'டூ நத்திங்' விவசாய முறையில் மாதம் ரூ.45,000 ஈட்டும் தம்பதி!
'டூ நத்திங் ஃபார்மிங்' ('எதுவும் செய்யாமலிருக்கும் வேளாண்மை') முறையில் விவசாயம் மேற்கொண்டு, இயற்கையோடு இணைந்து வாழ்ந்து மாதத்திற்கு ரூ45,000 ஈட்டி வாழ்வதாரத்தை ஏற்படுத்தி, பிறருக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர் இன்ஜீனியர்- டாக்டர் தம்பதி.
உலகின் பல்வேறு இடங்களிலும், வெவ்வேறு முறைகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், மண்ணில் வேதிப்பொருள்களைப் புகுத்தி, இயற்கையை இரணப்படுத்த விரும்பாத மக்களின் தேர்வாக உள்ளது இயற்கை வேளாண்மை. இயற்கை வேளாண்மை என்பது இயற்கையின் இதயத்தை காயப்படுத்தாமல், இயற்கையின் போக்கிலே இணைந்து விவசாயம் செய்வது ஆகும்.
ஜப்பானைச் சேர்ந்த, 'இயற்கை வேளாண்மையின் தந்தை'யான மசானபு ஃபுகோகா, அவரது ''ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் நூலின் வழியாக, இவ்வுலகிற்கு, இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமையை எடுத்துரைத்தார். அவர் வழி பின்பற்றி முன்மாதிரியாக விளங்குகின்றனர் தமிழகத்தை சேர்ந்த இன்ஜீனியர்-டாக்டர் தம்பதியினரான, 'ஹரிவர்தா பிரஜீத் - மங்கையற்கரசி லீலா'.
'டூ நத்திங் ஃபார்மிங்' ('எதுவும் செய்யாமலிருக்கும் வேளாண்மை') முறையில் விவசாயம் மேற்கொண்டு, இயற்கையோடு இணைந்து வாழ பிறருக்கும் துாண்டுக்கோலாக இருந்து வருகின்றனர்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியாவில் முதுகலை பட்டம் பெற்று, பன்னாட்டு நிறுவனத்தின் கைநிறைய ஊதியம் பெற்றுவந்தவர் ஹரிவர்தா பிரஜீத். அவரது மனைவி மங்கயற்கரசியோ ஒரு மருத்துவர். நிறைவான ஊதியமளிக்கும் பணி எனும் நிலையிலும் மனதின் விருப்பத்தினால் விவசாயத்திற்குத் திரும்பியுள்ளனர்.
"நன்கு சிந்தித்தெடுத்த புத்திசாலித்தனமான முடிவு இது. இயற்கையோடு ஒத்துப்போவதும், இயற்கை உணவு, இயற்கை வேளாண்மை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து உலகிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது,” என்கிறார் பிரஜீத்தின் மனைவியான டாக்டர் மங்கா.
முதலில், பிரஜீத் விவசாயம் மற்றும் இயற்கை வேளாண்மை பற்றிய யோசனையை அவரது மனைவியிடம் பகிர்ந்து கொள்ள தயங்கியே உள்ளார். ஆனால், அவரது மனைவியோ அவரது யோசனைக்கு பாசிட்டீவ் ரியாக்ஷன் கொடுக்க, 'கர்மபூமி' தோன்றியுள்ளது. அவ்வாறு அவர்களது நிலத்தை அழைக்கின்றனர்.
"விவசாயத்தைத் தொடங்குவதற்கு பெர்சனல் காரணமும் இருந்து. நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன். மருத்துவர்களும், நானுமே நம்பிக்கையற்றே இருந்தோம். இருப்பினும், ஒரு அதிசயம் நடந்தது, நான் குணமடைந்தேன். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, இயற்கையோடு என்னை நெருக்கமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், எனக்கு நித்திய அமைதியையும் தரும் வித்தியாசமான ஒன்றை செய்ய முடிவு செய்தேன். அதற்காக 2015ம் ஆண்டு என் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தைத் தொடங்கினேன்," என்றார் பிரஜீத்.
பாரம்பரிய வேளாண்மையை தவிர்த்து, ஏன் இயற்கை வேளாண்மை மேற்கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இது.
"ஆர்கானிக் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது, வேறு ஏதாவது செய்ய வேண்டுமென தோன்றிக் கொண்டேயிருந்தது. புதிது புதிதாக எக்ஸ்ப்லோர் பண்ணனும்னு யோசித்திட்டு இருந்தேன். அப்போது தான், மசனாபு ஃபுகோகா எழுதிய "ஒற்றை வைக்கோல் புரட்சி - இயற்கை வேளாண்மைக்கான ஒரு அறிமுகம்" என்ற புத்தகத்தைப் படித்தேன்.
