மாதம் 8 கோடி ரூபாய் மதிப்பு ஆயுர்வேதத் தயாரிப்புகளை விற்பனை செய்யும் ‘தாத்ரி’
2003-ம் ஆண்டு சாஜிகுமார் பொறுப்பேற்று தொடங்கிய தாத்ரி ஆயுர்வேதா பிராண்டின் ஹேர் ஆயில் தயாரிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து நுகர்வோர் தேவைக்கேற்ற பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
சாஜிகுமாரின் தாத்தா பரமேஷ்வர வைத்தியர் கேரளாவின் காயம்குளம் பகுதியில் கிளினிக் வைத்திருந்தார். சாஜிகுமார் ஆயுர்வேத மருந்து தயாரிப்பைப் பார்த்து வளர்ந்ததால் இளம் வயதிலேயே ஆயுர்வேதத்தில் ஆர்வம் பிறந்தது. ஆயுர்வேத மருத்துவர் ஆகவேண்டும் என்கிற கனவும் சிறு வயதிலேயே தோன்றியது.
பரமேஷ்வர வைத்தியர் பாரம்பரிய ஆயுர்வேத மருந்தான 'தாத்ரி’ (Dhathri) நிறுவினார். இந்த ஆயுர்வேத செயல்முறைகள் பல தலைமுறைகளைக் கடந்து சாஜிகுமாரை வந்தடைந்தது.
“திருவனந்தபுரம் ஆயுர்வேத கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு தாத்ரி ஆயுர்வேத மருத்துவமனைக்கும் காயம்குளம் பகுதியில் உள்ள பஞ்சகர்மா மையத்திற்குப் பொறுப்பேற்றேன்,” என்று எஸ்எம்பிஸ்டோரி இடம் சாஜிகுமார் தெரிவித்தார்.
2003-ம் ஆண்டு இந்த மருத்துவர் தொழில்முனைவர் ஆனார். தாத்ரியின் பாரம்பரிய தயாரிப்பு முறையின் மீது இவருக்கு நம்பிக்கை இருந்தது. இதனால் ஆயுர்வேதத் தயாரிப்புகளுக்கான நுகர்வோர் பிராண்டாக 'தாத்ரி ஆயுர்வேதா’ முயற்சியைத் தொடங்கினார்.
இன்று தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மூலிகை மற்றும் ஆயுர்வேத தயாரிப்புகளாக 'தாத்ரி ஆயுர்வேதா’ உருவாகியுள்ளது. தனிநபர் பராமரிப்பு மற்றும் அழகுப் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
இதன் மாதாந்திர வணிக மதிப்பு 8 கோடி ரூபாய் என்கிறார் சாஜிகுமார். கோவிட்-19 பல்வேறு வணிகங்களைப் பாதித்திருந்தாலும்கூட தாத்ரி ஓராண்டில் 40 சதவீதம் வரை வளர்ச்சியடைந்துள்ளது. 2 ஆண்டுகளில் 200 கோடி ரூபாய் டர்ன்ஓவர் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனை தொடங்கி நுகர்வோர் பிராண்ட் வரை…
தாத்ரியின் தயாரிப்புகளில் ஒன்றான ஹேர் ஆயில் மிகவும் பிரபலமானது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த எண்ணெய் தலைப்பகுதி மற்றும் உச்சந்தலையில் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிகிச்சைக்காகக் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சை காலம் முடிந்த பிறகும் மக்கள் இதைப் பயன்படுத்த ஆர்வம் காட்டினார்கள்.
“ஹேர் ஆயில் பற்றிய தகவல் மக்களிடையே பரவத் தொடங்கியது. இதற்கான தேவை அதிகரித்தது. தாத்ரி ஆயுர்வேத மருத்துவமனையின் ஹேர் ஆயிலை அனைவரும் பயன்படுத்த விரும்பினார்கள். இதன் பலன் ஒரு சிலரை மட்டும் சென்றடைவது நியாயமல்ல என்றும் பலரிடம் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் நினைத்தேன். இந்த வாய்ப்பை உணர்ந்ததால் இதை சந்தைப்படுத்த விரும்பி தாத்ரி ஆயுர்வேத பிராண்ட் தொடங்கினேன்,” என்கிறார் சாஜிகுமார்.
அப்போது தொடங்கியது தாத்ரியின் பயணம். இன்று ஹேர் கேர் மற்றும் சருமப் பராமரிப்பு தொடர்பான பல்வேறு தயாரிப்புகளை தாத்ரி வழங்குகிறது. 300 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ஆயுர்வேத தயாரிப்புகளை ஆராய்ந்து உருவாக்க பிரத்யேக குழு இயங்கி வருகிறது.
