உலகமெங்கும் விற்பனையாகும் ‘மீன் ஊறுகாய்கள்’ - குமரி மீனவனின் தொழில் முயற்சி!
கன்னியாகுமரி மாவட்டம், முட்டத்தைச் சேர்ந்தவர் நன்மாறன். சமூக சேவகரான இவர், தற்போது தொழில் முனைவோராக அவதாரமெடுத்து தனது UMAMI தயாரிப்புகள் மூலம் சுமார் 13 வகையான மீன் ஊறுகாய் வகைகளைத் தயாரித்து இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் அனுப்பி வைத்து, அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்துள்ளார்.
நமக்குத் தெரிந்த வரை மீன் வாங்கி குழம்பு வைப்போம், பொரித்து சாப்பிடுவோம். கருவாடாக சாப்பிடுவோம். ஆனால், மீனை மதிப்புக்கூட்டி ஊறுகாய் தயாரிக்க முடியும். பல்வேறு வகையான ஆரோக்கியம் மிகுந்த உணவுப் பொருள்களைத் தயாரிக்க முடியும் என்பது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
ஆனால், இதனை சாத்தியமாக்கி இருக்கிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் தொழில் முனைவோர்.
தொழில்முனைவரான சமூக சேவகர்
கன்னியாகுமரி மாவட்டம், முட்டத்தைச் சேர்ந்தவர் நன்மாறன். சமூக சேவகரான இவர், தற்போது தொழில் முனைவோராக அவதாரமெடுத்து தனது UMAMI தயாரிப்புகள் மூலம் சுமார் 13 வகையான மீன் ஊறுகாய் வகைகளைத் தயாரித்து இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் அனுப்பி வைத்து, அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்துள்ளார்.
இதுகுறித்து யுவர்ஸ்டோரி தமிழ் இடம் பேசிய நன்மாறன், நான் ஓர் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது சகோதரர்கள், உறவினர்கள் என அனைவருமே மீனவர்கள்தான். பொதுவாக மீனவர்களின் தொழிலே மீன் பிடித்து விற்பனை செய்வதுதான். ஆனால், விவசாயிகளின் நிலைதான் மீனவர்களுக்கும்.
“ஒரு நாள் நல்ல விலை போகும் மீன்கள், மறுநாள் மிகக் குறைந்த விலைக்குத்தான் விற்பனையாகும். சில நேரங்களில் பிடித்து வந்த மீன்களை வாங்கக்கூட ஆள் இருக்காது. அப்போதுதான் மீன்களை மதிப்புக்கூட்டி, மீன்களில் இருந்து பல்வேறு பொருள்களைத் தயாரித்தால் என்ன என்று யோசித்தேன்,” என்கிறார்.
இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் தேடி, விசாரித்துள்ளார். அப்போதுதான், அவர்கள் பகுதியிலேயே மிக பிரபலமாக கிடைக்கும் மீன் ஊறுகாய்களைத் தயாரிக்கலாமே என அவருக்குத் தோன்றியுள்ளது.
பொதுவாக சந்தைகளில் நான்கைந்து வகை மீன் ஊறுகாய்கள் கிடைக்கின்றன. கேரளம் போன்ற பகுதிகளில் ஆறேழு வகை மீன் ஊறுகாய்கள் கிடைக்கின்றன. எனவே, நாமும் இதேபோல் பல்வேறு வகையான வேதிப் பொருள்கள் கலப்பின்றி மீன் ஊறுகாய் வகைகளை தயாரிக்கலாமே என நன்மாறன் முயற்சித்ததன் பலன்தான் அவரது UMAMI பிராண்ட்.
தற்போது இந்த ப்ராண்டின் கீழ் 13 வகையான பல்வேறு சுவையான மீன் ஊறுகாய்கள் கிடைக்கின்றன. மேலும், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, மீனில் இருந்து சாக்லேட், பிஸ்கெட், கேக், வடகம், முறுக்கு, ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் போன்றவற்றையும் உருவாக்கி, மாதிரிகளாக மட்டும் கடைகளுக்கு வழங்கி வருகிறார்.
நிறுவனம் தொடங்கிய கதை
2017ல், கன்னியாகுமரியில் மணக்குடி என்ற கிராமத்தில் THOMAS SEA FOODS என்ற பெயரில் நான் எனது நிறுவனத்தை தொடங்கினேன். நிறுவனத்தை தொடங்கிய அன்று இரவே, ஓகி புயல் கோரத்தாண்டவமாடி, எனது நிறுவனத்தை துவம்சம் செய்தது.
“மறுநாள் நிறுவனத்தின் சேதத்தை பார்வையிட சென்ற எனக்கு காலில் பலத்த அடி, ஆறு மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்துவிட்டு, மீண்டும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் அதே இடத்தில் நான் எனது நிறுவனத்தை கட்டமைத்தேன்,” என்கிறார்.
