பட்டிமன்றங்களில் மக்களின் வரவேற்பை பெற்று தனக்கென தனி முத்திரையை பதித்த ஜோடி பேராசிரியர் இரா.மோகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா மோகன். தமிழ் பேராசியர்கள், தமிழக அரசு விருது பெற்ற தம்பதிகள், இலக்கிய எழுத்தாளர்கள், ஆய்வு வழிகாட்டிகள் என்று பன்முக ஒற்றுமைகளை உடையவர்கள். இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது யாரும் அறிந்திராத செய்தி. அரைநூற்றாண்டை நோக்கிய காதல் பயணத்தில் இருக்கும் இவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்தோம்.
முதலில் காதலை யார் சொன்னது என்று நிர்மலா மோகனை நோக்கி ஒரு கேள்வியோடு பேச ஆரம்பித்தோம், சிரித்தவாறே ‘அவர் தான். கல்லூரியில் நான் படித்த நேரம். எம்ஏ படிக்கும் காலத்தில் வாரம் ஒரு நாள் வியாழக்கிழமை பல்கலைக்கழகத்திற்கு வந்து கட்டுரை வாசிப்போம். அப்போது அவர் பல்கலையில் ஆராய்ச்சி மாணவர். அங்கு தான் எனக்கு அவர் அறிமுகமானார். அங்கே அவரும் கட்டுரை வாசிப்பார். நான் கட்டுரை வாசிக்க அவர் ரசிப்பார். அவர் வாசிக்க நான் ரசிப்பேன். இப்படி ஆரம்பித்து முதலில் நட்பாகி பிறகு காதலானது.
அவர் என்னிடம் காதலை சொன்ன விதமே சுவாரஸ்யமானது. ஒரு நாள் கையில் ஒரு புத்தகத்தோடு என்னை பார்க்க வந்தார். நானும் எப்பவும் போல இயல்பாக பேசிக்கொண்டிருந்தேன். திடீரென கையில் வைத்திருந்த புத்தகத்தை என் முன்னால் நீட்டி ’நல் வாழ்வு வேண்டுகிறேன்’ என்று சொன்னார். முதலில் எனக்கு புரியவில்லை. புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதன் தலைப்பு ’நல் வாழ்வு’ என்றிருந்தது. மு.வ வின் புத்தகம் அது. ஒரு புத்தகத்தை கொடுத்து அதன் மூலம் இவ்வளவு அழகாக யாராலும் தன் காதலை வெளிப்படுத்த முடியாது. எப்போதும் புதுமையாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். அது தான் என்னை ஈர்த்தது‘ என்றார் புன்னகையோடு. அருகில் இருந்த இரா.மோகனை பார்த்து காதல் திருமணம் என்றால் வீட்டில் பிரச்னை இருக்குமே அப்படி ஏதாவது நடந்ததா? என்று கேட்டோம்.
நடக்காமல் இருக்குமா? பெரிய பிரச்சினையே நடந்தது. எங்கள் வீட்டில் பிரச்னை குறைவு தான் என்றாலும் அவர்கள் வீட்டில் பூகம்பமே வெடித்தது. ஒரு கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்த கையோடு எனக்கு ஆசிரியர் பணியும் கிடைத்தது. 6 வருடங்கள் என் மனைவி வீட்டாரிடம் தொடர்பு ஏதும் இன்றி இருந்தோம். பல கஷ்டங்களை சந்தித்தோம். ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறகு என் மனைவிக்கும் ஆசிரியர் பணி கிடைக்க வாழ்க்கை மாற்றம் பெற்றது. நல்ல நிலைக்கு வந்து விட்டோம் என்ற நிலையில் ஒரு நாள், அவர்கள் வீட்டிக்கு ஒரு அஞ்சல் அட்டை எழுதி போட்டோம். அதில் நாங்கள் இருக்கும் விலாசம், பார்க்கும் வேலை அனைத்தையும் எழுதி இருந்தோம். அஞ்சல் அட்டை போய் சேர்ந்ததும் ஒரு வழியாக 6 வருட இடைவெளிக்கு பிறகு எல்லாம் சரியானது‘ என்றார் மோகன்.
