பாலியல் தொழிலில் இருந்த பழங்குடியின பெண்களுக்கு வருமானத்துடன் சுயகெளரவத்தையும் கொடுத்த இ-ரிக்ஷா!
நாட்டின் 73வது குடியரசு தினத்தன்று மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு புதிய தொடக்கத்திற்கான முதல் படியை எடுத்துவைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 73வது குடியரசு தினத்தன்று மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு புதிய தொடக்கத்திற்கான முதல் படியை எடுத்துவைக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலில் இருந்து மீளும் பெண்கள்:
மத்தியப்பிரதேச மாநிலம் மண்ட்சவுர் - ரட்லாம் மாவட்டத்தில் பச்சாரா என்ற குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வரும் கிராமங்களில் பாலியல் தொழில் வெளிப்படையாகவே நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் தங்களுடைய பெற்றோர்கள் இந்த தொழிலுக்கு அனுப்பப்படும் அவலம் ஆண்டு, ஆண்டாக அரங்கேறி வருகிறது.
இந்த கொடூரத்தை ஒழிக்கும் விதமாக மாநில அரசும், பல என்ஜிஓக்களும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். இங்குள்ள பெண்களை பாலியல் சார்ந்த தொழில்களில் ஈடுபடாமல் தடுத்து, மறுவாழ்வு அளிக்கும் வேலையை மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும், என்.ஜி.ஓ. அமைப்பான பாம்பே டீன் சேலஞ்ச் (BTC) செய்து வருகிறது.
இந்த அமைப்பின் முயற்சியால் பச்சாரா பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 பெண்களின் வாழ்வில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. பாலியல் தொழிலைக் கைவிட்டு, கூலி வேலை செய்து கஷ்ட ஜீவனம் நடத்தி வந்த இவர்களுக்கு உதவும் விதமாக எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின பெண்களுக்கு எலெக்ட்ரிக் ஆட்டோவை ஓட்டுவதற்கான பயிற்சியை உள்ளூர் காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக பச்சாரா இனத்தைச் சார்ந்த 10 பெண்களுக்கு எலெக்ட்ரிக் ரிக்ஷாவிற்கான சாவிகள் வழங்கும் விழா கடந்த மாதம் குடியரசு தினந்தன்று நடந்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற மந்த்சூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ராஜ்வர்தன் சிங் தத்திகான் 10 பெண்களிடம் எலெக்ட்ரிக் ரிக்ஷாவிற்கான சாவி வழங்கியுள்ளார்.
"இது ஒரு தனித்துவமான திட்டமாகும், இதன் மூலம் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த மற்ற பெண்களும் பொதுத்தளத்திற்கு வந்து மரியாதைக்குரிய வாழ்க்கையை நடத்த வேண்டும் என விரும்புகிறோம்," எனத் தெரிவித்தார்.
வருமானம் மட்டுமல்ல 10 பெண்களுக்கு கிடைத்த தன்மானம்:
முதற்கட்டமாக எலெக்ட்ரிக் ரிக்ஷா வழங்கப்பட்ட பச்சாரா இனத்தைச் சேர்ந்த 10 பெண்களும் பெற்ற மகளையே பாலியல் தொழிலுக்கோ அல்லது பெற்ற பிள்ளைகளுக்காக பாலியல் தொழிலை ஏற்றுக்கொண்டதற்காகவோ தண்டிக்கப்பட்டவர்கள். தற்போது நல்ல வழியில் திரும்பியுள்ள தங்களுக்கு இ-ரிக்ஷா ஓட்டும் வேலை வருமானத்தை மட்டுமல்ல மரியாதையும் கொடுத்துள்ளதாக பூரித்து போகின்றனர்.
இ-ரிக்ஷா ஓட்டும் 10 பெண்களில் நிர்மலா தங்கரும் ஒருவர், கணவருடன் விவசாயக் கூலிவேலைக்கு சென்று கொண்டிருந்த இவர், இ-ரிக்ஷாவால் தனது வாழ்க்கை மாறியுள்ளதை பகிர்ந்து கொண்டுள்ளார்.
