வாழ்க்கையை மாற்றிய அந்த வாட்ஸ்அப் மெசேஜ்: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்த உதவி என்ன?
சந்தீப் நந்தூரி ‘முன்மாதிரி ஆட்சியர்’ என்று அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டவர்!
முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஜெகநாதன், மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப்'பில் ஒரேயொரு மெசேஜ்தான் அனுப்பினார். அந்த மெசேஜ்தான் அவரது மொத்த வாழ்க்கையையும் மாற்றியுள்ளது.
சந்தீப் நந்தூரி சிறந்த ஆட்சியர் என மக்களால் போற்றப்படக்கூடியவர். அவரது கடந்த கால உதவிகளைக்கொண்டு இதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியில் முன்னேற ஆட்சியர் அலுவலகத்திலேயே ‘ட்ரீம் கிச்சன்’ உணவகத்தை ஆரம்பித்தார்.
அதுமட்டுமல்லாமல், திருநங்கைகளுக்கு வீடுகளையும், பால் பண்ணையையும் அமைத்துக் கொடுத்தார். இதனால், 'முன்மாதிரி ஆட்சியர்’ என்று அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டவர். கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியதால் ‘சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர்’ விருதையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் 16-ஆம் தேதி முதல் திருவண்ணாமலை ஆட்சியராக பொறுப்பேற்றவுடன் புயல் பாதிப்பு பகுதிகளில் போர்கால அடிப்படையில் களப்பணியாற்றிய சந்தீப் நந்தூரி ஆதரவற்றக் மூன்று குழந்தைகளையும் தாயுள்ளத்தோடு காப்பாற்றி அரசின் ’தொட்டில் குழந்தை’ திட்டத்தில் சேர்த்தார். அதோடு, ஜவ்வாது மலை பழங்குடியின மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் உதவிகளைச் செய்துள்ளார்.
இந்நிலையில்தான், தற்போது திருவண்ணாமலை மாவட்டம் ஆவியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத உதவிகளை செய்திருக்கிறார் ஆட்சியர் சந்தீப்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். அவரது தந்தை கூலித்தொழிலாளி. அவருக்கு எப்போதாவதுதான் வேலை கிடைக்கும். முதுகுத் தண்டுவட பாதிப்பட்டு மாற்றுத்திறனாளியாக கஷ்டபட்டுக்கொண்டிருக்கிறார்.
ஜெகநாதனுடன் பிறந்த மூன்று சகோதரிகளில் ஒருவருக்கு திருமணமாகிவிட, இரண்டு சகோதரிகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் தங்கை சத்யாவின் படிப்புக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். அப்போது இறுதியாண்டுப் படிக்கும் தனது தங்கை சத்யாவின் கல்விக்கட்டணத்தை செலுத்த உதவிக்கேட்டு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு வாட்ஸ் அப்பில் ஒரேயொரு மெசேஜ் அனுப்பி கோரிக்கை வைத்துள்ளார் ஜெகநாதன்.
உடனே, அலுவலகத்திற்கு தங்கையுடன் வாருங்கள் என்று பாசிட்டிவ் ரிப்ளை செய்துள்ளார் ஆட்சியர். தனது மெசேஜூக்கு உடனே ரிப்ளே கிடைத்ததை நினைத்து பூரிப்படைந்த அவர், உடனே. தனது தங்கையை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
”உங்கள் வறுமையான சூழலிலும் தங்கையின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்த நல்லெண்ணம் பாராட்டுக்குரியது. அதனால், உங்கள் தங்கையின் கல்விக்கட்டணம் மட்டுமல்ல, உங்களுக்கும் வீல் சேரை கொடுக்கிறோம்,” என்றார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 78 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீல்சேரையும் ஜெகநாதனுக்கு வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறார். ’கடவுளாய் வந்து என்னை காப்பாற்றிருக்கிறீர்கள்’ என கண்ணீர் மல்க ஆட்சியருக்கு ஜெகநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஒரு அரசு சார்ந்த கையெழுத்துகளை வாங்கவே அரசு அதிகாரிகளிடம் நடையாய் நடக்கவேண்டும். ஆனால், ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜில் வாழ்க்கையையே மாற்றிக்காட்டிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு திருவண்ணாமலை மாவட்டமே பாராட்டி வருகிறது.