விடுமுறையை கொண்டாடுங்கள்!
கோடை விடுமுறையை திண்டாடாமல் கொண்டாட எளிய வழிமுறை...
எல்லாப் பள்ளிகளும் கோடை விடுமுறையை விட்டுவிட்டது. குறைந்தது 50 நாட்களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு கூடுதலாகவே விடுமுறை கிடைக்கும். +2 முடித்த மாணவர்களுக்கு அதை விட கூடுதலாக விடுமுறை கிடைக்கும். இந்த அளவிற்கு பெரிய விடுமுறை அவர்கள் வாழ்வில் இனி 60 வயதுக்கு பின் தான் கிடைக்கும்.
பத்து நாட்களுக்கு பின்னர் ஒரு சிலருக்கு விடுமுறை களைப்பாக இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல, பலருக்கும் விடுமுறை சுவாரஸ்யமாக இல்லாமல் போகும். சில நாட்களுக்கு பின்னர் வீடுகளில் இருக்கும் பெற்றோர்கள் இளமை பருவத்தில் இருக்கும் பிள்ளைகளை மேய்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். இவை அனைத்தும் ஒரு அளவிற்கு தவிர்க்க முடியும். விடுமுறையை பயனுள்ளதாகவும், சுவாரசியமாகவும் எவ்வாறு கழிக்க முடியும் என்பதை பற்றியது தான் இந்த கட்டுரை.
இசை கற்றுக்கொள்
எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்தால் அது ஒரு பழக்கமாக மாறிவிடும். கோடை விடுமுறை நல்ல பழக்கங்களை வளர்ப்பதற்கு ஒரு அறிய வாய்ப்பு. கோடை விடுமுறையில் மாணவர்கள் இசை வகுப்புகளில் சேர்ந்து, இசை கருவிகளை வாசிக்க பழகிக்கொள்ளலாம். எந்தரமயமான இந்த உலகில் இசை கருவிகள் மன அமைதியும் நிம்மதியும் உண்டாக்க வழிவகுக்கும். சூப்பர் சிங்கர், சரிகமப போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க மட்டும் தான் இசை கற்று கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுய நிம்மதிக்காக கற்று கொள்ளவது சிறப்பு.
ஊர் சுற்று
கோடை விடுமுறை என்றால் பலரும் சுற்றுலா செல்வது வழக்கம். பெரும்பாலான சுற்றுலாக்கள் 10 நாட்களுக்கு மேல் இருக்கப் போவதில்லை. 50 நாட்களில்,10 நாட்கள் மட்டும் சுவாரசியமா இருக்க, மீதி நாட்கள் போர் அடிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் வசிக்கும் ஊரில் உள்ள இடங்களுக்கு சென்று வரலாம். நீங்க வசிக்கும் ஊரு இல்லாமல், ஊருக்கு அருகில் உள்ள இடங்களுக்கு சென்று வரலாம். இதன் மூலம் பல அறிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மதுரை மற்றும் அதன் சுற்றுப் புறத்தில் இருக்கும் மாணவர்கள் கீழடி போன்ற இடங்களுக்கு சென்று வரலாம். இந்த பயணங்களுக்கு ரயில் சிறந்ததாக இருக்கும். செலவும் குறைவாக இருக்கும். பஸ் அல்லது சொந்த வண்டியில், செல்வ செழிப்பானவராக இருந்தால் சென்று வரலாம். நல்லது.
ஓடி விளையாடு!
10 நாட்களுக்கு மேல் போர் அடிப்பதற்கு முக்கியக் காரணம், ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்வது தான். தொண்டர்ந்த மொபைல் போன் மூலமாக விளையாடினாலோ, சாட்டிங் செய்தாலோ 10 நாட்களுக்கு பின்னர் போர் அடிக்க தான் செய்யும். பெரும்பாலும் மொபைல் போன், வீடியோ கேம் போன்றவற்றை தவிர்த்து வெளியில் சென்று விளையாடுவது சிறப்பு. தெரு கிரிக்கெட், பீச் கிரிக்கெட், பீச் வாலி பால் போன்ற விளையாட்டுகளை தினசரி வாழ்க்கையில் இணைத்து கொள்ளுவது நல்லது. 24 மணிநேரமும் சாட்டிங், Facebook என்று இருந்தால் 10 நாட்கள் அல்ல, 5 நாட்களிலே போர் அடிக்க ஆரம்பித்து விடும். எத்தனை நாட்கள் ஆனாலும் எனக்கு போர் அடிக்காது, நான் இதை தான் தொடர்ந்து செய்வேன் என்றால், மீண்டும் பள்ளிக்கு போகும் போது கூடுதலாக சதையுடன் செல்ல வேண்டி இருக்கும்.
இது எல்லாம் செய்யாதே!
விடுமுறை என்பது அனுபவிக்க தான். எனவே தயவு செய்து (பள்ளி) சிறப்பு வகுப்புகளுக்கு சென்றோ அல்லது தனியார் நிறுவனங்கள் நடத்தும் கோச்சிங் வகுப்புகளில் சேர்ந்து விடுமுறையிலும் படிப்பதை தவிர்ப்பது நல்லது.
தொடர் படிப்பில் இருந்து விடுப்பு கொடுக்க தான் விடுமுறை. அந்த விடுமுறை நாட்களிலும் எதையாவது படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல. பெற்றோர்கள் தயவு செய்து சமுதாயத்துக்கு மனிதர்களை தருவதற்கு முயற்சி செய்ய வேண்டும், எந்திரங்களை அல்ல. அப்படியே படிக்க வேண்டும் என்றால், நல்ல கதை புத்தகங்கள் வாங்கிக் கொடுங்கள். தயவு செய்து வெளியே சென்று விளையாடுங்கள். இயற்கையை ரசித்து பொன்னான காலத்தை கொண்டாடுங்கள்.
நல்ல முறையில், மகிழ்ச்சியாக விடுமுறையை அனுபவிக்க என் வாழ்த்துக்கள்!
கட்டுரையாளர்: பிரவீன் குமார், ஒரு மென்பொறியாளர் மற்றும் பேச்சாளர். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். யுவர்ஸ்டோரி அதற்கு பொறுப்பேற்காது.