Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘வாத்து வளர்ப்பும் வளம் கொழிக்கும் தொழிலே’- லட்சங்கள் சம்பாதிக்கும் காஞ்சிபுரம் இளைஞர்!

அசைவ உணவுகளில் சிக்கனுக்குத்தான் முதலிடம் என்றாலும், பிராய்லர் கோழிகள் வளர்ப்பு முறை உடல் நலனுக்கு கேடு என்பதால் வாத்துக்கறி தொழில் தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.

‘வாத்து வளர்ப்பும் வளம் கொழிக்கும் தொழிலே’- லட்சங்கள் சம்பாதிக்கும் காஞ்சிபுரம் இளைஞர்!

Friday October 23, 2020 , 3 min Read

ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டாலே வீட்டில் மட்டனா, சிக்கனா, மீனா என்பதுதான் ஹாட் டாப்பிக்காக இருக்கும். இன்னும் ஓருசில வீடுகளில் வாரத்தில் 3 நாட்கள், சில வீடுகளில் தினசரி என அசைவ உணவுகள் நம் வாழ்வில் ஓர் முக்கிய அங்கமாகிவிட்டன.


என்னதான் கொரானா நம்மை முடக்கிப் போட்டாலும், கறிக்கடைகளிலும், மீன் கடைகளிலும் கூட்டத்துக்குப் பஞ்சமில்லை. அந்தளவுக்கு மக்கள் அசைவ உணவுகளின் சுவைக்கு அடிமையாகி விட்டனர். இதனால் தற்போது விவசாயிகள் கால்நடை வளர்ப்பையும் ஓர் அங்கமாகவே மேற்கொண்டு வருகின்றனர். கோழி, ஆடு, முயல், வெண்பன்றி வளர்ப்பு பண்ணைகள் ஆங்காங்கே பெருகி பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக மாறி வருகிறது.


இதில் தற்போதைய புதிய வரவாக வாத்து வளர்ப்பும் இணைந்துள்ளது. அசைவ உணவுகளில் சிக்கனுக்குத்தான் முதலிடம் என்றாலும், பிராய்லர் கோழிகள் வளர்ப்பு முறை, ஊசி, மருந்துகள் மூலம்தான் அவை 40 நாள்களில் விரைவான வளர்ச்சியை அடைகின்றன என்றும், இதனால் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கிறது என கூறப்படும் கருத்துக்களால் ஓர் சாரார் வாத்துக் கறிக்கு மாறியுள்ளனர் என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன்.

வாத்து

கேரளத்தில் மட்டுமே வாத்துக்கறி மற்றும் வாத்து முட்டை போன்றவைக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலை மாறி, தற்போது தமிழகத்திலும் வாத்துக்கறிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.


பிராய்லர் கோழி கறிக்கு மாற்றாக தற்போது நன்கு விற்பனையாகும் வாத்துக்கறி, நல்ல சுவை மிகுந்ததாகவும் இருப்பதால் தற்போது வாத்து வளர்ப்புத் தொழிலில் பல்வேறு தரப்பினரின் கவனம் திரும்பியிருக்கிறது. கொழுப்பில்லாததால், பல்லடம் அருகே ஓர் ஹோட்டலில் 4 இட்லியும், 1 முழு வாத்து இறைச்சியும் ரூ.300க்கு விற்பனையாகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள விப்பேடு கிராமத்தில் தனது வாத்துப் பண்ணையை வைத்திருக்கிறார் பாஸ்கரன். 3 தலைமுறைகளாக வாத்து வளர்ப்பு தொழில் மேற்கொண்டு வருவதால் வாத்துக்களை பற்றி ஏ டூ இசட் தெரிந்திருக்கிறது இவருக்கு.


இருந்தாலும், பெற்றோரின் ஆசைக்காக பி.ஏ. வரை படித்த பாஸ்கரன், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே தனக்குப் பிடித்த வாத்து வளர்ப்புத் தொழிலையும் மேற்கொண்டு வருகிறார். வாத்துக்களை மேய்ப்பது, பராமரிப்பது, வாத்து கறி, முட்டைகளை விற்பனை செய்வது என இவரது பெற்றோர்கள் செய்த அனைத்தையும் பாஸ்கரனும் செய்து வருகின்றார்.

வாத்து3

வயல்வெளியில் மேய்ச்சல் முறையில் வளரும் வாத்துக்கள்.

