வீட்டிலேயே உங்கள் நகை, பணத்தை பாதுகாக்கும் ‘ஸ்மார்ட் லாக்கர்’ - தஞ்சை நிறுவனம் அசத்தல்!

பொருளாதாரம் வளர்வதால் சிசிடிவி உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு உயர்கிறது. ஆனால் சிசிடிவி குற்றத்தை கண்டுபிடிக்க உதவுமே தவிர குற்றத்தை தடுக்க உதவாது. அதனால் குற்றம் நடப்பதற்கு முன் தடுக்க இது போன்ற ‘ஸ்மார்ட் லாக்கர்’கள் உதவும்.

வீட்டிலேயே உங்கள் நகை, பணத்தை பாதுகாக்கும் ‘ஸ்மார்ட் லாக்கர்’ - தஞ்சை நிறுவனம் அசத்தல்!

Tuesday September 06, 2022,

4 min Read

மனிதனின் தேவையை கண்டறிவதற்கான மெஷன்களையும் இன்னும் பிற உபரகரணங்களை கண்டறிந்தோம். அந்த மெஷின்கள் மட்டுமே போதாதே, அதனுடன் உரையாடி, அவற்றை புரிந்துகொள்ள வேண்டிய தேவையும் தற்போது உருவாகி இருக்கிறது. இந்தப் பிரிவில் பல புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் ஸ்மார்ட் சேஃப் லாக்கர்.

ஸ்மார்ட் லாக்கர் என்றால் என்ன?

எல்லா லாக்கர்கள் போலதான் இந்த ஸ்மார்ட் எலக்ட்ரானிக் சேப் லாக்கரும் இருக்கும். ஆனால், இதை சாதரண சாவி மூலம் இயக்காமல், மொபைல் போனுடன் இணைத்து ஆப் மூலம் மட்டுமே இயக்க முடியும்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இன்குபேஷன் மையத்தில் ஐஓடி (iot) பயன்படுத்தி உருவாகி வருகிறது ‘தும்பிக்கை பிசினஸ் சொல்யூஷன்ஸ்’ எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம். ஆராய்ச்சி, சோதனை என அனைத்தையும் கடந்து தற்போது தங்களின் லாக்கரை வெளியிடுவதற்கு இந்த நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் விக்னேஷ் வடிவலேல் இடம் இந்த தயாரிப்பு குறித்து விரிவாக பேசினோம்.

V Safe locker

V Safe உருவான கதை

கும்பகோணம்தான் என்னுடைய சொந்த ஊர் படித்தது எல்லாமே அங்குதான். பிசினஸ் செய்ய வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது ஆசை என்றாலும் என்ன செய்வது, எப்படி செய்வது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அந்த ஆர்வம் மட்டுமே இருந்தது. வளரவளர பிசினஸ் தொடர்பான புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினேன். சொந்த ஊரில் இருக்கும் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தேன், என்று அறிமுகம் தந்தார்.

காக்னிசென்ட், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை கிடைத்தது. ஆனால், Foxconn நிறுவனத்தில் சேர்ந்தேன்.அப்போது நோகியா நிறுவனத்துக்கான போன்களை செய்யும் ஆர்டர் கிடைத்தது. கேரியரின் ஆரம்பகட்டத்திலே முக்கியமன அனுபவம் அது. இதனைத் தொடர்ந்து ஹெச்பி நிறுவனத்தில் ஓர் ஆண்டு வேலை செய்தேன்.

”என்னுடைய பலம் என்பது செமிகண்டக்டர்தான். அதனால் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமான சிங்கப்பூரில் இருக்கும் குலோபல் ஃபவுண்ட்ரிஸ் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக சிங்கப்பூர் சென்றேன். அங்கு மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். பெரிய நிறுவனத்தில் வேலை செய்தால் ஒரு கட்டத்துக்கு மேல் நம்மால் எதையும் மாற்றவே கற்றுக்கொள்ளவோ முடியாது, என உணர்ந்தேன்.”

இந்த நிலையில், இஸ்ரோவின் செமிகண்டக்டர் பிரிவில் ஒரு வாய்ப்பு உருவானது. அதனால் மொஹாலியில் நான்கு ஆண்டுகள் வேலை செய்தேன். இதற்கு நடுவில் திருமணம், குழந்தை என வாழ்க்கை இயல்பானது. இப்போதுதான் தொழில் குறித்து சிந்திக்கத் தொடங்கினேன்.

