சுருண்டு விழுந்த மூதாட்டி - இழுவை வண்டி மூலம் வீட்டில் சேர்ந்த 9 வயது சிறுவர்கள்!

By YS TEAM TAMIL|12th Jan 2021
சிறுவர்கள் கச்சிதமாக யோசித்து சூழலை சரியாக கையாண்டுள்ளனர்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

ரேஷன் கடைக்கு பொங்கல் பரிசு வாங்கச் சென்ற மூதாட்டி நடக்க முடியாமல் தவித்தபோது, இழுவை வண்டி மூலமாக அவருக்கு உதவிய சிறுவர்களுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்துக்கு அருகிலுள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தில் வசித்து வருபவர் சுப்புலட்சுமி. 75 வயதான மூதாட்டி. தனது மகளுடன் வசித்து வருகிறார். வயது மூப்பின் காரணமாக இவருக்கு அடிக்கடி மயக்கம், மேல்மூச்சு வாங்குவது உள்ளிட்ட பிரச்னைகள் இருந்த வந்தன.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்காக வீட்டிலிருந்து கிளம்பி 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார் சுப்புலட்சுமி.


வீட்டிலிருந்து சுமார் 3 மணி நேரம் நடந்து சென்றதால், இடையில் நடக்க முடியாமல் ஒரு இடத்தில் மயக்கம் வந்துள்ளது. இருப்பினும் கஷ்டப்பட்டு நடந்து சென்றவர், பாதிவழியில் தன்னையே அறியாமல் மயங்கி விழுந்து விட்டார். 


சாலையோரம் மூதாட்டி ஒருவர் மயக்கமான நிலையில், சுருண்டு கிடப்பதைக்கண்ட சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் வசிக்கும் வீரமணி என்பவரது மகன்களான 9 வயதான நிதினும், நிதிஷூம் பாட்டியை மீட்டு வீட்டுக்குக் கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர். இருவரும் தனது வீட்டில் கிடந்த இழுவை வண்டியில் மூதாட்டியை ஏற்றி படுக்கவைத்து அவருடைய வீட்டில் கொண்டு போய் சேர்ந்தனர்.


சிறுவர்களின் இந்த மனிதாபிமானம் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. இந்த தகவலறிந்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் இசக்கியா உள்ளிட்டோர் சிறுவர்களின் வீட்டுக்கே நேரடியாக விசிட் செய்துள்ளனர்.


அங்கிருக்கும் அவரது தந்தை மற்றும் சிறுவர்களை பார்த்து பாராட்டி, அவர்களுக்கு ரொக்கப்பரிசு தொகையும் வழங்கியுள்ளனர்.

சிறுவர்கள்

இந்த சம்பவம் குறித்து பேசியசிறுவர்கள்,

"நாங்களும் அம்மாவும் வந்துகொண்டிருந்தபோது, பாட்டி ஒருவர் நடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சாலையோரத்தில் மயங்கி சுருண்டு கிடந்தார். இதைக்கண்ட நாங்கள் அதிர்ச்சியடைந்து, உடனே பாட்டிக்கு அருகில் சென்று தண்ணீர் தெளித்து எழுப்பினோம். அம்மா, ஸ்கூட்டியில் ஏறுமாறு பாட்டியிடம் சொல்ல, பாட்டியால் ஸ்கூட்டியில் ஏற முடியவில்லை. மிகுந்த களைப்புடனும், சோர்வுடன் இருந்த பாட்டியை எப்படியாவது வீட்டுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

உடனே நாங்கள் இருவரும் வீட்டுக்கு ஓடிச் சென்று இழுவை வண்டியை இழுத்துக்கொண்டு வந்து, பாட்டியை அதில் படுக்க வைத்து அவர் வீட்டில் கொண்டுபோய் சேர்த்தோம்,” என்றனர்.

மூதாட்டியின் இந்த நிலை குறித்து அறிந்து கொண்ட அதிகாரிகள், இனி ரேஷன் பொருட்களை வாங்க கடைக்கு வரவேண்டாம், வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் வர ஏற்பாடு செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.


இதுபோன்ற சமயங்களில் பெரியவர்களே என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும்போது, சிறுவர்கள் கச்சிதமாக யோசித்து சூழலை சரியாக கையாண்டுள்ளனர்.


தொகுப்பு: மலையரசு