நக்ஸலைட் டூ தொழில்முனைவர்: போலீஸின் முயற்சியால் மறுவாழ்வு பெற்ற பெண்கள்!
சொந்தமாக தொழில் தொடங்கிய நக்ஸல் பெண்கள்!
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் பலவற்றால் நக்ஸலைட்கள் ஆதிக்கம் அதிகம். இதில் ஒரு முக்கியமான பகுதி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்ட மலைப்பகுதி. இந்த மலைப்பகுதியைச் சேர்ந்த பலர் நக்ஸலைட்டுகளாக அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.
சில மாதங்களில் இவர்களில் 10 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 11 பேர் போலீஸில் சரணடைந்தனர். சரணடைந்த அவர்களுக்கு கட்சிரோலி காவல்துறை சார்பில் உதவப்பட்டு வந்தது.
குறிப்பாக நலன்புரி முயற்சிகளின் ஒருபகுதியாக அவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு தேவையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுவந்தன. சரணடைந்த பெண் நக்சல்களுக்காக 'நவஜீவன் உத்பாதக் சங்க்' என்ற சுய உதவிக் குழுவை (SHG) உருவாக்க காவல் துறைக்கு கட்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அங்கித் கோயல் வழிகாட்டினார். இந்த முயற்சியால் பெண்கள் நக்சல்கள் தற்போது தொழில்முனைவோராக உருவெடுத்துளளனர்.
இந்தப் பெண்கள் அனைவரும் 'க்ளீன் 101' என்ற பிராண்ட் பெயரில் தரையை சுத்தம் செய்யும் பினாயில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சரணடைந்த 11 பேருமே பினாயில் தயாரிப்பதில் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் உருவாக்கியுள்ள 'க்ளீன் 101' பினாயிலுக்கு நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளது என்கிறார் அவர்களை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்த மாவட்ட எஸ்பி கோயல்.
“சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர்களின் முதல் தயாரிப்பான 'க்ளீன் 101' பினாயில் விற்பனை ஊக்கம் கொடுக்கிறது.”
கட்சிரோலி காவல் துறை தான் அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த உதவுகிறது. 'க்ளீன் 101' பினாயில் தரமானதாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் சந்தையில் விற்பனையாகும் மற்ற பினாயில்களை விட 'க்ளீன் 101' மிகக்குறைவான விலையில் விற்கப்படுகிறது.
ஏற்கனவே பல அரசு மற்றும் அரசு சாரா துறைகளுக்கு சப்ளை செய்யும் ஆர்டரை அந்தப் பெண்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம். தொடர்ந்து நக்ஸலைட்டுகள் மறுவாழ்வு பெறத் தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம், என்று பேசியுள்ளார்.
தொகுப்பு: மலையரசு