பாஜக சட்டப்பிரிவின் முக்கியப் பொறுப்பிற்கு வந்திருக்கும் ‘பன்சூரி ஸ்வராஜ்’ பற்றி தெரியுமா?
பாஜக சட்டப்பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பன்சூரி ஸ்வராஜ் பற்றி தெரியுமா உங்களுக்கு.
பன்சூரி ஸ்வராஜ்: மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதாவின் தலைவராகவும் இருந்த சுஷ்மா ஸ்வராஜின் மகளாவார். இவரை டெல்லி பாஜகவின் சட்டப்பிரிவில் இணை ஒருங்கிணைப்பாளராக பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்ற பன்சூரி 15 ஆண்டுகளாக சட்டத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். கடந்த காலங்களில் மறைமுகமாக கட்சிக்காக அவர் சட்ட ரீதியிலான உதவிகளைச் செய்திருந்தாலும், அதிகாரப்பூர்வமாக ஒரு பொறுப்பிற்கு வருவது இதுவே முதல்முறையாகும், டெல்லி அரசியலில் இவருடைய பங்களிப்பை அதிகரிக்கவே இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 24ம் தேதி பன்சூரியை இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பு வந்த உடனேயே அவர் பொறுப்பேற்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டார். கட்சியில் தனக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாஜக தலைவராக சச்தேவா பொறுப்பேற்றதற்கு பிறகு வெளியாகும் முதல் நியமன ஆணை இதுவாகும்.
பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜின் பெயரால் பாஜக மகிளா பிரிவு விருதுகளை வழங்கி கவுரவித்து வருவது சுஷ்மாவிற்கு அளிக்கப்படும் மரியாதையை குறிப்பிடுகிறது. அதற்கு ஏற்றாற்போல பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பன்சூரிக்கு நிச்சயம் கட்சியில் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்போது அது நிதர்சனமாகி இருக்கிறது என்று டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2019ம் ஆண்டில் இயற்கை எய்திய சுஷ்மா ஸ்வராஜ், ஒரு தனிப்பெரும் பாஜக தலைவராக இருந்தவர். ஹரியானாவின் இளம் அமைச்சராக 1977ல் பொறுப்பிற்கு வந்தார், பாராளுமன்றத் தேர்தலில் 7 முறை வெற்றியை தனக்குரியதாகக்கியவர். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பிற்கு போவதற்கு முன்னர் ஒரு குறுகிய காலம் டெல்லியின் முதலமைச்சராக இருந்தார்.
2009 மற்றும் 2014ல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டிருக்கும் சுஷ்மா, 2014-2019ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.
பன்சூரியின் தந்தை, ஸ்வராஜ் கௌசல், சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் மற்றும் மிசோரம் மாநில முன்னாள் கவர்னராவார். வடகிழக்கு மாநில விவகாரங்களில் நிபுணரான இவர் நாகா அமைதி மேம்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவராவார்.
யார் இந்த பன்சூரி ஸ்வராஜ்?
39 வயதாகும் பன்சூரி ஸ்வராஜ், சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஸ்வராஜ் கௌசல் தம்பதியின் ஒரே மகளாவார். இவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞராவார். பாஜக ஆதரவாளராக இருந்தாலும் அவருக்கென்று கட்சியில் இதுவரை தனிப்பொறுப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், கடந்த காலங்களில் கட்சியின் சட்டரீதியிலான பிரச்னைகளுக்கு உதவி செய்திருக்கிறார் பன்சூரி.
2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி மரணம் பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார் பன்சூரி. கண்டித்தார்.
“தேர்தல் பரப்புரைக்காக என்னுடைய அம்மாவை கொச்சைபடுத்த வேண்டாம்,” என்று கண்டித்தார். “பிரதமர் நரேந்திர மோடி என் தாயார் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்தார். எங்களுடைய சோகத்தில் பிரதமர் மற்றும் கட்சி எங்களுடன் உறுதியாக நின்றது,” என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பன்சூரி பதிவிட்டிருந்தார்.
லண்டனில் BPP சட்டப்பள்ளியில் படிப்பதற்கு முன்னர் பன்சூரி, வார்விக் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆங்கில பட்டம் பெற்றவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புனித கேத்தரின் கல்லூரியில் முதுநிலை படித்து முடித்த பின்னர் 2007ம் ஆண்டில் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 2021ல் ஹரியானாவின் கூடுதல் வழக்கறிஞராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.