அப்போது உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் பெரிய அளவில் வளரவில்லை. அதனால், ‘டிராவல் ஃபுட்டி’ ‘Travel Foodie' என்னும் செயலியை ஆரம்பித்தேன். அதில் என்னென்ன தவறுகள் செய்யக் கூடாதோ அவ்வளவும் செய்தேன். இரண்டு மூன்று லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டது.

யுவர் ஸ்டோரியின் தாக்கம்

இந்த சமயத்தில் (2019) மதுரையில் யுவர் ஸ்டோரி நடத்திய ‘தமிழ்நாடு ஸ்டோரி’ எனும் தொழில்முனைவோருக்கான நிகழ்ச்சி நடந்தது. அப்போதுதான் சிகே குமரவேல், சிவராஜா ராமநாதன் உள்ளிட்ட பலரையும் சந்தித்தேன். அவர்களுடைய பேச்சுகள் அந்த நிகழ்ச்சியின் மூலம் உருவான புரிதல் காரணமாக இனியும் வேலையில் இருப்பதால் எந்த பயனும் இல்லை என முடிவெடுத்து தமிழகம் திரும்பினேன்.

எனக்கு தெரிந்தது எலெக்ட்ரானிக்ஸ்தான். அதனால் எதாவது புராடக்ட் தயாரிப்பு என்பது மட்டுமே உருவாக்கவேண்டும் என்ற தெளிவு இருந்தது. ஆனால், என்ன புராடக்ட் என்பதில் மட்டுமே பல யோசனைகள் இருந்தன.

“இந்த சமயத்தில் ஸ்மார்ட் பொருட்களுக்கான தேவை இருந்தது. அனைவரும் ஸ்மார்ட் வாட்ச் கட்டுகிறோம். அதற்கு பதில் ஸ்மார்ட் ஷூ போட்டுக் கொண்டால் இன்னும் தெளிவாக நம்முடைய காலடிகள் எண்ணலாம் எனத் தோன்றியது. அதில் வேறு சில சிக்கல்களும் இருந்ததன். வேறு என்ன புராடக்ட் உருவாக்கலாம் என்னும்போதுதான் ஏன் ஸ்மார்ட் லாக்கரை உருவாக்கக் கூடாது எனத் தோன்றியது. அப்போது சந்தையில் பெரிய நிறுவனங்களின் லாக்கர் இருந்தாலும் அவை ஸ்மார்ட் லாக்கர் கிடையாது.”

பொருளாதாரம் வளர்வதால் சிசிடிவி உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு உயர்கிறது. ஆனால், சிசிடிவி குற்றம் நிகழ்ந்தபின் அதைக் கண்டுபிடிக்க உதவுமே தவிர குற்றத்தை தடுக்க உதவாது. ஆனால், குற்றத்தை தடுப்பதற்கு ஏதுவான ஒரு சாதனத்தை கண்டறிய திட்டமிட்டோம்.

Viknesh Vsafe

தும்பிக்கை பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனர் விக்னேஷ் வடிவலேல்

2019-ம் ஆண்டின் பாதியில் இதற்கான வேலையை தொடங்கினேன். அப்போது கும்பகோணம் பகுதியில் உள்ள நண்பர்கள் அமிர்த கணேஷ் மற்றும் சதீஷ் ஆகிய நண்பர்களையும் என் நிறுவனத்தில் இணைத்துக்கொண்டேன்.

சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் இன்குபேஷன் மையத்தில் பதிவு செய்தோம். அங்கு செயல்படத் தொடங்கினோம். நாங்கள் சென்ற சில மாதங்களிலே கோவிட் வந்தது. கோவிட் கொஞ்சம் சிரமமான காலகட்டமாக இருந்தாலும், கோவிட் காரணமாக எங்களுடைய புராடக்ட் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தினோம்.

ஸ்மார்ட் லாக்கர் சிறப்பம்சம்

ஸ்மார்ட் லாக்கர் என்றவுடன் பல விஷயங்களை இதில் நாங்கள் ஒருங்கிணைத்தோம். இந்த லாக்கர் பலமானவையாக இருக்க வேண்டும். மொபைல் மூலம் அந்த லாக்கரை திறக்க வைக்க வேண்டும். இதுபோன்ற சிஸ்டம் இருக்கும் பட்சத்தில் அங்கு பேட்டரி இருக்கும். அப்படியானால் அந்த பேட்டரி அதிக நாட்கள் வேலை செய்பவையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அவ்வப்போதுதான் வருவார்கள். ஆனால், அதிக மாதத்துக்கு பேட்டரி தாங்க வேண்டும், இப்படி பல ஆராய்ச்சிகள் செய்து லாக்கரை வடிவமைத்தோம்.

