையில் இவ்வமைப்பை துவங்கியுள்ளார் இவர்.
“என் சிறுவயதில் நிதியால் என் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டபோது என் நண்பர் மூலம் தான் நான் படித்தேன். கல்வியால் தான் இன்று நான் பல நாடுகளில் பணிப்புரிந்து இன்று மற்றவர்களுக்கு கல்வி கொடுக்கும் நிலையில் உள்ளேன்,” என துவங்கிகுறார் வானதி.
Thats my child அமைப்பின் வேலை
அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளியில் படிப்பை தொடர முடியாத, கல்வியில் முன்னேற முடியாத பள்ளி மற்றும் மாணவர்களை தேர்ந்தெடுத்து 7 விதமான திட்டங்கள் கீழ் மாணவர்களை வகைப்படுத்தி கல்வியை தொடரs செய்கின்றனர். கடந்த 5 வருடங்களாக இவ்வமைப்பு செயல்பாட்டில் இருந்து வருகின்றது.
“எங்களுடைய முக்கியக் குறிக்கோள் குழந்தைகள் நிச்சயம் பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டும் என்பது தான். நிதியை காரணம் காட்டி அல்லது குடும்ப சூழலால் எந்த குழந்தையும் படிப்பை நிறுத்திவிடக் கூடாது," என்கிறார் வானதி.
’கனவைத்தொடு திட்டம்’ மூலம், அரசு சார்ந்த பள்ளியிலிருந்து பெற்றோர்கள் இல்லாத அல்லது தாய் வளர்ப்பில் மட்டும் இருக்கும் பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்து கல்வி கட்டணம் செலுத்துவது, வருடமுழுவதும் படிப்பிற்கு வழிகாட்டியாக செயல்படுகிறது இவ்வமைப்பு. அடுத்து அகதிகளாக இருக்கும் குழந்தைகளுக்கும் வழிகாட்டியாகவும் பள்ளிப் படிப்பை தொடர கட்டணம் செலுத்தியும் வருகின்றனர்.
படிப்பைத் தாண்டி வாழ்க்கை வழிகாட்டல், மனநல ஆலசோனை ஆகியவற்றையும் இவ்வமைப்பு பார்த்துகொள்கிறது. மேலும் படிப்பில் ஆர்வமில்லாக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கும் ஸ்போர்ட்ஸ் டே போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளையும் எடுத்து நடத்துகின்றனர்.
“இதைத் தாண்டி பள்ளிக்கு வரும் மாணவர்கள் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பதில்லை. இதற்குக் காரணம் தொலைவில் இருந்து வரும் குழந்தைகள் பசியால் இருப்பதால் தான்.”
இதனால் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிற்றுண்டிகளையும் வழங்குகிறது இவ்வமைப்பு. அடுத்து 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி உடன் இணைந்து புத்தகத்தில் இல்லா அறிவியல் பிராக்டிகல் வகுப்பு எடுக்கின்றனர்.
சென்னை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, கோவை என தமிழகத்தில் சுற்றியுள்ள இடங்களில் தன்னார்வளர்களை வைத்து பள்ளிகளை பார்த்துக்கொள்கின்றனர்.
“இந்த இடங்களில் மாணவர்களுக்கு பள்ளிக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது, அதனால் நம்மால் அவர்களை முன்னேற்றும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஆனால் பொள்ளாச்சியில் இருந்து ஓர் அழைப்பு வந்தது எங்கள் மாணவர்கள் பள்ளிக்கே வருவதில்லை என்று.”
பள்ளிக்கு வந்தால் தானே அவர்களை படிப்பை தொடர விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். பள்ளிக்கு வராத குழந்தைகளை என்ன செயலாம் என்பதை கணிக்க இந்த குழு பொள்ளாச்சி சென்றது. பொள்ளாச்சி கிராமத்தில் நரிக் குறவர், சர்கஸ் பணிபுரியும் குழந்தைகளுக்கு என தனி அரசு இட ஒதுக்கீட்டில் படிக்கும் குழந்தைகள் இவர்கள். சர்கஸ் வேலை செய்யும் பெற்றோர்களின் வருமானம் தங்கள் பிள்ளைகளின் கையில் இருப்பதால் பள்ளிக்கு அனுப்பாமல் குழந்தைகளை பணிக்கு அனுப்பியுள்ளனர்.
“தங்கள் வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்ள சர்கஸ் செய்யவும் பிச்சை எடுக்கவும் குழந்தைகளை அனுப்பிவிடுகின்றனர். இதனால் குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லை. இதனால் அப்பள்ளியை தத்தேடுத்தோம்.”
எல்லாக் குழந்தைகளுக்கும் தங்கள் வாழ்கையை வாழ உரிமை உள்ளது அதனால் மனநல ஆலோசகரை வைத்து பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினர். அடுத்த சந்ததியனர் நல்ல நிலைமைக்கு முன்னேற கல்வி அவசியம் என்பதை தீவிரமாக பெற்றோர்களுக்கு உணர்த்தினர். ஒரு வருடம் முழுவதும் அப்பள்ளிக்கு சேவை செய்து உடுத்த துணி கூட இல்லாத அக்குழந்தைகளுக்கு திருப்பூர் கார்மேன்ட்ஸின் ஸ்பான்சர்ஷிப் மூலம் ஆடைகள் வாங்கிக் கொடுத்து வேண்டிய வசதிகள் செய்து பள்ளிக்கு வரவைத்தனர்.
மேலும் பண்டிகை நாள், ஸ்போர்ட்ஸ் டே என அனைத்தையும் பள்ளியில் நடத்தினர். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மருத்துவ முகாமும் நடத்தினர். இதனால் அரசுத் தரப்பில் இருந்து அப்பளிக்கும் நன்கொடை கிடைத்துள்ளது. மாணவர்களும் பள்ளிக்கும் தொடர்ந்து வருகின்றனர். இதுவே ’தட்ஸ் மை சைல்டி’ன் வெற்றியாக வானதி பார்க்கிறார்.
10 மாணவர்களில் துவங்கி 500 மாணவர்களுக்கு மேல் படிப்பை தொடர இவ்வமைப்பு உதவியுள்ளது. நுற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் இருந்தும் இவ்வமைப்பு தமிழகத்தை சுற்றிலும் இன்னும் பல தன்னார்வலர்களை எதிர்பார்த்துள்ளது. உங்கள் இதர நேரத்தை பிறர் வளர்ச்சிக்கு செலவிட இங்கு அணுகலாம்.