'நன்கொடை கொடுங்க; பதிலுக்கு எங்கள் நேரத்தை உங்களுக்கு அளிக்கிறோம்’ - கொரோனாவுக்கு இப்படியும் உதவலாம்!

நன்கொடையாளர்களையும், வல்லுனர்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இணையதளம், கொரோனா நிவாரணத்திற்கு புதுமையான வழியில் நிதி திரட்ட வழிகாட்டுகிறது.
2 CLAPS
0

இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள எல்லா வகையிலும் உதவி தேவை எனும் நிலையில், ’நன்கொடை தாருங்கள் பதிலுக்கு எங்கள் நேரத்தை உங்களுக்கு அளிக்கிறோம்’ என வல்லுனர்கள் உதவ வழி செய்யும் வகையில் ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

'Donate & Discuss' 'டொனேட் & டிஸ்கஸ்' (https://covid.questbook.app/tags) எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த தளம் வாயிலாக, குறிப்பிட்ட துறைகளில் வல்லுனர்களாக இருப்பவர்கள் தங்கள் நேரத்தை பரசளித்து மற்றவர்களை கொரோனா நிவாரணப் பணிகளுக்காக நன்கொடை அளிக்க ஊக்குவிக்கலாம்.

அதாவது, கொரோனா உதவிக்கான பாலமாக அமையும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள பலரும் தன்னெழுச்சியாக தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த உதவியை மேலும் பலமடங்கு பெருகச்செய்வதற்கான தேவையும் இருக்கிறது.

இந்த நிலையில், உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் என மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய முயற்சிகளில் ஒன்றாக அமைகிறது 'Donate & Discuss' இணையதளம்.

கொரோனா உதவிகளை மேற்கொண்டு வரும் சேவை அமைப்புகளுக்கு நன்கொடை அளியுங்கள் என ஊக்கம் அளிக்கிறது இந்த தளம். இத்தகைய கோரிக்கையை வல்லுனர்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு உதவி செய்பவர்களுக்கு கைமாறு செய்யும் வகையில், வல்லுனர்கள் தங்கள் நேரத்தை பரிசளிக்கும் வகையில் இந்த தளம் செயல்படுகிறது.

வல்லுனர்கள் நன்கொடை அளிப்பவர்களுக்கு என தனியே நேரம் ஒதுக்கி அவர்களுடன் குறிப்பிட்ட தலைப்பில் பேசி தங்கள் ஆலோசனையை அளிக்கின்றனர். உதாரணத்திற்கு ஸ்டார்ட் அப் உருவாக்கத்தில் வல்லுனராக இருப்பவர், ஒரு மணி நேரம் பிரத்யேகமாக ஒதுக்கி, புதிய நிறுவனத்திற்கான சேவையை துவக்குவது தொடர்பாக தனது ஆலோசனைகளை வழங்குவார்.

இப்படி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள் தங்கள் நேரத்தை நன்கொடைக்கு ஈடாக அளிக்க முன் வந்திருக்கின்றனர்.

தளத்தின் முகப்பு பக்கத்தில், இத்தகைய வல்லுனர்களின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள், இந்த பட்டியலில் உள்ள வல்லுனர்களுடன் உரையாடி தங்கள் துறை சார்ந்த ஆலோசனைகளை பெற விரும்பினால் கொரோனா சேவை அமைப்புகளுக்கு நன்கொடை வழங்க அதற்கான ரசீதை இங்கு சமர்பித்தால் போதுமானது.

நன்கொடை அளிக்க விரும்புகிறவர்கள் தங்கள் துறை சார்ந்த வல்லுனர்களைத் தேடும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, நம்பிக்கையான கொரோனா சேவை அமைப்புகளும் சரி பார்க்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.

ஸ்ரீஹர்ஷா கரம்சட்டி (@HarshaKaramchat) எனும் மென்பொருளாளர் இந்த தளத்தை அமைத்துள்ளார். Questbook எனும் திறன் வளர்ச்சி செயலி ஸ்டார்ட் அப்பை நடத்தி வரும் ஹர்ஷா, நட்பு வலைப்பின்னலில் உள்ளவர்களை கொரோனா நன்கொடை அளிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த தளத்தை அமைத்துள்ளார்.

வலைதள முகவரி: Donate & Discuss

Latest

Updates from around the world