'தொழில்புரட்சியை விட அதிக தாக்கத்தை ஏஐ நுட்பம் கொண்டு வரும்' - ஏஐ ஊழியர் சேவை நிறுவனர் சுரோஜி சாட்டர்ஜி!
யுவர்ஸ்டோரியின் முதல் டெவலப்பர் மாநாடு - DevSparks 2024—இல் பேசிய சுரோஜித் சாட்டர்ஜி, ஏஐ நுட்பத்தால் அதிகரிக்கும் செயல்திறன் நம் வாழ்க்கையையும், பணியையும் மாற்றும் என்று கூறுகிறார்.
ஏஐ நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக உண்டாகும் செயல்திறன் மேம்பாடு தொழில் புரட்சிக்கு பிறகு நவீன வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், மிகப்பெரிய அளவில் செல்வ வளத்தை உருவாக்கும் என்றும் இமா (Ema) இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. சுரோஜித் சாட்டர்ஜி கூறுகிறார்.
“தொழில் புரட்சிக்குப் பிறகு, நவீன வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்குகிறோம்,” என்று யுவர்ஸ்டோரியின் முதல் டெவலப்பர் மாநட்டில் (டெவ்ஸ்பார்க்ஸ் 2024) பேசும் போது சாட்டர்ஜி கூறினார். அமெரிக்காவில் இருந்து வீடியோ இணைப்பு மூலம் பேசினார்.
18ம் நூற்றாண்டின் தொழில் புரட்சி பற்றி குறிப்பிட்டவர்,
“நிகர உற்பத்தி ஒரு சதவீதம் உயர்ந்தது, இது மிகப்பெரியதாக இருந்தது. மக்கள் வாழ்க்கை, பூகோள அரசியல், என எல்லாவற்றையும் தொழில் புரட்சி மாற்றியது. அது மேலும் வளத்தை உண்டாக்கியது,” என்கிறார்.
ஏஐ குறிப்பாக ஆக்கத்திறன் ஏஐ, நவீன வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமாக அமைந்து, மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார். நிறுவனங்களுக்கான வாய்ப்பு பற்றி குறிப்பிட்டவர், இன்று பெரும்பாலான நிறுவனங்கள் செயல்திறன் பெற்றிருக்கவில்லை, பல நிறுவனங்கள் தானியங்கிமயத்தை பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
நிறுவனங்கள் தானியங்கிமயத்தை அதிகம் பயன்படுத்தியிருந்தால், 1 லட்சம் கோடி டாலர் முதல் 10 லட்சம் கோடி டாலர் வரை செல்வ வளத்தை உருவாக்கும் வாய்ப்பை பெற்றிருக்கலாம் என்கிறார் சாட்டர்ஜி.
"இங்கு தான் இந்திய டெவலப்பர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறார். ஆக்கத்திறன் ஏஐ கொண்டு, 100 ஊழியர்கள் கொண்ட நிறுவனங்கள் பில்லியன் டாலர் மதிப்பீடு பெறுவதை காணும் வாய்ப்பு உள்ளது," என்கிறார்.
இதன் தாக்கத்தை நாம் இன்னமும் முழுமையான உணரவில்லை. ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம். 2030 வாக்கில், இது தொழில் புரட்சியை விட அதிக தாக்கம் ஏற்படுத்தி, செல்வ வளம் உருவாக்கல் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்கிறார்.
அமெரிக்காவை தலைமையமாகக் கொண்ட இமா, (எண்டர்பிரைஸ் மிஷின் அசிஸ்டண்ட் என்பதன் சுருக்கம்), சாட்டர்ஜி, செளவிக் சென், ஸ்வாதி திரிஹன் ஆகியோரால் துவக்கப்பட்டது.
இந்த ஏஐ ஸ்டார்ட் அப், பணி செயல்முறையை சீராக்கி, செலவுகளை குறைத்து, வளர்ச்சி செயல்முறையை வேகமாக்கும் நிறுவன தீர்வுகளை வழங்குகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், நிறுவனம் பல்வேறு துறைகளில் சிக்கலான பணிகளை செய்யும் திறன் கொண்ட யூனிவர்சல் ஏஐ ஊழியர் சேவையை அறிமுகம் செய்தது.
“ஏஐ மென்பொருளை உருவாக்குவது சவாலானது- ஏஐ பொறுப்பானதாக இருக்க வேண்டும். சார்பு அல்லது பிழை தகவல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். ஏஐ உடன் பயனாளிகள் இணக்கமாக இருக்க டெவலப்பர்கள் அனுமதிக்க வேண்டும், இறுதியாக, சூழல் மற்றும் மக்களிடம் இருந்து மென்பொருள் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்கிறார்.
இந்த ஏஐ ஊழியர் மனிதர் ஊழியரை பிரதியெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. உரையாடலில் ஈடுபட்டு, சூழலை புரிந்து கொண்டு, எதிர்வினைகளை ஏற்று அதற்கேற்ப செயல்படும் திறன் கொண்டது. இதன் மூலம் பயனாளிகள் சிறந்த முடிவு எடுக்க முடியும். சிக்கலான திட்டங்களில் மனிதர்களுடன் ஏஐ இணைந்து செயல்படுவதும் சாத்தியமாகும்.
பொறுப்பான மனிதர்களால் தான் பொறுப்பான ஏஐ சேவையை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.
“டெவலப்பராக, மனித விழுமியங்களுடன் பொருந்தும் சேவைகளை உருவாக்குவது மிகவும் அவசியம். ஏஐ சேவையை மனம் போன போக்கில் உருவாக்க முடியாது. அது பொறுப்பானதாக இருக்க வேண்டும். மென்பொருள் தனது சூழல் மற்றும் நிறுவனத்திற்கு ஏற்ப மாறும் திறனும் கற்றல் திறனும் கொண்டிருக்க வேண்டும். தொடர் பரிணாமம், மாறும் தன்மை பொறுப்பான ஏஐ சேவைக்கு முக்கியம்,” என்றும் கூறினார்.
இந்நிறுவனம், அக்சல், செக்ஷன் 32, போர்சஸ் வென்சர்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 25 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
ஃபேஸ்புக் முன்னாள் சி,ஓ.ஓ., ஷெரில் சாண்ட்பர்க், ஃபேஸ்புக் இணை நிறுவனர் டஸ்டின் மோஸ்கோவிட்ஸ், யாஹு இணை நிறுவனர் ஜெரி யங், ரிபிட் கேபிடல் நிறுவனர் மிக்கி மல்லா, ஸ்னோபிளேக் சி.இ.ஓ ஸ்ரீதர் ராமசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஆதரவையும் பெற்றுள்ளது.
இந்திய மென்பொருள் துறை பொதுவாக குறைந்த செலவு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது. இந்த மாதிரியை ஆக்கத்திறன் ஏஐ மாற்றும் திறன் கொண்டது என்கிறார் சாட்டர்ஜி.
“இந்த மாற்றத்திற்கு ஏற்ப செயல்பட பல பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுகிறோம். ஐஐடிகள் மற்றும் முன்னணி கல்லூரிகள் சில ஆக்கத்திறன் ஏஐ பாடத்திட்டங்களை வழங்கினாலும் பல கல்லூரிகளில் இவை வழங்கப்படவில்லை. கல்வி நிறுவனங்களில் இந்த பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும்,” என்கிறார்.
இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலம் நம்முடையது என்றும் உறுதியாக கூறினார்.
ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்
“எனது நடுத்தர வர்க்கப் பின்புலம்தான் உறுதுணை!” - மனம் திறக்கும் சுந்தர் பிச்சை
Edited by Induja Raghunathan