அது இயற்கை வேளாண்மை பற்றிய ஆழ்ந்த சிந்தனையைத் துாண்டியது. எனது நெருங்கிய நண்பர்கள் சிலருடன் இதைப் பற்றி விவாதித்தேன். அவர்களில் பெரும்பாலானோர், எதிர்மறையான கருத்துகளையே முன்வைத்தனர். இருப்பினும், எனது தீர்மானத்தில் உறுதியாக இருந்ததால், 2017ம் ஆண்டு இயற்கை விவசாயத்தைத் தொடங்கினேன்,” என்றார்.
2017ஆம் ஆண்டு முதல் 'இயற்கை வேளாண்மை' முறைகளைப் பின்பற்றி விவசாயம் செய்து வருகின்றனர் இன்ஜீனியர்-டாக்டர் தம்பதி. மங்காவின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமநாத்புராமாவில் 3 ஏக்கர் நிலத்தில் ஃபுகோகாவின் இயற்கை வேளாண்மை மற்றும் பெர்மாகல்ச்சர் முறையைப் பின்பற்றி, அவர்களது 'கர்மபூமி'யை உருவாக்கியுள்ளனர்.
தம்பதியினர் அவர்களது பண்ணையில் எந்த உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்துவதில்லை. எந்தவொரு குறிப்பிட்ட வடிவங்களையும் பின்பற்றாமல் விதைபரவல் மூலமாக பயிரிடுகின்றனர். விதைகள் எங்கு விழுந்தாலும் அவை தானே தன்னை செம்மைப்படுத்திக் கொண்டு இயற்கையாகவே வளரும் என்று நம்புகிறார்கள். பாரம்பரிய வகைகளின் விதை சேமிப்பே அவர்களின் விவசாயத்தின் முக்கியக் குறிக்கோள் மற்றும் செயல்பாடாகும்.
"நிலத்தில் முதன் முதலில் தர்பூசணிகளை தான் பயிரிட்டோம். அறுவடை செய்யப்பட்ட தர்பூசணியின் விதைகள் மறுவிளைச்சலுக்கு பயனற்றவை என்று கூறுவர். அதனால், நாங்கள் சில தர்பூசணிகளை வயலிலே காட்டு பன்றிகளுக்காக விட்டுவிட்டோம். காட்டு பன்றிகள் பழத்தை சாப்பிட்டுவிட்டு, அதன் எச்சங்களை எங்களது வயலிலும்,சுற்றியுள்ள வயலிலும் வெளியேற்றி சென்றன. அடுத்தாண்டு, எங்களது நிலத்தை சுற்றியுள்ள பிற வயல்களிலும் தர்பூசணி கொடிகள் படர்ந்திருந்தன. இதைக் கண்டு சுற்றியுள்ள விவசாயிகள் ஆச்சரியப்பட்டு போனர்," என்று மகிழ்ச்சியுடன் கூறினார் மங்கா.
உழவர் தம்பதியினரின் கூற்றுப்படி, ஆர்கானிக் விவசாயத்திற்கு ஏராளமான மனிதவளமும், வளங்களும் தேவைப்படுகின்றன. ஆனால், அவற்றை சிறு விவசாயிகள் உருவாக்கிக் கொள்ளுதல் கடினமாகும். மேலும், ஆர்கானிக் தயாரிப்புகளுக்கான சரியான விலையினை உறுதி செய்து கொள்ளும் நிலையும், அதற்கான சந்தையும் நாட்டில் இல்லை. தம்பதியினரது விவசாயமுறையின் அடிப்படையே 'குறைந்தபட்ச செலவு மற்றும் அதிகபட்ச ஊட்டச்சத்து', மற்றும் ஃபுகோகாவின் பெர்மாகல்ச்சர் முறை அதற்கு மிகவும் பொருத்தமானது.
ஆழமான உழவுக்கு மாறாக, மரத்திலிருந்து விழும் பச்சை மற்றும் உலர்ந்த இலைகளைப் பயன்படுத்தி தழைக்கூளம் மற்றும் மண்ணின் அடுக்கை உருவாக்கி, பின்னர் விதை நடவு செய்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் மண் அரிப்பு தவிர்க்கப்பட்டது, மேலும் விதைகள் முளைப்பதற்கும், தாவரங்கள் வளருவதற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.
அவர்களது பண்ணையில் பச்சைப் பயறு, கருப்பு உளுந்து, நிலக்கடலை, தினை, பலாப்பழம், வாழைப்பழம், தேங்காய், கொய்யா மற்றும் காய்கறிகளை விளைவித்து, விற்பனை செய்துவருகின்றனர்.
