அமராவதியில் பிறந்து வளர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் நிறுவனத்தை கட்டமைத்த ப்ரமோத்!
பிரமோத் ஜஜ்ஜூ கலாரி கேப்பிடல் நிறுவனத்தின் வென்சர் பார்ட்னர் மற்றும் பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் சிடிஓ ஆவார். ஒருவருக்கு தொழில்நுட்பத்தில் இருக்கும் நிபுணத்துவமும் கற்றலில் இருக்கும் ஆர்வமும் அவர் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்க உதவும் என்பதற்கு இவர் மிகச்சிறந்த உதாரணம்.
மஹாராஷ்டிராவின் அமராவதியில் பிறந்து வளர்ந்த இவர் நான்காம் வகுப்பு வரை மராத்தி வழி கல்வி பயின்றார். அவரது நண்பர் பிட்ஸ் பிலானியில் விண்ணப்பித்ததைக் கண்டு இவரும் அங்கு கணிணி அறிவியல் படிக்க விரும்பி விண்ணப்பித்தார்.
பிட்ஸ் பிலானி பயணம்
பிட்ஸ் பிலானியில் இருந்த காலகட்டம் அவரது வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணம் என்கிறார். முதலாம் ஆண்டு துவங்கியே இன்ஃபர்மேஷன் ப்ராசசைங் செண்டரில் (IPC) நேரம் செலவிட்டார். ப்ரமோத் Pascal பயின்றபோது ப்ரோக்ராமிங் மற்றும் கம்ப்யூட்டர் மீது ஆர்வம் ஏற்படத் துவங்கியது. கல்லூரியில் தாமாகவே C ப்ரோக்ராமிங் கற்றுக்கொண்டார்.
இண்டெர்ன்ஷிப்
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இண்டெர்னாக இருந்து Pascal ப்ராஜெக்டில் பணியாற்றினார். இரண்டாவது இண்டர்ன்ஷிப்பிற்காக தேசிய தகவல் மையத்தில் இமெயில் சிஸ்டத்தில் பணியாற்றினார்.
“அந்த சமயத்தில் NIC-யில் டிஜிட்டல்மயமாவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டத்தையும் ஒருங்கிணைத்து இமெயில் இணைப்பு வழங்க முயற்சித்தனர்,” என்றார்.
குறைவான GRE ஸ்கோர்
இறுதி ஆண்டு படிக்கையில் தனது நண்பர்கள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல விரும்புவதை ப்ரமோத கண்டார். அவருக்கு ஆங்கிலம் மீது இருந்த பயம் காரணமாக GRE தேர்வில் குறைவான மதிப்பெண்களே எடுத்தார்.
ப்ராஜெக்ட்
ப்ரமோத் முதலில் ஜெனோமிக்ஸ் ப்ராஜெக்டில் ஈடுபட்டார். அதில் ஆர்வம் இல்லாததால் கம்ப்யூட்டர் விஷன் தொடர்பான மற்றொரு ப்ராஜெக்டை தேர்வு செய்தார். அதன் பிறகு கம்ப்யூட்டர் விஷன் ப்ராஜெக்டில் ஈடுபட்டார்.
சன் மைக்ரோசிஸ்டம்ஸ் மற்றும் முதல் ப்ராஜெக்ட்
சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பில்ட் மாஸ்டராக பணியாற்றினார். சன் மைக்ரோசிஸ்டம்ஸ் FLEXIm பயன்படுத்தி சன் கம்பைளரில் லைசன்ஸை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. சன் சிஸ்டமில் கோட் இண்டெக்ரேட் செய்யும் பொறுப்பில் ப்ரமோத் இருந்தார். இதுவே அவரது முதல் தனிப்பட்ட ப்ராஜெக்டாகும்.
Healtheon நிறுவனத்தில் வளர்ச்சி
1998-ம் ஆண்டு ப்ரமோத் பி2பி ஹெல்த்கேர் ஸ்டார்ட் அப்பான Healtheon நிறுவனத்தில் இணைந்தார். இந்த ஸ்டார்ட் அப் சிலிக்கான் வேலி புகழ் ஜிம் க்ளார்க் அவர்களால் நிறுவப்பட்டது என்றதால் பிரபலாகியிருந்தது. இங்கு இணைந்த ஓராண்டில் சீனியர் என்ஜினியர் பதிவியில் இருந்து மேலாளர் பதவிக்கு உயர்ந்தார்.
