23 வயது இளம்பெண், காது கேளாத கலைஞர்களின் குரலாக மாறிய கதை
காதலுக்கு மொழி கிடையாது என்று சொல்வார்கள். ஸ்மிருதி நாக்பாலின் இரண்டு அக்காக்கள் காது கேளாத மாற்றுத்திறனாளிகள். ஆனால் அவர்கள் மூன்று பேரும் தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கு இது எந்த வகையிலும் தடையாக இல்லை. மற்ற எல்லா குடும்பங்களையும் போல இவர்களும் தங்கள் கருத்துகளை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொண்டனர். தனது அக்காக்களின் குரலாக இருப்பதற்காக ஸ்மிருதி, சைகை மொழியை கற்றுக் கொண்டார்.
23 வயதில் ஸ்மிருதி தற்போது அடுல்யகலா (Atulyakala) என்ற சமூக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.,வாக இருக்கிறார். வரைகலை பங்களிப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான கூட்டணிகள் மூலம் காது கேளாத கலைஞர்களின் வாழ்வில் வளம் சேர்க்கிறது இந்த நிறுவனம். “என்னை விட 10 வயது மூத்த சகோதரிகள் இருவருடன் வளர்ந்தவள் நான். சைகை மொழியை கற்பதன் மூலமாக மட்டுமே அவர்களுடன் நான் தொடர்புகொள்ள முடியும். அந்த வகையில் அது எனது தாய்மொழியாகவே மாறிவிட்டது. எனது பெற்றோருக்கும், எனது சகோதரிகளுக்கும் இடையில் நான் ஒரு பாலமாக இருந்ததால், நான் அந்த மொழியை கற்பது எனது குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது,” என்கிறார் ஸ்மிருதி. இந்தியாவில் பல லட்சக்கணக்கான (0.9 - 14 மில்லியன் பேர்) காதுகேளாதோர் என கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் காது கேளாதோர் எண்ணிக்கையில் 5இல் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். எனவே இந்த குறைபாடுடன் உள்ளவர்கள் அதிக அளவு உள்ள தேசமாக இந்தியா இருக்கிறது. இவர்கள் அதிக அளவில் இருநப்பதால், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அதில் முக்கியமானது கல்விக் குறைபாடு. அவர்கள் தொடர்புகொள்வதற்கு இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன – எழுதுவது மற்றும் சைகை மொழி. அமைப்பு முறைகளும், கொள்கைகளும் போதுமான அளவு இல்லாததால், அவர்கள் சரியாக எழுதக் கற்றுக் கொள்வது சிரமமானதாக இருக்கிறது.
இந்த பிரச்னைகளை அவரின் அக்காக்கள் எதிர்கொண்டதை, ஸ்மிருதி கண்ணெதிரில் பார்த்திருக்கிறார். அவருக்கு 16 வயதான போது, தேசிய காது கேளாதோர் அமைப்பில் (NAD - National Association of Deaf) தன்னார்வலராக இணைந்து கொண்டார். சமூகத்திற்கான தனது பங்களிப்பை அவர் இப்படி திருப்பிச் செலுத்தினார். சில ஆண்டுகள் கழித்து, அவர் வணிக மேலாண்மை துறையில் இளங்கலை படித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு டிவி சேனலில் இருந்து அழைப்பு வந்தது. செய்தி நிகழ்ச்சியை சைகை மொழியில் மொழிபெயர்க்க அவர்களுக்கு ஒருவர் தேவைப்பட்டார், அவர்களின் தேர்வு ஸ்மிருதியாக இருந்தது. இப்படி, கல்லூரி படித்துக் கொண்டிருக்கும்போதே, தூர்தர்ஷன் நெட்வொர்க்கின் காது கேளாதோருக்கான காலை செய்திகளுக்கு அவர் பொறுப்பாளரானார்.
ஏராளமான வாய்ப்புகளுக்கு இந்த வேலை அவருக்கு வாசலைத் திறந்துவிட்டது. காதுகேளாதோர் சமூகத்தின் பிரச்னைகளை தீர்ப்பதில் அவருக்கு உள்ள ஆர்வத்தை அறிந்துகொள்ள இது வாய்ப்பாக அமைந்தது. பட்டப்படிப்பு முடித்த ஏழு மாதங்களுக்கு பிறகு, அவர் ஒரு கதையை கேள்விப்பட்டார். அவருக்கு களத்தில் இறங்கும் உத்வேகத்தை தந்தது அந்த கதைதான். “நுண்கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு மூத்த கலைஞரை நான் சந்தித்தேன். துரதிர்ஷ்டவசமாக, அவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உடலுழைப்பு சார்ந்த வேலையை செய்து கொண்டிருந்தார். அவரின் திறமைகள் முழுமையாக வீணடிக்கப்பட்டிருந்தன. நான் வீடு திரும்பியதும், இதுகுறித்து கொஞ்சம் ஆராய ஆரம்பித்தேன். அப்போதுதான் காது கேளாத கலைஞர்களுக்கு கை கொடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று தெரிந்துகொண்டேன். எனவே எனது நண்பர் ஹர்ஷித்துடன் இணைந்து, அடுல்யகலாவை ஆரம்பிக்க முடிவெடுத்தேன். நான் என்.ஜி.ஓ.வில் சந்தித்த அந்த கலைஞர் எங்கள் பிராஜெக்டில் இணைந்துகொண்டார்,” என்கிறார் ஸ்மிருதி.
அடுல்யகலா, லாப நோக்கத்துடன் நடத்தப்படும் ஒரு சமூக நிறுவனம். காது கேளாத கலைஞர்கள் வளரவும், கற்றுக்கொள்ளவும், கௌரவமும், பெருமிதமும் நிறைந்த ஒரு வாழ்வை வாழவும், அதை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் அடுல்யகலா வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. காது கேளாத கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளை ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் விற்பனை செய்து அவர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். ஆனால் மற்ற என்ஜிஓ.,க்களிடம் இருந்து அவர்கள் தங்களை பெருமையுடன் தனித்துக் காட்டுகிறார்கள். “பொதுவாக அவர்களின் படைப்பாற்றல் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறது. இந்த தடையிலிருந்து வெளியில் வந்து, தங்களின் படைப்பாற்றலை பரவச் செய்வதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு பெற்றுத் தருகிறோம். அவர்களின் பெயரை முன்னிலைப்படுத்துவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்துகிறோம். எங்கள் பிராண்ட்டின் பெயரை பிரபலமடையச் செய்வதற்காக நாங்கள் காது கேளாத கலைஞர்களை பணியில் அமர்த்த விரும்புவதில்லை. எங்களின் பிராண்ட் அவர்களின் பெயரை பிரபலப்படுத்த உதவ வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான் ஒவ்வொரு படைப்பிலும் அவர்கள் கையெழுத்திடுகிறார்கள். நாம் சொந்தமாக ஒன்றை உருவாக்குகிறோம் என்ற உணர்வை அவர்கள் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்கிறார் ஸ்ம்ருதி.