இதை கேட்டதும் அருகில் இருந்த நிர்மலா மோகன், ‘ என் அப்பா ரொம்பவும் பிடிவாதக்காரர். கடைசிவரை நாங்கள் திருமணம் செய்து கொண்டதை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. காதல், வீட்டிற்கு தெரிந்து பிரச்னை நடந்த நேரத்தில் எங்களுக்கு ஜாதக பொருத்தமே இல்லை இருவரும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று சொன்னவர் 6 வருடங்களுக்கு பிறகு சமாதானம் ஆனார்.
பட்டிமன்றங்களில் தம்பதிகளாக கலந்துகொண்ட போது மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு பற்றி சொல்லுங்கள் என்று நிர்மலா மோகனிடம் கேட்டோம்.
‘அது அற்புதமான அனுபவம், சாலமன் பாப்பையா பட்டிமன்ற நடுவராக இருப்பார். நங்கள் இருவரும் எதிரெதிர் அணியில் இருப்போம். தலைப்புகள் அனைத்தும் குடும்பம் சம்மந்தமான தலைப்பாகவே சாலமன் பாப்பையா அமைப்பார். ஒரு கணவன் மனைவியாக அந்த தலைப்புகளை எதிர்கொள்ளும் போது, அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. எங்கள் இருவருக்கும் ஒரு அங்கீகாரத்தை தேடித்தந்தது. மேடையில் நீயா நானா என்று போட்டியே நடக்கும்'.
வீட்டிலும் இப்படித்தான் சண்டை போடுவீங்களா?!‘ என்று எல்லோரும் கேட்கும் அளவிற்கு காரசாரமாக மேடையில் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம்‘ என்றார் புன்னகையோடு.
மேடையில் மட்டுமல்லாமல் எழுத்துப் பணியிலும் இருவரும் இணைந்திருப்பது பற்றி கேட்டதற்கு, ‘நங்கள் இருவரும் நிறைய புத்தகங்கள், கட்டுரைகள் எழுதி இருக்கிறோம். ஆனால், இருவரும் இணைந்து சிற்பியின் படைப்புலகம், கம்பன் கவியமுது, போன்ற புத்தகங்கள் எழுதி இருக்கிறோம். என் மனைவி அன்புள்ள நிலாவிற்கு என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இதில் இருக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால் நான் திருமணத்திற்கு முன்னால் என் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களில் தொகுப்பு தான் அந்த புத்தகம். தேதி வாரியாக பத்திரப்படுத்தி வைத்திருந்து புத்தகமாக வெளியிட்டார். தமிழ் இலக்கிய உலகில் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் தான் புத்தகமாக வடிவம் பெற்றுள்ளது. ஆனால் முதல் முறையாக காதலிக்கு எழுதிய கடிதம் புத்தகமானது அன்புள்ள நிலாவிற்கு மட்டும் தான்‘ என்று இரா.மோகன் சொல்லி முடிக்க, நீங்கள் எழுதிய கடிதத்தை உங்கள் மனைவி பத்திரமாக வைத்திருந்து புத்தகம் போட்டிருக்கிறார், அப்படி இருக்க, அவர் எழுதிய பதில் கடிதமும் உங்களிடம் இருக்கிறது தானே. என்று அவரிடம் கேட்க, ‘அதெல்லாம் இவரிடம் இல்லை, பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்று சொல்வார், நம்பாதீர்கள், என்று நிர்மலா மோகன் சொல்ல அந்த அறையே சிரிப்பால் நிறைந்தது.
எங்களின் ஒரே பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டவர் தான். காதலிப்பது தவறில்லை அதற்கு தகுதியும் இல்லை. கடைசி வரை ஒற்றுமையோடு விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். காதல் திருமணம் செய்து கொண்டவர்களை இந்த சமூகம் உற்றுப்பார்க்கும். இவர்கள் எப்படி வாழ்கிறார்கள் பார்க்கலாம் என்று. அந்த எண்ணம் எப்போதும் நம் மனதில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் காதல், வாழ்வின் அமிர்தமே என்று முடித்தனர்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
'ஓவியமே சமூகப் பிரச்னைகளை எடுத்துச்சொல்லும் எனது ஆயுதம்'- ஸ்வர்ணலதா நடேசன்
தன்னலமற்ற தமிழ்ச்செல்வியுடன் ஒரு சந்திப்பு!