அடுத்தடுத்த நிறுவனங்கள்
ப்ரமோத் Hotdispatch நிறுவனத்தில் இயக்குனராக சேர்ந்தார். அப்போது அதன் ப்ராடக்ட் Lisp கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. ஆகவே ப்ரமோத் புதிய ப்ராடக்டை ஜாவா கொண்டு உருவாக்க தீர்மானித்தார். இந்நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்தும் விரைவிலேயே மூடப்பட்டது. அடுத்த பணியைக் கண்டறிவது கடினமாக இருந்தது. ஏனெனில் மேலாளர் அல்லது இயக்குனர் அளவில் பணி வாய்ப்புகள் அதிகம் இருக்கவில்லை. இறுதியாக Xora-வில் இணைந்தார்.
Xora நிறுவனத்துடனான பயணம்
Xora தளத்தில் பல ப்ராடக்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2001-ம் ஆண்டு விற்பனை சவாலாக மாறியது. இந்நிறுவனத்தின் க்ளையண்டுகளில் ஒருவர் டைம் ஷீட் அப்ளிகேஷன் தேவை இருப்பதாக கூறியபோது SaaS-க்கு மாறினார்கள். விரைவில் பலருக்கு தேவை இருப்பது தெரியவந்தது.
இந்த ப்ராடக்ட் அறிமுகப்படுத்தப்பட்டபோது ப்ரமோத் இந்தியா திரும்பி Xora-வின் மையத்தை துவங்க நினைத்தார். விரைவில் இந்தியாவில் குழு உறுப்பினர்கள் அதிகரிக்கத் துவங்கியதால் அமெரிக்காவில் ஊழியர்களை குறைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சூழல் வருத்தமளித்ததாக ப்ரமோத் தெரிவித்தார்.
பிக்பாஸ்கெட்
GrowthStory நிறுவனத்தின் ஸ்ரீனிவாஸ் அனுமோலு பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் சிடிஓ-வாக இணையுமாறு பரிந்துரைத்தார். ப்ரமோத் பிக் பாஸ்கெட் இணை நிறுவனரான வி எஸ் சுதாகரை சந்தித்த பின்னர் இணைந்துகொண்டார். ஆன்லைன் மளிகை தளமான ShopAsYouLike உடன் பிக்பாஸ்கெட் கைகோர்த்தது.
பிக்பாஸ்கெட் - முதல் இரண்டாண்டுகள்
ShopAsYouLike, Python சார்ந்ததாகும். ப்ரமோத் பிக்பாஸ்கெட் தொடர்பான பணிகளுக்கு தளத்தை மாற்றவேண்டாம் என தீர்மானித்தார். பிக்பாஸ்கெட் பணி காலத்தில் ப்ரமோத்தின் முந்தைய பணி அனுபவம் பெரிதும் உதவியது. வாடிக்கையாளர் அதிருப்தி காரணமாக பிக் பாஸ்கெட் நிறுவனம் இருப்பு இல்லாத வணிக மாதிரியில் இருந்து அதிக இருப்புகளுடன் கூடிய வணிக மாதிரிக்கு மாறியது. இந்த மிகப்பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ்கெட் உடனான அவரது முதல் ஆண்டு பரபரப்பாகக் கழிந்தது. பிக் பாஸ்கெட் செயலியின் முதல் வெர்ஷன் மெதுவாக இருந்ததால் செயலி டெவலப்மெண்ட் செயல்பாடுகளை நிறுவனத்திற்குள்ளாகவே அமைத்து இரண்டாவது வெர்ஷனுக்கு மேம்படுத்தினார்.
பிக் பாஸ்கெட் நிறுவனத்தில் வளர்ச்சி
பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகளில் ப்ரமோத் நிறுவனத்தின் முதல் ப்ராடக்ட் மேலாளரையும் கூடுதல் மேலாளர்களையும் நியமித்தார். முதல் இரண்டாண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேக்எண்ட் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். மூன்றாம் ஆண்டு வாடிக்கையாளர் தரப்பிலும் பேக்எண்ட் தரப்பிலும் இரண்டிலுமே கவனம் செலுத்தப்பட்டது.
பிக்பாஸ்கெட் ஆர்டர் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தவில்லை. அழகான ப்ராடக்ட்டை காட்சிப்படுத்துவது மட்டும் முக்கியமல்ல. சரியான நேரத்தில் டெலிவர் செய்யப்படவேண்டும். ஆகவே அனைத்து பிரிவுகளும் திறம்பட செயல்படவேண்டியது அவசியமாகிறது என ப்ரமோத் குறிப்பிட்டார்.
