குப்பைப் பைகளில் இருந்து பல சைஸில் ‘உடற்பயிற்சி ஆடைகள்’ உருவாக்கும் தோழிகள்!
ஜீவிகா தியாகி, கனுப்ரியா முந்த்ரா இருவரும் இணைந்து உலகளவில் பிரபலமாக இருக்கும் அத்லீஷர் பிராண்டுகளுடன் போட்டியிடும் வகையில் ஒரு இந்திய பிராண்டை உருவாக்கியுள்ளனர்.
கேஷுவலான, வசதியான ஆடை வகைகளை 'அத்லீஷர்’ என்று சொல்கிறோம். இந்த வகையான உடைகளை உடற்பயிற்சி செய்யும்போதும் அணிந்துகொள்ளலாம். தினசரி பயன்பாட்டிற்கும் வசதியாக இருக்கும். இந்த ஆடை வகைகள் இன்று மக்களிடையே பிரபலமாகி வருகிறது.
இந்த ஆடை வகைகள் வழக்கமான சைஸ்களில் மட்டுமே கிடைக்கும். பிளஸ் சைஸ் கிடைப்பது அரிது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது
பிராண்ட்.ஜீவிகா தியாகி, கனுப்ரியா முந்த்ரா இருவரும் இணைந்து உலகளவில் பிரபலமாக இருக்கும் ’அத்த்லீஷர்’ பிராண்டுகளுடன் போட்டியிடும் வகையில் ஒரு இந்திய பிராண்டை உருவாக்க விரும்பினார்கள்.

மும்பையைச் சேர்ந்த aastey மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் துணிகளைப் பயன்படுத்தி உடைகளைத் தயாரிக்கிறது. இப்படி மறுசுழற்சி செய்யும் நாட்டின் முதல் டி2சி ஸ்டார்ட் அப் aastey மட்டுமே என்று இந்நிறுவனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த ஸ்டார்ட் அப் லெக்கிங்ஸ், ஸ்போர்ட்ஸ் பிரா, யோகா மேட், ஐ மாஸ்க், டோட் பேக் என பல்வேறு தயாரிப்புகளை வழங்குகிறது.
”ஒரு aastey லெக்கிங் 25 டிராஷ் பேக்குக்கு சமம்,” என்கிறார் இணை நிறுவனர் ஜீவிகா தியாகி.
இந்தியா முழுவதும் செயல்படும் இந்த ஸ்டார்ட் அப்பின் தயாரிப்புகளை இதன் வலைதளத்தின் மூலம் வாங்கிக்கொள்ளலாம். அமேசான், மிந்த்ரா போன்ற மின்வணிக தளங்களிலும் வாங்கிக்கொள்ளலாம். 1,295 ரூபாயில் தொடங்கும் இதன் தயாரிப்புகள் 2,495 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பிராண்ட் முன்வைக்கும் தீர்வுகள்
அத்லீஷர் உடைகள் சந்தைக்கு புதிது இல்லை. இருந்தாலும் பிளஸ் சைஸ் உடைகள் குறைவாகவே கிடைக்கிறது. அதேபோல், இந்தப் பிரிவில் செயல்படும் மற்ற பிராண்டுகள் தயாரிக்கும் ஆடைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
”எத்தனையோ பிராண்ட் இருந்தாலும் எல்லா சைஸ்லயும் கிடைக்கறதில்லை. குறிப்பா பிளஸ் சைஸ் கிடைக்கறதே இல்லைன்னு சொல்லலாம். அதேமாதிரி, மத்த பிராண்டோட ஆடை தயாரிப்பு முறை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துதுன்னு தெரிஞ்சுகிட்டோம். இந்த ரெண்டு பிரச்சனைக்கும் தீர்வா நாங்க அறிமுகப்படுத்தினதுதான் aastey,” என்கிறார் ஜீவிகா.
தயாரிப்புப் பணிகள் மட்டுமல்ல, பேக்கிங் வேலைகள்கூட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படுவதாக ஜீவிகா தெரிவிக்கிறார்.
இந்த ஸ்டார்ட் அப்பிற்கு சொந்தமான தொழிற்சாலை எதுவும் செயல்படவில்லை. பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள தயாரிப்பாளர்கள் மூலம் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நிதி மற்றும் வருவாய்
சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களில், இந்நிறுவனத்தின் ஆண்டு தொடர் வருவாய் (ARR) ஒரு கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. தற்போது மும்மடங்கு வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியாவில் 60,000-க்கும் மேற்பட்ட பெண்களைச் சென்றடைந்திருக்கிறது.
”இந்த ஆண்டு தொடக்கத்துல Kalaari Capital மூலமா 10 கோடி ரூபாய் நிதி திரட்டினோம். ஆன்லைன்ல வளர்ச்சியடைய விரும்பறோம். அதுக்காக அடுத்த சுற்று நிதியைத் திரட்ட திட்டமிட்டிருக்கோம்,” என்கிரார் ஜீவிகா.
சவால்கள்
ஆரம்பத்தில் இரண்டு நிறுவனர்களுடன் ஒரே ஒரு இண்டர்ன் மட்டுமே இணைந்திருந்தார். இவர்கள் மூவரும் ஒரு குழுவாக செயல்படத் தொடங்கினார்கள். தற்போது 30 பேர் கொண்ட குழுவாக செயல்பட்டு வருகிறார்கள்.
பிராண்ட் உருவாக்கும்போது சந்தித்த சவால்களை ஜீவிகா பகிர்ந்துகொண்டபோது,
“சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிகள்ல தயாரிக்கறதுதான் எங்க நோக்கம். ஆனா தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் இவ்வளவு ஆர்டர் இருக்கணும்னு சொல்லுவாங்க. அதை எங்களால மீட் பண்ண முடியாம போகும். பெரிய சைஸ் உடைகளை இன்க்ளூட் பண்ணிக்கறதுதான் எங்க திட்டம். அதுக்கும் நிறைய தயாரிப்பாளர்கள் ஒத்துக்கலை. இதெல்லாம் ரொம்ப பெரிய சவாலா இருந்துது,” என்கிறார்.
அதேபோல், சரியான துணிகளை வாங்குவதும் சவாலாக இருந்துள்ளது. உலகளவில் செயல்படும் உற்பத்தியாளர்களுடன் இணைந்திருக்க விநியோகச் சங்கிலியை உருவாக்குவதில் சவால்களை சந்தித்திருக்கிறார்கள்.

வருங்காலத் திட்டங்கள்
கொரோனா பெருந்தொற்று மக்களின் ஆரோக்கியம் குறித்த கண்ணோட்டத்தை மாற்றியிருக்கிறது. மக்கள் உடல்நலன் மீது காட்டும் அக்கறை அதிகரித்திருப்பதால் அத்லீஷர் சந்தை அதிக கவனம் பெற்று வருகிறது.
தற்சமயம் aastey 60% அளவிற்கு முதல் நிலை நகரங்களிலும் 40% அளவிற்கு இரண்டாம் நிலை நகரங்களிலும் செயல்படுகிறது. வரும் நாட்களில் இரண்டாம் நிலை நகரங்களில் 70% வரை செயல்பட்டு விரிவடைய இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
ஆங்கில கட்டுரையாளர்: சுஜாதா சங்வன் | தமிழில்: வித்யா

பிரதமர் மோடியின் ஜாக்கெட் பின்னுள்ள கரூர் நிறுவனம் - பிளாஸ்டிக் பாட்டில்களில் உருவாகும் ஆடைகள்!