உடலுக்கு ஆரோக்கியமான, கெமிக்கல்கள் கலப்பில்லாத, ஊட்டச்சத்து மிக்க திண்பண்டங்களை தயாரித்து வழங்கவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இத்தொழிலைத் தொடங்கியுள்ளார்.
ஆனால், கடும் பொருளாதார சிக்கல்களால் மீன் ஊறுகாய்த் தொழிலை ரிவர்ஸ் மெத்தட் (REVERSE METHOD) இல் தொடங்கியுள்ளார். அதாவது, ஊறுகாய்களை தயாரித்து சந்தையில் விற்பனை செயவதைவிட, முதலில் சந்தையில் தேவையை உருவாக்கி, அதன்பின் தயாரிப்பை வழங்கியுள்ளார்.
முதலில் 5 முதல் 10 கிலோ வரை சாம்பிள் மீன் ஊறுகாய்களை வழங்கியுள்ளார். அதற்கு வாடிக்கையாளர்கள் தரும் ஆதரவைப் பொறுத்து, கூடுதலாக தயாரித்து விற்பனைக்கு வழங்கியுள்ளார். இதுவரை, சுமார் 1000 கிலோ வரை மாதிரியாக மட்டுமே மீன் ஊறுகாய் தயாரித்து வழங்கியுள்ளார் நன்மாறன்.
மீன் உறுகாய் தயாரிப்பு
நான் முதல் 1 வருடம் மீனில் இருந்து தயாரிக்கும் பொருள்கள் குறித்து ஆய்வுகள் மட்டுமே மேற்கொண்டேன். மீனில் இருந்து சாக்லேட் தயாரிக்க முடியுமா என முயற்சித்தேன். இதற்காக உள்ளூர் சந்தை முதல் உலகச் சந்தை வரை தேடித் தேடி ஆய்வு செய்தேன்.
அப்போது சிங்கப்பூரில் மட்டும் கருவாடு மூலம் சாக்லேட் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்துதான், மீன் சாக்லேட், ஐஸ்கிரீம், கூல்ட்ரிக்ஸ் போன்றவற்றை தயாரித்து வெற்றி கண்டேன். ஆனால்,
”முதலில் மீன் ஊறுகாய் தயாரிப்புகளை மட்டுமே விற்பனைக்கு வைத்துள்ளேன். என்னிடம் உள்ள 13 வகை மீன் ஊறுகாய்களும் 13 வகை மீன்களால் செய்யப்பட்ட தனிச்சுவை வாய்ந்த ஆரோக்கியமான உணவாகும்,” என்கிறார்.
நன்மாறனின் UMAMI பிராண்ட் மீன் ஊறுகாய் இன்று தமிழகம், இந்தியா மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியா, கத்தார், கனடா உள்ளிட்ட 16 நாடுகளில் சக்கைபோடு போடுகிறது. ஒரு சில நாடுகளில் இருந்து மொத்தமாகவும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர். இதில் கிடைக்கும் பெரும்பான்மையான வருமானத்தை சமூக சேவைகள் செய்வதற்கே நன்மாறன் செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஆர்வலராகவும் வலம் வரும் நன்மாறன்
வணிகவியல் பட்டதாரியான நன்மாறன், தனது மனைவியோடு இணைந்து கடந்த 22 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நாட்டுப்புற நடனம், நாடகம் போன்றவற்றை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் பணி மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல்,புற்றுநோய், மலேரியா, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நாடகங்கள், சமூகநலத் துறை திட்டங்கள் குறித்த பிரசாரங்கள், வனத் துறை, மீன்வளத் துறை, விவசாயத் துறை திட்டங்கள், மானியங்கள் குறித்து தமிழகம் முழுவதும் சென்று நாட்டுபுறக் கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
”அவ்வாறு புற்றுநோய் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின்போது, ஏராளமானோர் என்னிடம் வந்து மருத்துவ உதவிகள் கேட்டனர். என்னால் முடிந்தளவுக்கு செய்தேன். சில லட்சங்களை கடனாகவும் வாங்கி மருந்துகள் வழங்கி உதவினேன். ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் சமாளிக்க முடியவில்லை. எனவே ஓர் நல்ல லாபகரமான தொழிலைத் தொடங்கி, அதில் கிடைக்கும் வருமானம் மூலம் மிகச் சிறப்பாக சமூக சேவைகள் செய்யலாம் எனத் திட்டமிட்டுள்ளேன்,” என்கிறார் நன்மாறன்.
