‘எனக்கு சாதத்துடன் சிக்கன் கறி, சூடான ரசம் கிடைக்குமா’ - தோனி பற்றி பிரபல செஃப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
தல தோனி பற்றி பிரபல சமையல் கலைஞர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தல தோனி பற்றி பிரபல சமையல் கலைஞர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 சீசனில் வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை தட்டித்தூக்கியதில் இருந்தே ட்விட்டர், ஃபேஸ்புக் என எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் தல தோனி பற்றிய செய்தியாகவே உள்ளது.
ஐபிஎல்லில் வென்ற மகிழ்ச்சியை கொண்டாடி தீர்த்த ரசிகர்களுக்கு அவரது காலில் காயம் ஏற்பட்டதும், கால் முட்டியில் ஏற்பட்ட காயத்திற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தல தோனி மெல்ல, மெல்ல தேறி வரும் இந்த சமயத்தில், பிரபல சமையல் கலைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள சுவாரஸ்ய சம்பவம் ட்விட்டரில் தோனி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மிஸ்டர் கூல் தோனி:
சென்னை ரசிகர்களால் “தல” என்றும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் “மிஸ்டர் கூல்” என்றும் கொண்டாடப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இதற்குக் காரணம் கிரவுண்ட்டில் என்ன தான் ஆட்டம் தீயாய் இருந்தாலும், தோனியின் முகத்தில் துளி டென்ஷனையும் பார்க்க முடியாது. எப்போர்ப்பட்ட இக்கட்டான தருணத்தையும் மெல்லிய புன்னகையோடு கூலாக ஹேண்டில் செய்வதில் வல்லவர் என்பதால் தான் தோனியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதல் கடைநிலை ரசிகர்கள் வரை “மிஸ்டர் கூல்” எனக் கொண்டாடுகிறோம்.
தற்போது விளையாட்டு மைதானத்தில் மட்டுமல்ல, வாழ்வின் அனைத்து தருணங்களிலும் தோனி மிஸ்டர் கூலாக தான் வலம் வந்துள்ளார் என்பதை நிரூபிக்கும் தருணத்தை செஃப் சுரேஷ் பிள்ளை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தோனிக்கு பிடிக்காத உணவு:
அக்டோபர் 31, 2018. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து ஆட, திருவனந்தபுரத்தில் கோவலம் லீலா ஹோட்டலில் தங்கினர். அங்கு நான் சீப் செஃப் ஆக இருந்தேன், என செஃப் சுரேஷ் பிள்ளை அன்று நடந்ததை பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நல்ல சாப்பாட்டுப் பிரியர். சிக்கன் சம்பந்தமான உணவுகள் என்றால் கொள்ளைப்பிரியர். குறிப்பாக தனக்கு சிக்கன் பட்டர் மசாலா பிடிக்கும் என அவரே தனது ட்விட்டர் பயோவில் குறிப்பிட்டுள்ளார். சிக்கன் பிரியரான தோனிக்கு, சீ ஃபுட் எனப்படும் கடல் உணவுகள் துளியும் ஆகாதாம்.
இதைக் கேட்கும் போது, “என்னடா இது... சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுக்கு சீ ஃபுட்ன்னா அலர்ஜியா??” என ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆனால், அவருக்கு துளியும் பிடிக்காத கடல் உணவை தல தோனிக்கு பரிமாறிய செஃப்பை அவரே நேரில் அழைத்து என்ன சொன்னார் தெரியுமா? என்பதை தான் செஃப் சுரேஷ் பிள்ளை பகிர்ந்துள்ளார்.
தோனி பற்றி பகிர்ந்த செஃப் சுரேஷ் பிள்ளை
2018 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது திருவனந்தபுரத்தில் இந்திய அணிக்காக ஸ்பெஷலான கடல் உணவு ஒன்றை செஃப் சுரேஷ் பிள்ளை தயார் செய்துள்ளார். தோனிக்கு தான் கடல் உணவு என்றாலே அலர்ஜியாகிட்டே. உடனடியாக இந்த தகவலை அதனை தயார் செய்த செஃப்பிடம் சொல்ல வேண்டுமென தோனி முடிவெடுத்துள்ளார். அதுவும் நேரில் தெரிவிக்க நினைத்துள்ளார்.
தல தோனி தன்னை ஓட்டல் அறைக்கு அழைத்ததை நம்ப முடியவில்லை என பதிவிட்டுள்ள சுரேஷ் பிள்ளை,
“ஓட்டல் ரூமில் இருந்து கிட்சனுக்கு கால் வந்தது. பேசியது தோனி. ஒரு கணம், நான் உறைந்து போனேன். அவரை நான் தினமும் டி.வி.யில் பார்த்து ரசித்திருக்கிறேன். அவர் என்னை தனது அறைக்கு அழைத்தார், லிப்டுக்காக கூட காத்திருக்காமல் மூன்றாவது மாடியை நோக்கி படிக்கட்டுகளில் ஓடினேன்...” என்கிறார்.
அறைக்குள் கால் வைத்ததும், எப்போதும் போல் சின்ன ஸ்மைல் உடன் தோனி அவரை வரவேற்றுள்ளார். இரவு உணவு என்ன என்பது குறித்து கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் பிள்ளை, கடல் உணவு தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். உடனே தோனி அவரிடம் தனக்கு கடல் உணவால் ஏற்பட்ட ஒவ்வாமை குறித்து விளக்கி, தனக்கு இரவு உணவிற்கு சாதத்துடன் சிக்கன் கறி தர முடியுமா? என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"எனக்கு கொஞ்சம் சாதத்துடன் சிக்கன் கறி கிடைக்குமா? அதோடு, தொண்டை புண் இருப்பதால் கொஞ்சம் காரமான ரசம் கிடைத்தாலும் நன்றாக இருக்கும்...” என்றார்.
தோனியின் இந்த வேண்டுகோளால் திக்குமுக்காடிப்போன சுரேஷ் விறுவிறுவென சமையலறைக்கு விரைந்தார். வெறும் 20 நிமிடங்களில் தோனி கேட்ட சாப்பாட்டுடன் அறைக்கு திரும்பியுள்ளார்.
"சுமார் 20 நிமிடங்களில், நான் மீண்டும் அறை எண்.302க்கு செட்டிநாடு சிக்கன், பாசுமதி அரிசி, வறுத்த பப்படம் மற்றும் மிளகு பூண்டு ரசம் ஆகிய உணவுடன் சென்றேன். தோனி தனது தட்டில் இருந்த உணவை ருசித்து சாப்பிட்டார். அதற்காக எனக்கு நன்றியும் கூறினார்...”
அத்துடன் மறுநாள் காலையில் ஒட்டல் அறையில் இருந்து ஜிம்மிற்கு செல்லும் வழியில் தோனி, செஃப் சுரேஷ் பிள்ளையை நேரில் சந்தித்து தனக்கு இரவு உணவு மிகவும் பிடித்திருந்ததாக கூறியுள்ளார். அந்த தருணத்தில் கடவுளையே நேரில் பார்த்தது போல் இருந்ததாக செஃப் சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த ட்விட்டர் பதிவை அதிக அளவில் தோனி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர், கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாட்டப்படும் பிரபலம் என்ற தலைக்கணம் ஏதும் இன்றி, சாமானிய மனிதர்களிடம் தோனி பழகும் விதமும், நடத்தையுமே அவரது புகழுக்கு காரணம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கோபத்தில் கொந்தளித்த ‘மிஸ்டர் கூல்’ - தோனி பற்றி ரகசியம் பகிர்ந்த முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர்!