கர்மபூமியில் விளையும் கொய்யாக்கள் அதன் தனிச்சுவையின் காரணமாக உள்ளூர் மக்களிடையே வெகு பிரபலம். சீசனில் ஒரு நாள்விட்டு ஒருநாளுக்கு 40கிலோ கொய்யாக்களை அறுவடை செய்கின்றனர்.
"ஏப்ரல் மாதத்தில், கொய்யாவைத் தவிர, தேங்காய், பூசணி, ரோசெல், பலாப்பழங்கள் மற்றும் வாழைப்பழங்களை ரூ.20,000க்கு விற்றோம். ஒட்டுமொத்தமாக, விவசாயத்திலிருந்து மாதத்திற்கு ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை சம்பாதிக்கிறோம்,”என்று தெரிவித்தார் பிரஜீத்.
அவர்கள் பின்பற்றும் 'டூ நத்திங் வேளாண்மை' (எதுவும் செய்யாமலிருக்கும் வேளாண்மை) நிலையான வணிக வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
விளைச்சலில் கிடைக்கும் பொருட்களை மதிப்புக் கூட்டி, 'ஃப்ரெஷ் ஃப்ரம் ஃபார்ம்' என்ற பெயரில் நிலக்கடலை உருண்டை, ராகி உருண்டை, ரோசெல் ஜாம், பழங்கள், காய்கறிகள், தேநீர் பைகள் மற்றும் பிற மூலிகைகள் ஆகியவை அடங்கிய கூடைகளை விற்கின்றனர். ஒரு கூடை ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்படுகின்றன. தயாரிப்புகள் மற்றும் பருவத்தைப் பொறுத்து அவர்களது கூட்டாளர் நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் விற்பனை செய்துவருகின்றனர்.
"எங்கள் தயாரிப்புகளின் சுவை இயற்கையானது. ரசாயனத்தைப் பயன்படுத்தி பதப்படுத்தப்படும் பொருட்களைக் காட்டிலும் இவை அதிக நாட்கள் கெடாமலிருக்கும். தயாரிப்புகளின் இலாபங்களை கணக்கிட மாட்டோம். நாங்கள் எந்த பொருட்களையும் வெளியிலிருந்து வாங்கி பயன்படுத்துவதில்லை. எல்லா தயாரிப்புகளையும் நியாயமான விலையில் விற்கிறோம்,” என்று புன்னகைத்தார் டாக்டர் மங்கா.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை வழங்கிவரும் ஆரோவில்லின் கிராடிட்யூட் ஃபார்ம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கைகோர்த்து இவர்கள் உற்பத்தியை பெருக்கிக் கொள்கின்றனர்.
டூ நத்திங் விவசாயத்தைப் பற்றி அதிகப்படியான மக்கள் அறிய விரும்புவதால், அவர்கள் விவசாய முறைகளை இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர். சுற்றியுள்ள மாவட்டங்களின் விவசாயிகள் கூட அவர்களது பண்ணைகளை பார்வையிடத் தொடங்கியுள்ளனர். இன்றுவரை, 500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளனர்.
"நாங்கள் இப்போது இந்த பகுதியிலுள்ள ஏழு விவசாயிகளை இணைத்துள்ளோம். எங்கள் நிறுவனத்திற்கு 'உழவர் மேகம்' என்று பெயரிட்டுள்ளோம். இப்போது தான் தொடக்கியிருந்தாலும் சிறப்பாக செயல்படுகிறது,”என்கிறார் பிரஜீத்.
விவசாய முறை சுவாரஸ்யமானதாகவும், நிலையானதாகவும் தோன்றினாலும், வணிக நோக்கத்திற்கு சாத்தியமாகுமா? என்று கேள்வியே எஞ்சியுள்ளது.
"இயற்கையின் மீதும் இயற்கை பொருட்களின் மீதும் நம்பிக்கை வருவது கடினம் என்பதால், வணிக வேளாண்மை வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இது பிரபலமடையவில்லை. இன்றுவரை எங்களுடன் இணைந்தவர்கள் மிகக் குறைவுதான் என்றாலும்,
விவசாயிகள் சிறிய அளவீடுகளில் இம்முறையை பின்பற்றத் தொடங்கினால், இதன் வொர்த்தை அறிந்து கொள்வர். எங்களைப் பொறுத்தவரை, 'எதுவும் செய்யாமலிருக்கும் வேளாண்மை' என்பது ஒரு வாழ்க்கைக் கலை, விவசாயமுறை அல்ல,” என்கிறார் டாக்டர் மங்கா.
தகவல் மற்றும் படங்கள் உதவி : தி பெட்டர் இந்தியா