இதுகுறித்து அவர் நம்மிடம் தெரிவித்ததாவது,

“காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் அதிகம் என்பதால் 3 தலைமுறைகளாக வாத்து வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். நாங்க இறைச்சி மற்றும் முட்டை விற்பனையில் கவனம் செலுத்துவதால் நல்ல தரமான நாட்டு வாத்துக்களை மட்டும் தான் வளர்த்து வருகிறோம்,” என்கிறார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து வாத்துக் குஞ்சுகளை விலைக்கு வாங்கி வருகிறார். சாதாரணமாக ஓர் வாத்துக்குஞ்சு 3 மாதத்திலேயே இறைச்சிக்குத் தயாராகிவிடுமாம். இதன் எடை சுமார் 800 கிராமில் இருந்து 1 கிலோ வரை இருக்குமாம். இதுதவிர ஓர் வாத்து வாரத்துக்கு 3 முட்டை போடுமாம். இதன் முலம் ஆண்டுக்கு சுமார் 150 முட்டைகள் வரை கிடைக்குமாம்.

வாத்து முட்டை, கோழி முட்டையைப் போலவே ரூ.5க்கு விற்பனையாகுமாம். சுமார் 1000 வாத்துக்களை வளர்த்து வரும் இவருக்கு ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் முட்டைகள் வரை கிடைக்குமாம். மொத்தமாக விற்பனை செய்யும்போது 1 முட்டை ரூ.4க்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. முட்டை உற்பத்திக்காகவே 1000 வாத்துக்களில் 800 வாத்துக்கள் பெண் வாத்துக்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியமாம்.
வாத்து4

தொடர்ந்து வாத்து வளர்ப்பு முறை அவர் கூறும்போது, வாத்துகள் நீர்நிலைகளில் உள்ள நத்தைகள், மண்புழு, சிறு புழு, பூச்சிகளை உண்டு வளரும். மேலும், சில நேரங்களில் நெல், அரிசியையும் தீனியாக போடுவோம். நாங்கள் மேய்ச்சல் முறையில் வாத்துக்களை வளர்ப்பதால் பெரிய அளவில் பராமரிப்பு செலவு கிடையாது.

”முன்பு ஒரு வாத்தை இறைச்சிக்காக ரூ.120க்கு வியாபாரிகளுக்கு கொடுத்துக்கொண்டு இருந்தேன். தற்போது நானே நேரடியாக வாத்துக் கறி கடை போட்டு சிறிய அளவில் வியாபாரம் செய்து வருகிறேன். இதன் மூலமா ஒரு வாத்து 200 ரூபாய்க்கு விக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 30இல் இருந்து 40 வாத்துக்கள் வரை விற்பனையாகும் என்கிறார். மேலும், இயற்கையா மேய்ச்சல் முறையில வாத்து வளர்ப்பதால், அனைவரும் எங்களிடம் விரும்பி வாங்குறாங்க,” என்றவர் வாத்து வளர்ப்பில் கிடைக்கும் லாபம் குறித்து பேசினார்.
வாத்து2

வாத்துக்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ள பாஸ்கரன்.

“வாத்துக்கறி மற்றும் வாத்து முட்டைக்கான முக்கிய விற்பனை தளம் கேரளம்தான். அங்கதான் வாத்து முட்டை, இறைச்சியை விரும்பிச் சாப்பிடுறாங்க. இங்கிருந்து வாத்து முட்டைகள் கேரளத்துக்குத்தான் அதிகளவில் போகிறது. அங்கே 15 ரூபாய்க்குக்கூட வாத்து முட்டை விற்பனையாகிறது.

இதுவரை 720 வாத்துகளை நேரடியாக விற்பனை செய்திருக்கேன். இதில், ரூ.1,44,000 கிடைத்தது. வியாபாரிகளுக்கு ஒரு வாத்து ரூ.120ன்னு 360 வாத்துகளை விற்பனை செய்ததன்மூலம் ரூ.43 ஆயிரம் என மொத்தமாக இறைச்சி, முட்டை விற்பனை மூலமாக சுமார் ரூ. 4 லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளது என்கிறார்.

“வாத்து வளர்ப்பை ஆடு, மாடு, கோழி வளர்ப்பைப் போல மக்கள் பார்ப்பதில்லை. மிகவும் கேவலமாக, இழிவாகத்தான் பார்க்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். மக்களுக்கு வாத்துக்கறி மற்றும் வாத்து முட்டையின் பயன்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.


பிராய்லர் கறியைவிட வாத்துக்கறி ஆரோக்கியமானதுதான் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று கூறியவர், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், சீதபேதி போன்றவற்றுக்கு மருந்தாக விரும்பி வாங்கப்படும் இந்த வாத்து இறைச்சி வியாபாரத்துக்கும், வாத்து வளர்ப்பவர்களுக்கு அரசு உரிய பயிற்சிகள் அளித்து, வாத்து வாங்குவதற்கு கடன் உதவி, மானியம் என மற்ற கால்நடை வளர்ப்புக்கு வழங்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவேண்டும். அப்போதுதான் லாபம் தரும் இத்தொழிலும் வளர்ச்சி பெறும் என தனது ஆதங்கத்தை தெரிவிக்கிறார் பாஸ்கரன்.