இனி தமிழ்நாடு அரசுத் திட்டங்களை அறிய 'வாட்ஸ் அப்' போதும் - முழு விவரம் இதோ!
மக்கள் அரசு திட்டங்களை வாட்ஸ் அப் மெசேஜ் மூலமாக அறிந்து கொள்வதற்காக “மக்கள் நலன் bot” என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அரசுத் திட்டங்களை ’வாட்ஸ் அப் மெசேஜ்’ மூலமாக அறிந்து கொள்வதற்காக ’மக்கள் நலன் bot’ என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே தாங்கள் கொண்டு வரும் புதிய திட்டங்கள், சேவைகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது, சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்துவது போன்ற விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்கின்றன.
ஆனால், என்ன தான் அரசு முயன்றாலும் நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்பு மற்றும் தகவல்கள் சொற்ப அளவிலான மக்களை மட்டுமே சென்றடைகின்றன.
தற்போது மக்கள் அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. குறிப்பாக நகரம் முதல் கிராமம் வரை வாட்ஸ்-அப் பயன்படுத்தத் தெரியாத நபர்களே கிடையாது என்ற நிலை உருவாகி வருகிறது. இதனைக் கையில் எடுத்துள்ள மாவட்ட திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வாட்ஸ்-அப் அடிப்படையிலான சாட் பாட் சேவையை தொடங்கியுள்ளது.
மக்கள் நலன் போட்:
மக்களுக்காக அரசு கொண்டு வரும் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் முதன் முறையாக ’சேவை’ (SEVAI) என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாக தகவல்களை தேடும் வசதி (Searches Explored Via Artificial Intelligence) ஆகும்.
தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (டான்சிம்) உடன் இணைந்து, தமிழ்நாட்டின் முதல் 'GovTechThon' போட்டியில் பங்கேற்ற அஜித், சிவசுப்ரமணியன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து, பயனாளிகளுக்கு நலத்திட்டங்களைத் தெளிவாகச் சொல்லித் தரக்கூடிய சாட் பாட் வசதியை கண்டுபிடித்துள்ளதை அறிமுகப்படுத்தினர்.
இது அந்த போட்டியில் முதல் பரிசை பெற்றதை அடுத்து, இந்த யோசனைக்கு தற்போது தமிழக அரசு செயல் வடிவம் கொடுத்துள்ளது.
முதன் முறையாக இந்த சேவையானது நெல்லையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆட்சியர் விஷ்ணு கூறியதாவது,
“சாட்பாட்டை மக்களிடம் கொண்டு செல்வதற்காக அதை நன்றாக மாற்ற முடிவு செய்தோம். இப்போது, ஃபைன்-ட்யூன் செய்யப்பட்ட பதிப்பை வாட்ஸ்-அப் பயன்முறையில் எளிதாகப் பயன்படுத்தி, மாநில மற்றும் மத்திய அரசுகளின் 30-க்கும் மேற்பட்ட துறைகள் வழங்கும் 500-க்கும் மேற்பட்ட நலத் திட்டங்களைப் பற்றிய விவரங்களைப் பெறலாம்,” எனத் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்-அப் தகவல் பெறுவது எப்படி?
முதலில் 94458 79944 என்ற எண்ணை ஸ்மார்ட் போனில் சேமிக்க வேண்டும். அதன் பின்னர், வாட்ஸ்-அப் மூலமாக இந்த எண்ணிற்கு Hi என மெசெஜ் அனுப்ப வேண்டும்.
அப்போது 'SEVAI' (செயற்கை நுண்ணறிவு மூலம் தேடப்படும் தேடல்கள்) எனப் பெயரிடப்பட்ட சாட்பாட் பயனார்களிடம் சில கேள்விகளை எழுப்பும்.
- பயனாளியின் பாலினத்தை தேர்வு செய்யவும்?
- பயனாளி எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்?
- பயனாளியின் மதத்தை தேர்வு செய்யவும்? பின்வரும் வகைகளில் எது பயனாளியின் வகையை அல்லது தேவையைக் குறிக்கும்? (எ.கா. மாற்றுத்திறனாளி, மகளிர், விவசாயி),
- பயனாளியின் தேவை வகை என்ன? (சுயதொழில், சுய உதவிக்குழு, கடன் உதவி)
இதில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையைப் பொறுத்து அதுபற்றிய திட்டங்கள் குறித்த தகவல்கள் விரிவாகப் பகிரப்படும். அதில் அந்த திட்டத்தின் பெயர், அது என்ன துறை சார்ந்தது, திட்டத்தின் பயன்கள் என்ன, தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்தின் விவரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
இந்த சாட்பாட்டை மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளது. “மிக விரைவில் தமிழகம் முழுவதும் இதை அறிமுகப்படுத்துவோம்,” என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டி. மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.
இனி வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம் - விரைவில் அறிமுகம்!