ஊரடங்கு நீட்டிப்பில் கார் மற்றும் டாக்சி அனுமதி பற்றிய விளக்கம்!
ஆரஞ்சு மண்டலங்களில் மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் குறித்த குழப்பத்தை நீக்குவதற்காக தெளிவான விளக்கம் இதோ.
நாட்டில் கோவிட்-19 நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக்குப் பிறகு, மே 4, 2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
அரசு வெளியிட்ட அறிக்கையில் மண்டலங்களுக்கு அதாவது பச்சை, ஆரஞ்ச் மற்றும் சிவப்புக்கு ஏற்ப வாகன அனுமதி அமைந்திருந்தது. அதில் சில சந்தேகங்கள் இருந்ததால் தற்போது அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு மண்டலங்களில் மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் குறித்த குழப்பத்தை நீக்குவதற்காக தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
ஆரஞ்சு மண்டலங்களில், நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, மாவட்டங்களுக்கு இடையிலும், உள்மாவட்டப் பகுதிகளிலும் பேருந்துகளை இயக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு நடவடிக்கைகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன:
- ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மட்டுமே கொண்டு டாக்சிகள் இயங்க அனுமதிக்கப்படும்.
- தனிநபர்கள் மற்றும் வாகனங்களைக் குறிப்பிட்ட முக்கியமான காரணங்களுக்காக மட்டுமே, மாவட்டங்களுக்கு இடையே இயக்க அனுமதிக்கப்படுகிறது, நான்கு சக்கர வாகனங்களில் அதிகபட்சமாக இரண்டு பயணிகள் மற்றும் ஒரு ஓட்டுநர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
இதர அனைத்து நடவடிக்கைகளும் ஆரஞ்சு மண்டலங்களில், எந்தத் தடையும் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன.
இருப்பினும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அவற்றின் அவசியத் தேவை மற்றும் முன்னுரிமைகள் அடிப்படையில், குறைந்த எண்ணிக்கையிலான செயல்பாடுகளை அனுமதிப்பது பற்றி முடிவு செய்யலாம்.
கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் படிப்படியாக முன்கூட்டியே சிந்தித்து, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து உயர்நிலை அளவில் மறு ஆய்வு செய்து, கண்காணிக்கப் படுகின்றன.
தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகளை (PPE) சரியான வகையில், தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான கூடுதல் வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நேற்று வெளியிட்டது. ‘தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகளை தேவைக்கேற்ப பயன்படுத்துதல்' தொடர்பாக ஏற்கெனவே வெளியிட்டப்பட்ட வழிகாட்டுதல்களின் தொடர்ச்சியாக இவை அமைந்துள்ளன.
நோய் பாதித்தவர்களில் 9950 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1061 பேருக்கு இந்த நோய் குணமாகியுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் 26.65% பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 37,336 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து புதிதாக 2293 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் அண்மைத் தகவல்கள், நுட்பமான விஷயங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் குறித்த தகவல்களுக்கு தயவுசெய்து பின்வரும் இணையதள சுட்டியைப் பாருங்கள் : https://www.mohfw.gov.in/
கோவிட்-19 தொடர்பான நுட்பமான வினவல்கள் இருந்தால் [email protected] என்ற மின்னஞ்சலுக்கும், மற்ற வினவல்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
கோவிட்-19 குறித்த ஏதும் தகவல்கள் தேவைப்பட்டால் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்: +91-11-23978046 அல்லது 1075 (கட்டணமில்லா தொலைபேசிகள்).
தகவல்: பிஐபி