தற்போது, தனது சொந்த ஊரான முட்டத்தில் சுமார் 7 ஆயிரம் சதுர அடியில் நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளார் நன்மாறன். தமிழக மீன்வள பல்கலைக்கழகம் அவர்களின் லோகோவை UMAMI பிராண்டில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது 500 கிலோ வரை மாதமொன்றுக்கு மீன் ஊறுகாய் தயாரித்து வரும் UMAMI பிராண்ட், அதனை 100, 300, 500 கிராம்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்து வருகின்றனர். விலையும் மீன் தரத்துக்கேற்றார்போல ரூ.95 முதல் 165 வரை உள்ளது. நாளொன்றுக்கு 1000 கிலோ வரை UMAMI மீன் ஊறுகாய்களைத் தயாரிக்க வேண்டும் என்பதே இப்போதைய எதிர்காலத் திட்டமாம்.
ஊறுகாய் தயாரிப்பில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு
எனது நிறுவனத்தில் பெரும்பாலும் மனித சக்தியை பயன்படுத்திதான் ஊறுகாய்களைத் தயாரிக்கிறேன். பொதுவாக மீனவக் கிராமங்களில் ஆண்கள் மீன் பிடிக்கச் சென்று விடுவதால், பெண்கள் வீட்டில் சும்மாதான் இருப்பார்கள். அவர்களுக்கு ஓர் வேலைவாய்ப்பாக இருக்கட்டுமே என பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பணியமர்த்தி வருகிறேன். இது முற்றிலும் பெண்களால் கை தயாரிப்பாக செய்யப்படுவதால், சுவை மிகுதியாக இருக்கும் என்கிறார்.
தற்போது இவரது நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட மகளிர் பணிபுரிந்து வருகின்றனர். எதிர்காலத்தில் இப்பகுதியில் உள்ள 44 மீனவக் கிராமங்களிலும் கடல் உணவுத் தயாரிப்பு நிறுவனங்களை அமைக்கவேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் நிறைய மீனவக் கிராம மகளிருக்கு வேலை வாய்ப்பை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.
எங்களது நிறுவனத்தில் ஜீரோ வேஸ்ட் என்பதே இலக்காகும். உள்ளே வரும் மீன் செதில், குடல், சதை என அனைத்தும் வெவ்வேறு பொருள்களாக மாறி விடும். மீன் கழுவும் தண்ணீர் கூட செடிகளுக்கும், மரங்களுக்கும் பாய்ச்சும்படி திட்டமிடப்பட்டுள்ளது. குடல் போன்ற கழிவுகள் ஆர்கானிக் உரமாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த உரமும் பூந்தோட்டம், காய்கனி, மரங்களுக்கு என தனித்தனி தரத்தில் வழங்குகிறோம். தமிழத்தில் முதல் நம்பர் ஒன், 0 வேஸ்ட் நிறுவனமாக எங்களது நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம் என்கிறார்.
மாற்றுத் திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள் போன்றோர் எங்களோடு இணைந்து தொழில் செய்து லாபம் பெற ஓர் சிறப்பு திட்டமாக அவர்களிடம் மிகச் சிறிய அளவிலான முன்பணம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாணவர் பேக் ஊறுகாய் பாட்டில்களை வழங்கி வருகிறோம். அவர்கள் அதனை அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விற்று, அதில் கிடைக்கும் லாபம் மூலம் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
50 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஊறுகாய்கள் மாணவர்களுக்கும் ஓர் சத்தான உணவுப் பொருள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் ஓர் லாபகரமான தொழில் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிறார் நன்மாறன்.
எதிர்காலத் திட்டம்
மீனவர்களின் மீன்களுக்கு ஓர் நல்ல நிரந்தர விலை கிடைக்க இதுபோன்ற மதிப்புக்கூட்டப்பட்ட நிறைய மீன் உணவுப் பொருள்களை தயாரிக்க வேண்டும் என்பதே எனது எதிர்காலத் திட்டமாகும்.
இதுவரை நான் சுமார் 205 தயாரிப்புகளை உருவாக்கத் திட்டமிட்டு ஆய்வு செய்து வருகிறேன். விரைவில் அனைத்தையும் வெளியிடுவோம். 200 நாடுகளில் எனது UMAMI பிராண்ட் கொடி கட்டி பறக்கவேண்டும் என்பதே எனது லட்சியமாகும்.
இத்தொழிலால் மீனவர்களின் வாழ்வாதாரம் சிறப்பதோடு, ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அனைத்து தரப்பினருக்குமான ஆரோக்கிய உணவான மீனை, மதிப்புக்கூட்டி, அதன் மூலம் பல்வேறு பொருள்களைத் தயாரித்து, உலகளவில் மீன் உணவுப் பொருள்களுக்கான சர்வதேச சந்தையை உருவாக்கி, மீனவர்களும், நுகர்வோரும், உலக மக்களும் வளமும் நலமும் நல்ல ஆரோக்கியமான உணவும் பெற வேண்டும் என்பதே எனது கனவாகும், என்கிறார் நன்மாறன்.
தொடர்புக்கு - Thomas Sea foods -9626606663
ஆழ்கடல் பயணம்; நடுக்கடல் உணவு: மீனவர்களின் மறுபக்கத்தைக் காட்டும் மீனவ யூடிப்பர்!