கழிவுப் பொருட்களை கலைப்பொருட்களாக மாற்றுவதுடன் ஏரியை சுத்தப்படுத்தும் கேரளப் பெண்!
இருபத்தி மூன்று வயதான அபர்ணாவின் பொழுதுபோக்கு அப்புறப்படுத்தப்பட்ட பாட்டில்களை கலைப்பொருளாக மாற்றுவதுடன் ஏரியின் கரை சுத்தமாகவும் உதவியுள்ளது.
இந்தியாவில் தண்ணீர் மாசு பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மோசமான கழிவு அகற்றல் மேலாண்மையால் ஏரிகளும் ஆறுகளும் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளது. உதாரணத்திற்கு பெங்களூருவில் இருக்கும் பெல்லந்தூர் ஏரியின் தண்ணீரில் அதிகளவில் ரசாயனக் கழிவுகள் கலந்திருப்பது குறித்து சமீபத்திய செய்திகளில் பார்த்திருப்போம்.
அரசாங்கமும் குடிமைப்பணி அதிகாரிகளும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாமல் மற்றவர்களை குற்றம்சாட்டி வரும் நிலையில் பொதுமக்கள் இந்தப் பிரச்சனையைத் தாங்களே கையிலெடுத்து தீர்வு காண முற்படுகின்றனர்.
அப்படிப்பட்ட ஒருவர்தான் 23 வயது அபர்ணா. இவர் கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர். பி.எட் முதலாமாண்டு மாணவி. இவர் அப்புறப்படுத்தப்பட்ட கண்ணாடிகள், தெர்மாகோல், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை மறுபயனபாட்டிற்கு உட்படுத்தி அஷ்டமுடி காயல் ஏரியின் கரையை அழகுப்படுத்துகிறார். அபர்ணா இது குறித்து ’தி நியூஸ் மினிட்’ உடன் உரையாடுகையில்,
”அஷ்டமுடி ஏரியின் கரைகளில் ஏராளமான பாட்டில்கள் இருக்கும். அவற்றில் அழகாக இருக்கும் பாட்டில்களை சேகரித்து வீட்டிற்கு எடுத்து வருவேன். எனக்கு எப்போதும் ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் அதிகம். அதையே பாட்டில்களில் தீட்டினேன். அவை அலங்காரப் பொருட்களாக மாறியது,” என்றார்.
அபர்ணாவின் பொழுதுபோக்கு பாட்டில்களை கலைப்பொருளாக மாற்றுவதுடன் ஏரியின் கரையில் இருக்கும் கழிவுகள் அகற்றப்படவும் உதவுகிறது. அபர்ணாவின் வீட்டின் பின்புறத்தில் இந்த பாட்டில்கள் ஏராளமாக குவிந்தபோது அவற்றை விற்பனை செய்யத் தீர்மானித்தார். இதற்காக ’குப்பி’ என்கிற முகநூல் பக்கத்தை உருவாக்கினார். குப்பி என்றால் மலையாளத்தில் பாட்டில் என்று பொருள்.
முறையான பயிற்சி ஏதும் இல்லாதபோதும் அபர்ணாவின் கலைப்படைப்புகள் அழகாக காட்சியளித்தது. ஆன்லைனில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
”அதிக ஆர்டர்கள் வரத்துவங்கியதால் உற்சாகம் பிறந்தது. அனைவருக்கும் என்னுடைய படைப்புகள் பிடித்திருந்தது. இது எனக்கு மகிழ்ச்சியளித்தாலும் அப்புறப்படுத்தப்பட்ட அந்த பாட்டில்கள் எடுக்கப்பட்ட பகுதி சுத்தமானது அதிக மகிழ்ச்சியளித்தது,” என அபர்ணா தெரிவித்ததாக ’தி யூத்’ குறிப்பிடுகிறது.
அபர்ணா மற்றவர்களுக்கும் உந்துதளித்துள்ளார். மக்கள் ஏரியின் கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பாட்டில்கள், தெர்மாகோல், ப்ளாஸ்டிக் கவர்கள், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் கப்கள், நைலான் துணிகள் போன்றவற்றை சேகரித்து மறுபயன்பாட்டிற்கு உட்படுத்த அபர்ணாவிடம் அனுப்பிவைக்கத் துவங்கினர்.
கழிவுப் பொருட்களை சேகரிப்பது எளிதான செயலாக இருப்பினும் பாட்டில்களின் உட்பகுதியை சுத்தப்படுத்துவது கடினமாக இருந்ததாக தெரிவிக்கிறார் அபர்ணா.
இந்த முயற்சியில் பலர் எங்களுடன் இணைந்துகொண்டனர். கிட்டத்தட்ட ஒரு ட்ரக் முழுவதும் பாட்டில்களை சேகரித்தோம். பாட்டில்களை சேகரிப்பதுடன் அவற்றை சுத்தப்படுத்தும் பணியிலும் அவர்கள் உதவினார்கள் என அபர்ணா தெரிவித்ததாக ’தி யூத்’ குறிப்பிடுகிறது.
இதன் மூலம் கிடைத்த ஊக்கத்தால் அபர்ணா தனது நகரில் உலக தண்ணீர் தினத்தன்று (மார்ச் 22) ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தார். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மாநில சுகாதாரத் துறையின் ஊழியர்கள் போன்றோர் இதில் கலந்துகொண்டனர்.
பொருட்களை எப்படி சுத்தப்படுத்துவது, அலங்கரிப்பது, மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவது என்பது குறித்து மக்களுக்கு விவரிக்க அப்புறப்படுத்தப்படுத்த பொருட்களில் இருந்து அவர் உருவாக்கிய கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தினார் அபர்ணா. கழிவுப்பொருட்கள் குறித்த மக்களின் பார்வையை அபர்ணா விவரிக்கையில்,
நாம் கலைப்பொருட்களை கடைகளில் இருந்து வாங்க பணம் செலவிடுவோம். அதற்கு பதிலாக இத்தகைய கழிவுப்பொருட்களை பயனுள்ள பொருட்களாக நாம் மாற்றலாம். சாலைகளில் இருந்து கழிவுகளை சேகரிப்பதைப் பார்த்து பலர் என்னை கேலி செய்துள்ளனர். இந்த மனப்பான்மை மாறவேண்டும்,” என அபர்ணா தெரிவித்ததாக ’டிஎன்எம்’ குறிப்பிடுகிறது.
கட்டுரை : THINK CHANGE INDIA