இது அதிக முதலீடு தேவைப்படும் பிரிவு. இதனால் ஆரம்பத்தில் நிதி தொடர்பான சிக்கல்கள் இருந்தன. இந்நிறுவனம் சுயநிதியிலேயே தொடங்கப்பட்டது.
ஹேர் ஆயில் போன்ற ஆரம்பத் தயாரிப்புகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவியது. கேரள அரசின் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு (KSIDC) போன்ற அமைப்புகளின் மூலம் ஆதரவு கிடைத்தது. இது நெல்லாட் பகுதியில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைக்கத் தேவையான நிதி திரட்ட உதவியது.
தயாரிப்பு தொடர்புடைய உத்தி
சாஜிகுமார் மருத்துவமனையை நடத்தியதால் நோயாளிகளின் பிரச்சனைகளைக் கேட்டறிவது எளிதாக இருந்தது. இந்தப் பிரச்சனைகளை ஆய்வு செய்து ஆயுர்வேத தயாரிப்புகள் மூலம் தீர்வை வழங்கியுள்ளார்.
“எங்கள் ஆர்&டி மற்றும் வணிக உத்திகளுக்கு இந்த நுண்ணறிவு அடிப்படையாக இருந்தன. இதைக் கொண்டே வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தயாரிப்புகளை உருவாக்கி வழங்க முடிந்தது,” என்றார்.
கேரளாவின் நெல்லாட் மற்றும் காயம்குளம் பகுதிகளில் தாத்ரி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. மேலும் உத்தர்காண்ட், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளிலும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
“எங்கள் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறப்படுகின்றன. இவர்கள் தரமான மூலிகைகள் வழங்குவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இந்த மூலப்பொருட்களை இவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பிறகு எங்கள் ஆய்வகத்தில் பிராசஸ் செய்கிறோம்,” என்றார்.
பின்னர் பாரம்பரிய ஆயுர்வேத முறைப்படி தொழிற்சாலைகளில் மொத்த உற்பத்தி நடைபெறுகிறது.
“உதாரணத்திற்கு எங்கள் முக்கியத் தயாரிப்பான தாத்ரி ஹெர்பல் ஆயில் ஸ்நேகா பக்கா விதி, க்ஷீரா அவர்த்தி ஆகிய ஆயுர்வேத செயல்முறைகளின்படி தயாரிக்கப்படுகின்றன. இதில் தயாரிப்பின்போது ஈரப்பதம் சேராமல் இருக்கும் வகையில் சரியான மூலப்பொருட்கள் சரி விகிதத்தில் சரியான முறையில் கலக்கப்படுகிறது,” என விவரித்தார்.
மிகச்சிறந்த பலன் கிடைக்கவும் தரத்தை உறுதி செய்யவும் மூலப்பொருட்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒன்றாகக் கலக்கப்படாமல் 21 நாட்கள் வரை ஒவ்வொன்றாக சேர்க்கப்படுகின்றன.
சந்தை நிலை
தாத்ரி பிராண்ட் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பிரபலமாகியுள்ளது. இந்த பிராண்ட் செயல்படும் ஆயுர்வேத சந்தை தற்போது தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது.
இந்திய நுகர்வோர் ரசாயனங்கள் கலந்த தயாரிப்புகளைத் தவிர்த்து வருகிறார்கள். இதனால் இந்தியாவில் ஆயுர்வேத சந்தை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018-ம் ஆண்டில் 30,000 கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பு 2024-ம் ஆண்டில் 71,087 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள்
“கொரோனா பெருந்தொற்று காரணமாக பல வணிகங்கள் நெருக்கடியை சந்தித்தபோதும் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதால் இந்தச் சூழலிலும் நாங்கள் வளர்ச்சியடைந்துள்ளோம்,” என்கிறார் சாஜிகுமார்.
கோவிட்-19 பெருந்தொற்றால் தாத்ரியின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த பிராண்ட் ஹேண்ட்வாஷ் மற்றும் சானிடைசர் தயாரிப்புகளில் கவனத்தை செலுத்தி வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியது.
“நாங்கள் 40 சதவீத வளர்ச்சியை எட்ட இது உதவியது. கொரோனா பாதிப்புகளால் மக்கள் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் வரும் நாட்களில் எங்களது ஆயுர்வேத தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்,” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சாஜிகுமார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா