அன்று சம்பளம் 1250 ரூபாய்; இன்று தஞ்சாவூரில் இருந்து இயங்கும் சர்வதேச நிறுவன நிறுவனர்!

அன்று சம்பளம் 1250 ரூபாய்; இன்று தஞ்சாவூரில் இருந்து இயங்கும் சர்வதேச நிறுவன நிறுவனர்!

Monday May 01, 2023,

3 min Read

சிறு நகரங்களில் டெக்னாலஜி நிறுவனங்கள் அதிகமாக உருவாகி வரும் காலம் இது. கோவை, தென்காசி, மதுரை, திருநெல்வேலி என பல நகரங்களில் டெக்னாலஜி நிறுவனங்கள்  செயல்பட்டுவருகின்றன.

ஆனால், தஞ்சாவூரில் இருந்து கொண்டு டெக் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்திவருகிறார் தொழில்முனைவர் கந்தா பக்கிரிசாமி. 'BloomfieldX' 'புளூம்பீல்ட்எக்ஸ்' என்ற இவரது நிறுவனத்தின் பெரும்பான்மையான பணியாளர்கள் தஞ்சாவூரில் உள்ளனர். அமெரிக்காவிலும் கணிசமான ஊழியர்கள் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்திருந்தார் கந்தா பக்கிரிசாமி. மீண்டும் அமெரிக்கா செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் அவரை சந்தித்து பேசினேன்.

bloomfiledx founder

தொடக்கம்

தலைஞாயிறு அருகேதான் சொந்த ஊர். அங்கிருக்கும் அரசுப்பள்ளியில்தான் படித்தேன். படித்த முடித்த பிறகு இன்ஜினீரியரிங் சேரவேண்டும், பெரிதாக விழிப்புணர்வு கிடையாது. அப்பாவிடன் கேட்டேன். வீட்டில் இருந்து எந்த கல்லூரி அருகில் இருக்கிறதோ அந்த கல்லூரியில் சேரலாம் எனக் கூறினார்.

அதனால் சண்முகா (தற்போது சாஸ்திரா) கல்லூரியில் சேர்ந்தேன். அப்போதும் எந்த கோர்ஸ் எடுப்பது என்பதில் எனக்குக் குழப்பம். ஆங்கிலம் பெரிதாக தேவைப்படாத இரு பிரிவுகள் மெக்கானிக்கல் மற்றும் சிவில் என நண்பர்கள் கூறினார்கள். அதனால் மெக்கானிக்கல் பிரிவு எடுத்தேன்.

மெக்கானிக்கல் பிரிவு எடுத்தாலும் கம்யூட்டர் வகுப்புக்கு செல்வதிலும் விருப்பம் இருந்தது. படிப்பு முடித்தவுடன் சிஎன்.சி. ஆப்பரேட்டராக வேலைக்குச் சேர்ந்தேன்.

2000ம் ஆண்டில் நான் வாங்கிய சம்பளம் 1250 ரூபாய்.

தற்போதைய சூழலுடன் ஒப்பிட்டு பார்த்தால் பெரிய சம்பளம் போன்று தோன்றும். ஆனால், அப்போது டெக்னாலஜி நிறுவனங்கள் வளரத்தொடங்கிய காலம் என்பதால் டெக்னாலஜி நிறுவனங்கள் நல்ல சம்பளத்தை கொடுத்தன. என்னுடைய பேட்சில் படித்த நண்பர்கள் நல்ல சம்பளம் பெற்றனர். என்னுடன் படித்த பலரும் பல ஆயிரங்களில் சம்பளம் பெற்றிருந்தாலும் நான் குறைவான சம்பளம் பெற்றதற்குக் காரணம் டெக்னாலஜி என்பது புரிந்தது.

அதனால் சி.என்.சி. வேலையில் இருந்தால் அடுத்தகட்டத்துக்கு செல்ல முடியாது என்பதால் அந்த வேலையை விட்டேன்.  

”படிக்கும்போதே கம்யூட்டர் கிளாஸ் போனேன். அதனைத் தொடர்ந்து இந்த வேலையை விட்டு, கம்யூட்டர் வகுப்பு எடுக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு சில ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போதுதான் டேட்டா வேர்ஹவுசிங் பிரிவுக்கு பெரிய தேவை இருந்தது.

அதனால் அது தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன் 2004ம் ஆண்டு அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

நான் மெஷின் ஆப்பரேட்டராக இருக்கும்போது அடிக்கடி பெசண்ட் நகர் பீச்சுக்கு போவேன். அப்போது ஐடி நிறுவனத்தின் அடையாள அட்டையுடன் பலர் அங்கு வருவார்கள். அமெரிக்காவுக்கு போகும் முன்பு நானும் ஐடி பணியாளர் என்பதற்காக அங்கு சென்று வழக்கமாக உட்காரும் இடத்தில் உட்கார்ந்திருந்து அதன் பிறகே அமெரிக்கா சென்றேன், என நினைவலைகளை பகிர்ந்தார் கந்தா.