”எங்களுடைய பேட்டரி ஆறு மாதத்துக்கு தாங்கும். மேலும் இது மொபைலில் செயல்படுவது என்பதால் எங்கிருந்து வேண்டுமானலும் செயல்படுத்த முடியாது. உதாரணத்துக்கு சென்னையில் இருக்கும் ஒருவர் தஞ்சாவூரில் இருக்கும் லாக்கரை திறக்க முடியாது. லாக்கர் இருக்கும் இடத்துக்கு அருகில் இருந்தால்தான் அதை திறக்க முடியும். மேலும், ஒரு லாக்கர் ஒரு டிகிரி அளவுக்கு இடம் மாறினால் கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் செல்லும்.”

ஒருவேளை சார்ஜ் தீர்ந்துவிட்டது, லாக்கரை திறக்க முடியவில்லை எனில் ஒரு சாவி கொடுப்போம். ஆனால், அந்த சாவியின் துளை எங்கு இருக்கிறது என்பது வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது. ஒரு பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டுமே சாவி போடுவதற்கான இடம் தெரியவரும். இதுபோல பல பாதுகாப்பு அம்சங்களையும் ஒருங்கிணைத்து இந்த லாக்கரை தயாரித்துள்ளோம் என விக்னேஷ் வடிவேல் தெரிவித்தார்.

Viknesh

V Safe ஸ்மார்ட் லாக்கர் தயாரிப்புக் குழு

SOS Code - லாக்கர் பயன்பாட்டில் அவசர நிலை ஏதும் ஏற்பட்டால் எஸ்.ஓ.எஸ் கோட் பயன்படுத்தி உதவி எண்ணுக்கு அலெர்ட் அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. அதேபோல், மூன்று முறை தவறான் பின் கோட் போட்டு லாக்கரை திறக்க முயற்சித்தால் அது லாக்டவுன் மோடுக்கு போய்விடும், பின்னர் அங்குள்ளவர் லாக்கரை திறக்க இயலாது. இதுபோன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக தெரிவித்தார் விக்னேஷ்.

நிதி சார்ந்த தகவல்கள்

வரும் தீபாவளிக்குள் V Safe லாக்கர் விற்பனையை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். அப்போதுதான் வருமானம் கிடைக்கும். இதுவரை சொந்த நிதியில் இருந்துதான் புராடக்டை உருவாக்கி இருக்கிறோம். இரு அமைப்புகளில் (இடிஐ மற்றும் நிதி பிரயாஸ்) இருந்து ரூ.9.5 லட்சம் நிது உதவி பெற்றிருக்கிறோம். ஆனால், நிதி திரட்டுவது தொடர்பாக சில முதலீட்டாளர்களிடம் பேசி வருகிறோம். புராடக்ட் சந்தையில் அறிமுகம் செய்த பிறகு முதலீடு கிடைக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

இது எவ்வளவு பெரிய சந்தை என்னும் கேள்விக்கு, இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு லாக்கர் சந்தை இருக்கிறது. தவிர ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது, என்றார்.

எங்களுடைய ஒரு லாக்கர் விலை ரூ.20,000. எங்களுடைய பெரும்பானையான விற்பனை டி2சியாகவே (Direct to costumer)  இருக்கும். கணிசமான விற்பனை அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் மூலம் கிடைக்கும். மற்றவை ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலமாகவும் விற்க திட்டமிட்டிருக்கிறோம், என்றார்.

தஞ்சாவூரில் இருந்து நிறுவனம் நடத்துவது எப்படி இருக்கிறது. முதலீட்டாளர்களுடனான பேச்சு வார்த்தை எப்படி இருக்கிறது என்னும் கேள்விக்கு, முதலீட்டாளர்களுடன் பேசும்போது தஞ்சாவூர் என்பது பேச்சின் ஒரு அங்கமாக இருப்பதை தவிர்க்க முடியாது. அவர்களுக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்.

“1000 ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சாவூரில் ஒரு சர்வதேச புராடக்ட் உருவாகி இருக்கிறது அதனால் இங்கிருந்து உருவாக்குவது பெரிய சவால் இல்லை என தெரிவிப்பேன், என்று முடித்துக்கொண்டு விடைப்பெற்றார் விக்னேஷ்.