சமூக மாற்றத்திற்காக ஐஆர்எஸ் அதிகாரி ஆன மருத்துவர் மேகா பார்கவா!
உள்நாட்டு மற்றும் சர்வதேச வரிவிதிப்பு தொடர்பாக முக்கிய பொறுப்புகளை வகிக்கும் டாக்டர். மேகா பார்கவா சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.
ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் வளர்ந்தவர் டாக்டர்.மேகா பார்கவா. சிறுவயது முதலே மருத்துவப் படிப்பு இவரது கனவாக இருந்தது. இவருடைய அம்மா பள்ளி ஒன்றின் முதல்வர். மேகாவிற்கு படிப்பில் ஆர்வம் ஏற்படுவதற்கு இவரும் ஒரு காரணம்.
மும்பை பல் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் சேர்ந்து படித்த மேகா பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
மக்கள் சேவையில் ஆர்வம் இருந்ததால் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முடிவு செய்தார். மாலை வரை மருத்துவமனையில் வேலை. அதன் பிறகு, தேர்விற்கு பயிற்சி. இப்படியே இவரது நாட்கள் கடந்தன. கடின உழைப்பு எப்போதும் தோல்வியடைவதில்லை. எந்த ஒரு பயிற்சி வகுப்பிற்கும் செல்லாமலேயே மேகா சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்திய வருவாய் துறையில் சேர்ந்தார்.
அக்கவுண்டிங், வரிச்சட்டங்கள் என மேகாவின் கற்றல் விரிவடைந்துகொண்டே போனது. அவருக்கு பரிச்சயமான இடமான மும்பையில் போஸ்டிங் கிடைத்தது. 2012-ம் ஆண்டு முதல் வரி நிர்வாகம் பிரிவில் பங்களித்தார். மேலும், இன்வெஸ்டிகேஷன் தொடர்பாக செயல்பட்டது சவால் நிறைந்ததாக இருந்தது என்கிறார்.
இவர் சர்வதேச வரிவிதிப்பு தொடர்பாக ஓராண்டு செயல்பட்டதால் சர்வதேச வரிவிதிப்பு செயல்முறைகள் பற்றிய விரிவான அனுபவம் கிடைத்திருக்கிறது.
தற்போது நிதி அமைச்சகத்தின் வருமான வரி இணை ஆணையராக இருக்கும் பார்கவா அரசாங்கத்தால் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இ-சரிபார்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
”மற்ற துறைகளைக் காட்டிலும் வருமான வரித்துறையில் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தாமாக முன்வந்து வருமான வரி தாக்கல் செய்வதை ஊக்குவிக்கிறது. இதற்கான செயல்முறைகளை எளிதாக்க தொழில்நுட்பத்தைப் பெருமளவில் பயன்படுத்தி வருகிறது,” என்கிறார்.
வரி ஏய்ப்பு, பண மோசடி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் நாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் தடையின்றி நடப்பதற்குத் தேவையான முயற்சிகளை இவர் எடுத்து வருகிறார்.
2021-2022 ஆண்டுகளிடையே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை பிரிவில் எம்ஃபில் படிப்பதற்காக கேம்பிரிட்ஜ் காமன்வெல்த் ஷேர்ட் ஸ்காலர்ஷிப் வென்றார்.
“வெவ்வேறு விதமான மக்களுடன் இணைந்திருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த அனுபவங்களைக் கொண்டு இந்தியாவிற்கான பிரத்யேக தீர்வுகளை உருவாக்க விரும்புகிறேன்,” என்கிறார் மேகா.
சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே நிலவும் இடைவெளியை நிரப்பி சமூக நலனில் பங்களிப்பதே இவரது நோக்கம்.
சமூக மாற்றம்
மேகாவின் சகோதரி ருமா பார்கவா Samarpann என்கிற என்ஜிஓ தொடங்கினார். Samarpann தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றிருக்கும் மேகா இந்த என்ஜிஓ செயல்பாடுகளில் பங்களிக்கிறார்.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், டெல்லி என பல்வேறு பகுதிகளில் இந்த என்ஜிஓ பணியாற்றி வருகிறது. பல்வேறு முயற்சிகள் மூலம் 26,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
”கல்வி, மாதவிடாய் சுகாதாரம், பள்ளிகளில் சூரிய மின்சக்தி திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவுகிறோம். பலருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்,” என்கிறார்.
இந்த என்ஜிஓ குழந்தைகளின் படிப்பிற்குத் தேவையான எழுதுபொருட்கள் கொடுத்து உதவியுள்ளது. மின்சார வசதி இல்லாத கிராமங்களில் சோலார் விளக்குகளை பொருத்தியுள்ளது. பெண்களுக்கு மக்கும்தன்மை கொண்ட சானிட்டரி நாப்கின்களை விநியோகம் செய்திருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்துள்ளது.
திட்டங்கள் முறையாக பயனாளிகளை சென்றடைய அரசாங்க ஏஜென்சிக்களுடன் இணக்கமாக செயல்படுவதாக மேகா தெரிவிக்கிறார். கொரோனா பெருந்தொற்று சமயத்தில் உள்ளூர் காவல்துறை, மாவட்ட நிர்வாகம், தன்னார்வலர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்துள்ளனர்.
வேலை, சமூக சேவை இரண்டையும் எப்படித் திறம்பட சமாளிக்கமுடிகிறது என்பது குறித்து பகிர்ந்துகொண்டபோது,
“ஒரு விஷயத்தை செய்யவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால் அதற்கான நேரத்தை நம்மால் நிச்சயம் ஒதுக்கமுடியும். என் சகோதரி உட்பட பலர் என்னுடன் அர்ப்பணிப்புடன் களமிறங்கி சமூக மாற்றத்தை ஏற்படுத்த முன்வருகிறார்கள். மக்களுக்கு உதவும்போது கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. குழந்தைகளின் முகத்தில் தென்படும் புன்னகைதான் தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாக டானிக்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன்
பப்ளிக் எக்ஸாம்களில் தோல்வி; விடாமல் முயன்று முதல் முயற்சியில் ஐஏஎஸ் ஆன அஞ்சு சர்மா கதை!