கூடுதல் வணிகங்கள்
விரைவில் பி2பி கிரானா வணிகங்கள், எக்ஸ்பிரஸ் சேவை ஆகிய கூடுதல் வணிகங்களை பிக்பாஸ்கெட் இணைத்துக்கொண்டது. கேக், இனிப்புகள், பூக்கள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் வெவ்வேறு விற்பனையாளர்களிடமிருந்து பிக்பாஸ்கெட் வாயிலாக ஆர்டர் செய்யலாம். பிக்பாஸ்கெட்டின் இறுதி தூர டெலிவரி கட்டமைப்பு வாயிலாக விநியோகம் செய்யப்படும்.
பிக்பாஸ்கெட்டில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் சில தீர்மானங்கள் முக்கியமானதாக இருந்ததாக ப்ரமோத் குறிப்பிடுகிறார்.
1. Linode-ல் இருந்து AWS-க்கு மாறியது.
2. வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட ஒட்டுமொத்த உறுப்புக்கூறுகளையும் மீண்டும் கட்டமைத்தது.
”நாங்கள் விரைவாக வளர்ச்சியடைவோம் எனத் தெரிந்திருந்தால் தளத்திற்கென ஒரு பிரத்யேக குழுவை உருவாக்கியிருப்பேன். நமக்கு என்ன தெரியாது என்பதையே நாம் அறிந்திருக்கமாட்டோம் என்பதுதான் உண்மை,” என்றார்.
கலாரி கேப்பிடல்
ப்ரமோத்தின் பெற்றோர் அவரைப் பார்ப்பதற்காக பெங்களூரு வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஏற்பட்ட காயங்களால் இரண்டு வாரங்களில் ப்ரமோத்தின் அப்பா உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ப்ரமோத்தை வெகுவாக பாதித்ததால் தனது பணி வாழ்க்கையில் இருந்து ஒரு சிறு இடைவேளை எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தார்.
அந்த சமயத்தில் கலாரி கேப்பிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வாணி கோலாவை சந்தித்தார். கலாரி கேப்பிடலுடன் இணைந்திருந்த நிறுவனங்கள் சிலவற்றிற்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குமாறு அவர் ப்ரமோத்திடம் கேட்டுக்கொண்டார். ப்ரமோத் கலாரி கேப்பிடல் வென்சர் பார்ட்னராக இணைந்துகொண்டார்.
பணியிலமர்த்தும் முறை
ப்ரமோத்தைப் பொருத்தவரை ஒரு சிறந்த கலாச்சாரத்தை உருவாக்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் அவரது முதல் ப்ரசெண்டேஷன் மதிப்பு மற்றும் கலாச்சாரம் சார்ந்ததாக இருந்தது.
ஸ்டார்ட் அப்கள் தொழில்நுட்ப ரீதியாக செய்யும் தவறுகள்
ஆரம்ப நிலையில் உள்ள சில ஸ்டார்ட் அப்கள் கீழ்கண்ட தவறுகளில் ஏதேனும் ஒன்றைச் செய்ய நேரிடும் என ப்ரமோத் கருதுகிறார்.
1. பலர் தங்களது கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதில்லை
2. சில நேரங்களில் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு தொழில்நுட்பத்தின் மீதுள்ள ஈடுபாடு மிகுதியாக இருக்கும். ஒரு சிக்கலுக்கு எளிய தீர்வு ஒன்று இருக்கும். எப்போதும் சிக்கலான தொழில்நுட்பத்தில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடாது.
3. தொழில்நுட்ப கட்டமைப்பில் சிக்கலான விஷயங்களை புகுத்தவேண்டாம்.
தொழில்நுட்பம் என்பது பயனரின் வாழ்க்கை எளிதாக்கும் விஷயம்தான் என்கிறார் ப்ரமோத்.
மதிப்பு
ப்ரமோத் தனது வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என விரும்புகிறார். நேர்மை, நாணயம், நன்னெறி போன்றவையே வலுவான அடித்தளமாக அமையவேண்டும் என்றும் கடும் உழைப்பு அவசியம் என்றாலும் வெற்றிக்கு அது மட்டுமே வழிவகுக்காது என்றும் ப்ரமோத் குறிப்பிடுகிறார்.
இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் ப்ரமோத் ஆர்வமாக உள்ளார். ஆனால் உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான நிறுவனங்கள் எதுவும் இல்லை என்கிறார். இதுவே ஒரு நிறுவனத்தை உலகளவில் வளர்ச்சியடையச் செய்ய உதவவேண்டும் என்கிற ஊக்கத்தை அளித்ததாக தெரிவிக்கிறார். அடுத்த ஐந்து முதல் பத்தாண்டுகளில் இதில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறார். அதே போல் சமூக நலனில் பங்களிக்கவும் விரும்புகிறார்.
ஆங்கில கட்டுரையாளர் : அலோக் சோனி | தமிழில் : ஸ்ரீவித்யா