‘ட்ரம்ப் ட்விட்டர் தடை திரும்பப் பெறப்படும்’ - எலான் மஸ்க் அறிவிப்பு; ட்ரம்ப் பதில் என்ன?
டொனால்ட் டிரம்ப் மீதான டுவிட்டர் தடையை திரும்பப் பெறுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டர் கணக்கு ஜனவரி 6, 2021 அன்று தடை விதித்து அறிவிக்கப்பட்டது. டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கு மூலம் கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம்சாட்டி அவரது டுவிட்டர் கணக்குக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிட்ட குடியரசு கட்சி தோல்வி அடைந்தது. இதைடுத்து வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி டிரம்பின் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
தன் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது டொனால்ட் டிரம்ப் அவர்களின் போராட்டங்களை ஊக்குவிக்கும் விதமாக தேர்தலில் முறைகேடு நடந்திருக்கிறது என சமூக வலைதளங்களில் பதிவிட்டார். டிரம்ப் பதிவிட்ட பதிவுகள் வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என அவரது டுவிட்டர், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முழுமையாக முடக்கப்பட்டன. அதோடு இந்த விவகாரத்தில் தொடர்புடைய 70,000-க்கும் மேற்பட்டோர் தவறான தகவல்களை பரப்பியதாக தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்குத் தடை திரும்பப் பெறப்படும் என அறிவித்துள்ளார். ஆட்டோ மாநாட்டில் பேசிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்,
“டொனால்ட் டிரம்பின் கணக்கு தடை செய்யப்பட்டது டுவிட்டரின் தார்மீக ரீதியான மோசமான முடிவு மற்றும் தீவிரமான முட்டாள்தனம் என்று குறிப்பிட்டார். மேலும், இது தவறு என்று தான் கருதுவதாகவும் காரணம், நாட்டின் பெரும்பகுதியை இந்த செயல் அந்நியப்படுத்தியது எனவும் தெரிவித்தார்.”
ட்விட்டரில் இருந்து ஒருவரை நிரந்தரமாக தடை செய்வது என்பது மோசமான யோசனை என்ற சிந்தனையில் தானும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியும் ஒரே நிலைபாட்டில் இருப்பதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜாக் டோர்சி தன் நிலைப்பாட்டை விளக்கினார், அதில், நிரந்தரத் தடைகள் என்பது தோல்வியை குறிக்கும் என்ற நிலைபாட்டில் எலான் மஸ்க்கிடம் உடன்படுவதாக குறிப்பிட்டார். மேலும், நூலில் தான் கூறியது போல், எங்களிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் நாங்கள் முடிவெடுத்தோம் இது சாத்தியமற்ற சூழ்நிலை ஆகும். ஆனால், நான் சொல்கிறேன், ஒரு நிறுவனம் இந்த முடிவை முதலில் எடுக்கக்கூடாது எனக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் டிரம்ப் ட்ரூத் சோஷியல் என்ற செயலியை உருவாக்கி அதை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிட்டார். இந்த ஆப் பெரும்பாலான மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் டிரம்பின் ட்ரூத் சோஷியல் செயலி குறித்து மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில்,
ட்ரூத் சோஷியல் செயலியானது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தில் இருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதற்கு முன்புவரை ட்ரூத் சோஷியல் செயலியானது 52-வது இடத்தில் இருந்திருக்கிறது. மஸ்க் டுவிட்டரை வாங்கிய ஒரு வார இடைவெளியில் ட்ரூத் சோஷியல் செயலி முதலிடத்தை பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டருக்கு போட்டியாக ட்ரூத் சோஷியல் செயலியை கருதும் வகையில் மஸ்க் டுவிட் செய்யவில்லை என்றாலும், இந்த டுவிட் பலரின் விவாதத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் மஸ்க்கின் டுவிட்டுக்கு டிரம்ப்-ம் பதிலளித்தார். அதில் ட்ரூத் சோஷியல் மக்களிடம் அதிகளவில் சென்றடைந்து வருகிறது.
இதை டுவிட்டரின் புதிய தலைவர் ஒப்புக் கொண்டுவிட்டார். டுவிட்டர் எனது பழைய கணக்கை மீட்டெடுத்துக் கொடுத்தாலும் அதை பயன்படுத்துவதற்கு விருப்பமில்லை எனத் தெரிவித்து விட்டார்.
டுவிட்டரின் பங்கு விலை கடந்த செவ்வாய் கிழமையன்று 1.5% குறைந்து ஒரு பங்கின் விலை $47.24 ஆக இருந்தது. ஆனால், மஸ்க்கின் டுவிட்டர் உத்தரவாத கொள்முதல் விலையானது $54.20 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது டுவிட்டர் பங்குகளுக்கான சந்தை பாதுகாப்பின்மையை பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
தொகுப்பு: துர்கா