அமெரிக்காவில் சிஸ்டெக் என்னும் நிறுவனத்தில் பணியாற்றினேன். அங்கு எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. 8 ஆண்டுகளுக்கு மேலே அங்கு இருந்தேன். பல படிகள் உயர்ந்து ’டேட்டா அனல்டிக்ஸ்’ பிரிவுக்கு இயக்குநராகும் அளவுக்கு உயர்ந்தேன். ஓரளவுக்கு பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைந்துவிட்டதால் சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டேன்.

2015-ம் ஆண்டு நண்பருடன் சேர்ந்து பிசினஸ் செய்ய முடிவெடுத்து, நிறுவனம் ஒன்று தொடங்கினோம். அந்த நிறுவனத்தைவிட்டு இரு ஆண்டுகளில் நண்பர் வெளியேறிவிட்டதால் அந்த நிறுவனத்தை 'Bloomfieldx' எனப் பெயர் மாற்றம் செய்து 2017-ம் ஆண்டு முதல் இதே பெயரில் செயல் செயல்பட்டுவருகிறது.
bloomfiledx team

bloomfieldx குழு

ஏன் தஞ்சாவூர்?

இந்தியாவில் தொடங்க வேண்டும் என்றால் சென்னை உள்ளிட்ட எத்தனையோ பெரிய நகரங்கள் உள்ளன. ஏன் தஞ்சாவூர் என பலரும் கேட்பார்கள். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம்,

"நான் வளர்ந்த ஊருக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக சலுகையெல்லாம் இல்லை. இங்கு பல திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்புக்காக சென்னை, பெங்களூரு செல்ல வேண்டி இருக்கிறது. அதனால் இங்கே தொடங்கினேன்.”

இங்கு பணியாளர்கள் கிடைக்கிறார்களா என்னும் சந்தேகம் பலருக்கு இருக்கிறது. ஆனால், பணியாளர்களை விட டேட்டா, மின்சாரம் இவையே பிரச்சினையாக இருந்தது. தவிர ஊழியர்களிடம் நாங்கள் இங்கே இருப்போம் என்பதை புரியவைப்பதிலும் கவனம் செலுத்தினோம். நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தோம்.

”தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் கல்லூரிகளில் இருந்து இளைஞர்களை பணியமர்த்த தேர்ந்தெடுத்தோம். தஞ்சாவூரில் செயல்படுவதால் குறைந்த சம்பளம் வழங்குகிறோம் என நினைக்க தேவையில்லை. துறை வழங்கும் அதே சம்பளத்தை நாங்களும் வழங்குகிறோம். லட்சத்தில் சம்பளம் வாங்குபவர்கள் கூட எங்களிடம் இருக்கிறார்கள்.”

தற்போது சர்வதேச அளவில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். இதில், 65 நபர்களுக்கு மேல் தஞ்சாவூரில் இருக்கிறார்கள், இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். மேலும், ஊழியர்களுக்கு எந்தெந்த வகையில் சலுகை வழங்க முடியுமோ அந்தளவுக்கு வழங்குகிறோம்.

எங்களுக்கு அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். தவிர தஞ்சாவூரை தவிர ஐரோப்பாவிலும் (மூனிச் –ஜெர்மனி) அலுவலகம் இருக்கிறது.

டேட்டா அனடில்க்ஸ் துறையில் முக்கியமான நிறுவனமாக 'Bloomfieldx' வளர்ந்து வருகிறது. விரிவாக்கப் பணிகளில் இருக்கிறோம். டேட்டா அனல்டிக்ஸ் மட்டுமல்லாமல் புராடக்ட் பிரிவிலும் கவனம் செலுத்துகிறோம். தற்போது நிதி திரட்டும் பணியில் இருப்பதால் வருமானம் குறித்த தகவல்களை அறிவிக்க முடியாது, என கந்தா பக்கிரிசாமி தெரிவித்தார்.

”சில விஷயங்களை வேண்டாம் என்று உதறினால்தான் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அந்த 1250 ரூபாய்க்கு வேலை இருக்கிறதே என்று நினைக்காமால் அடுத்த வாய்ப்பை தேடியதால்தான் இன்று புளூம்பீல்ட்எக்ஸ் உருவாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் படித்தவர்கள் மீண்டும் தமிழ்நாட்டிலே அலுவலகம் தொடங்குவதால் உள்ளூர் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ச்சி என பலவகையில் வளர்ச்சி ஏற்படுவது வரவேற்கத்தக்க விஷயம்.