பன்சூரி என்கிற பெயரின் அர்த்தம் இந்துக்கடவுள் கிருஷ்ணரின் இசைக்கருவியான புல்லாங்குழலாம். சுஷ்மா ஸ்வராஜ் கிருஷ்ண பக்தை மேலும் தன்னுடைய பக்திக்கு சான்றாக தன்னுடைய பாராளுமன்ற வளாக அறையில் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணரின் பிரம்மாண்ட படத்தையும் அவர் வைத்திருந்தார்.
2019ம் ஆண்டில் இயற்கை எய்திய சுஷ்மா ஸ்வராஜின் இறுதிச் சடங்குகளை அவரது மகளே அவருக்குச் செய்தார். இந்திய கடற்படை முன்னாள் வீரரான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரஷ் சால்வேவிற்கு ஒரு ரூபாய் கட்டணம் தருவதாக சுஷ்மா கூறி இருந்தார். ஆனால் அதை நிறைவேற்றாமலேயே அவர் மறைந்து விட அம்மாவின் ஆசையை பன்சூரி நிறைவேற்றி வைத்தார்.
நலத்திட்ட நிகழ்ச்சிகளில் அவ்வபோது பங்கேற்றாலும், பன்சூரி ஸ்வராஜ் அதிகமாக தன்னை வெளிக்காட்டிக்கொண்டதில்லை. இருந்த போதும் கிரிக்கெட் சூதாட்டம், பண மோலடி போன்ற விவகாரங்களில் சிக்கிய முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியின் சட்ட உதவி செய்யும் குழுவில் இடம்பெற்றிருந்தார் பன்சூரி.
‘நல்ல பேச்சாளர், அர்பணிப்பாளர்’
டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளரும் மஹிலா மோர்சா தலைவருமான நீது தபாஸ், பன்சூரியை ஜனவரி மாதத்தில் பெண்கள் பிரிவு தேசிய செயற்குழுவில் சந்தித்துள்ளார். அவரை வரவேற்று பேசிய நீது, பன்சூரி ஒரு சிறந்த மனிதர் மற்றும் சக்திவாய்ந்த பேச்சாளர் என்று பாராட்டினார்.
G20ன் W20ல் பன்சூரியும் இடம்பெற்றிருந்தார் மேலும் பெங்களூரில் நடந்த பாஜக மகிளா மோர்சாவின் தேசிய செயற்குழுவில் பங்கேற்று அவர் பேசியவை கார்யகர்தாக்களால் வெகுவாக பாராட்டப்பட்டது, நிச்சயமாக அவருடைய அம்மாவின் பண்புகள் அவருக்கு இருப்பதாக அனைவரும் பன்சூரிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
“பன்சூரியின் பேச்சுத்திறன் அப்படியே சுஷ்மாவைப் போன்றது, அவர் மிகவும் பொறுமையானவர் தீவிர அரசியலில் இருப்பவர்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் சோர்ந்து போகவே மாட்டார்கள்,” என்று நீது கூறியுள்ளார்.
பாஜக டெல்லி சட்டப்பிரிவின் இணை-ஒருங்கிணைப்பாளர் சங்கீத் குப்தாவும் பன்சூரியின் நியமனம் சட்டப்பிரிவிற்கு பேருதவியாக இருக்கும் என்று கூறி உள்ளார். கட்சிக்காக நாங்கள் பல்வேறு முக்கிய சட்டப்பிரச்னைகளை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறோம், இந்த நேரத்தில் அவருடைய நிபுணத்துவமும் திறன்களும் எங்களும் பெரும் உதவியாக இருக்கும். நாங்கள் அவருடைய செயல்திறனை பார்த்திருக்கிறோம் மேலும் அவர் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர், என்று குப்தா கூறி இருக்கிறார்.
டெல்லி பாஜக சட்டப்பிரவு, சுமார் 900 வழக்கறிஞர்கள் கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.கே.தியாகி தலைமையில் செயல்படும் இந்த சட்டக்குழு தேர்தல் விதிமுறைகள், வேட்புமனுக்கள் தாக்கல் மற்றும் கட்சியின் இன்னபிற சட்டவிவகாரங்களில் பாஜகவிற்கு துணையாக செயல்பட்டு வருகிறது.