“ஜனவரி 27 முதல், விவசாய வயல்களில் கூலி வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். சராசரியாக ஒரு சவாரிக்கு 15-30 கி.மீ தூரம் பயணிகளை ஏற்றிச் செல்வதன் மூலம் நான் தினமும் ரூ.150-400 சம்பாதிக்கிறேன். இப்போது நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து ஆங்கிலப் பள்ளியில் எல்.கே.ஜி படிக்கும் எனது மகனின் கல்வி கட்டணத்தை நானே செலுத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளேன்,” என தலைநிமிர்ந்து சொல்கிறார்.
5ம் வகுப்போடு படிப்பை கைவிட்ட நிர்மலா மட்டுமல்ல, கலை அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பச்சாரா இனத்தைச் சேர்ந்த அஞ்சலி சௌஹான் என்பவரும், அரசின் இந்த இ-ரிக்ஷா திட்டத்தின் கீழ் வண்டி ஓட்டி வருகிறார்.
இ-ரிக்ஷா ஓட்டுவது குறித்து அஞ்சலி சௌஹான் கூறியதாவது:
“எங்களுடைய இ-ரிக்ஷாவில் பயணிப்பதை பெண்கள், கிராமப்புறத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர். எங்களுடைய சேவையால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாக சில தனியார் பேருந்து நடந்துநர்கள் எங்களிடம் தகராறு செய்தனர். ஆனால், எங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினரும், போலீசாரும் பக்க பலமாக இருந்து பிரச்சனைகளை தீர்த்துவைக்கின்றனர்,” என்கிறார்.
மேற்கு மத்தியப்பிரதேச மாவட்டத்தைச் சேர்ந்த பார்வதி பாய் தஹிமாவும் 10 பெண்களில் ஒருவராக ஆட்டோ ஓட்டி வருகிறார். 10ம் வகுப்பு படிப்பை பாதியில் கைவிட்ட பார்வதிக்கு, தனது 4 பிள்ளைகளையும் வளர்க்க இந்த வருமானம் உதவிகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மனைவி பார்வதி வேலைக்கு செல்வது அவர் கணவர் பண்டி தஹிமா கூறுகையில்,
“போதை ஒழிப்பு மையத்தில் ஆலோசகராகப் பணிபுரிவதன் மூலம் நான் மாதந்தோறும் ரூ.5,500 சம்பாதித்தாலும், எனது குடும்பத்தை ஆதரிக்க தனியார் நிறுவனங்களில் பகுதி நேர டிரைவராகவும் பணியாற்ற வேண்டியுள்ளது. இ-ரிக்ஷா ஒரு வகையான ஆசீர்வாதம். என் மனைவி அதை ஓட்டி ஒரு நாளைக்கு 300-500 ரூபாய் சம்பாதிக்கிறார்,” என்கிறார்.
பாம்பே டீன் சேலஞ்ச் (BTC) இன் மாநில செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சார்லட்டன் கூறுகையில்,
கடத்தப்பட்ட/விபச்சாரத்தில் தள்ளப்பட்ட நபர்களை மீட்டு கவனித்துக் கொள்வதே எங்களுடைய அமைப்பின் நோக்கம். நாங்கள் சில ஆண்டுகளாக மண்ட்சூர் மற்றும் நீமுச் மாவட்டங்களில் உள்ள 10-12 கிராமங்களில் பச்சாரா பழங்குடியினருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். மண்ட்சூர் மாவட்டத்தின் பன்பூர் கிராமத்தில் பழங்குடியினரின் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியும் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளன,” என்கிறார்.
அடுத்தகட்டமாக பாம்பே டீன் சேலஞ்ச் அமைப்பு உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து, பச்சாரா மக்களுக்காக மொபைல் சுகாதார பரிசோதனை முகாம்கள் மற்றும் பாலியல் நோய்வு பரவலை தடுக்கும் கிளினிக்குகளை தொடங்குவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது.
தகவல் உதவி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தொகுப்பு: கனிமொழி