பிரதமர் மோடியின் ஜாக்கெட் பின்னுள்ள கரூர் நிறுவனம் - பிளாஸ்டிக் பாட்டில்களில் உருவாகும் ஆடைகள்!
பிரதமர் மோடி அணிந்திருந்த நீல நிற ஜாக்கெட் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிரெண்டிங் ஆனது. மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அந்த ஜாக்கெட்டை உருவாக்கியது கரூரைச் சேர்ந்த Ecoline நிறுவனம் ஆகும்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு நீல நிறத்திலான ஜாக்கெட் ஒன்றை அணிந்து வந்திருந்திருந்தார். விதவிதமான ஆடைகள் அணிவதில் அதிக ஆர்வம் கொண்டவரான நமது பிரதமரின் இந்த ஜாக்கெட்டும், வழக்கம் போலவே தேசிய அளவில் அதிக கவனம் பெற்றது.
இந்த ஜாக்கெட் சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்பட மற்றொரு காரணம் இது வழக்கமான பருத்தித் துணியினால் தயாரிக்கப்பட்டது அல்ல. மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட துணியால் தயாரிக்கப்பட்டது.
அதோடு, இந்த உடை தமிழகத்தில் அதிகம் பேசப்பட மற்றொருக் காரணம், அது கரூர் அருகே உள்ள காக்காவடி பகுதியில் உள்ள ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ் (Shree Renga Polymers) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதுதான்.
பிரதமருக்கு அன்புப் பரிசு
நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சமீபத்தில் பெங்களூருவில் நடந்த இந்திய எரிசக்தி வார விழாவில், இந்த உடைக்கான துணியை பிரதமரிடம் அளித்தது.
மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட 9 விதமான வண்ண ஆடைகளை, ஸ்ரீரெங்கா பாலிமர்ஸ் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு அனுப்பி இருந்தது. அதில் இருந்து நீல வண்ணத்தைத் தேர்வு செய்து, பிரதமர் அலுவலக ஊழியர்கள் குஜராத்தில் இருக்கும் பிரதமரின் பிரத்யேக தையல்காரருக்கு அனுப்பி வைத்தனர். அவர் தைத்துத் தந்த அந்த ஜாக்கெட்டைத் தான் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்தார்.
அப்போதிருந்தே இந்த ஆடை பற்றிய பேச்சு ஆரம்பித்து விட்டது. பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து உருவாக்கப்பட்ட ஆடையா? அது எப்படி சாத்தியம்? என மக்கள் ஆச்சர்யத்துடன் இந்த உடை பற்றி சமூகவலைதளங்களில் பேசத் தொடங்கிவிட்டனர்.
ஊரெல்லாம் பேச்சாக உள்ள இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து ஆடைகள் தயாரிக்கப்படுவது பற்றி கரூர் ஸ்ரீரெங்கா பாலிமர்ஸ் நிறுவனம் மற்றும் 'ஈகோலைன் க்ளாத்திங்' மேனேஜிங் பார்ட்னரான செந்தில் சங்கருடம் யுவர்ஸ்டோரி தமிழ் சார்பில் பேசினோம்...
“மதுராந்தகம் அருகே குக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் எனது அப்பா சங்கர். அரசுப் பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்து, பிறகு டெல்லி சென்று ஐஐடியில் படித்தவர். எனது அம்மாவும் ஐஐடியில் படித்தவர்தான்,” எனத்தொடங்கினார் செந்தில்.
”இப்படியான நன்கு படித்தவர்கள் நிரம்பிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், பார்முலா ஒன் ரேஸ் கார் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தேன். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை, கை நிறைய சம்பளத்துடன் கிடைத்தது. அப்போது நான் டெக்ஸ்டைல் துறையில் வருவேன் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் குரு படம்தான் என் வாழ்க்கையையே மாற்றியது” என தன் ஆரம்பகால நாட்கள் பற்றிக் கூறுகிறார் செந்தில்.
புதிய தொழில் முயற்சி
சென்னையிலேயே வசிந்து வந்த செந்திலின் குடும்பம் 2008ம் ஆண்டுதான் கரூர் சென்றுள்ளனர். முதலில், நிறுவனமொன்றில் ஒரு ஊழியராகத்தான் செந்திலின் அப்பா கரூர் சென்றிருக்கிறார். ஆனால், சிறிது காலத்திலேயே அந்த வேலையும் இல்லை என்றானது. அப்போதுதான் நாமே ஒரு தொழில் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு சிறிய அளவில் ’ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ்’ நிறுவனத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.
“ஆரம்பத்தில் நிறைய சவால்கள், அப்பா ரொம்பவே கஷ்டப்பட்டார். தொழிலை ஒரு நிலைக்கு கொண்டு வர அவர் மிகவும் சிரமப்பட்டார். ஆனாலும் அவரது விடாமுயற்சி, நம்பிக்கை, கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக எங்களது தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைத்தது. இரண்டு ஆண்டுகளில் ஓரளவுக்கு கடனை எல்லாம் அடைத்து, ஓரளவுக்கு சொந்த வாழ்க்கையில் செட்டில் ஆனதும் தொழிலை விட்டு விட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் திட்டமாக இருந்தது. ஆனால் என் திட்டம் அப்போது வேறாக இருந்தது.”
இந்தியாவில் படித்து விட்டு அதிகமானோர் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கிறார்களே என்ற ஆதங்கம் எனக்குள் படிக்கும் காலத்தில் இருந்தே நிறைய இருந்தது. எனவே, சமூக மாற்றம் ஏற்படுமாறு, பெரிய அளவில் எங்களது தொழிலை விரிவு படுத்த வேண்டும் என நினைத்தேன்.
குரு படத்தின் தாக்கம்
அப்போதுதான் ’குரு’ படத்தைப் பார்த்தேன். ஒரு தொழிலின் மூலம் எப்படியொரு சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற தாக்கத்தை அப்படம் எனக்கு ஏற்படுத்தியது. குரு திரைப்படத்தை இப்போது பார்த்தாலும் எனக்கு புல்லரிக்கும். இதுவரை சுமார் 5 ஆயிரம் முறைக்கும் மேல் அப்படத்தை நான் பார்த்துள்ளேன்.
எனவே, என் வேலையை ராஜினாமா செய்து விட்டு கரூர் சென்றேன். பையன் நல்லதொரு வேலையில் இருக்கிறான் என்ற நிம்மதியில் இருந்த என் அப்பா, என் முடிவால் முதலில் பயந்தார். ஆனால், நான் வைராக்கியமாக இந்தத் தொழிலுக்குள் வந்தேன், என்கிறார் செந்தில்.
2010ல் கை நிறைய சம்பளத்துடன் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, அப்பாவின் நிறுவனத்திலேயே செந்தில் வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார். தன்னுடன் வேலை பார்த்தவர்கள் வெளிநாட்டுக்கு செல்வது என அடுத்த கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்க, அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தனது புதிய தொழிலில் ‘அ’வில் இருந்து கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார் செந்தில்.
“ஏறக்குறைய ஆரம்பத்தில் இருந்து என் கேரியரை மீண்டும் ஆரம்பிப்பதுபோல்தான் இருந்தது எனது முடிவு. கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் தொழிலைக் கற்றுக் கொண்டேன். 2015ல் பாட்டிலை பேப்ரிக்காக மாற்றும் தொழிலை ஆரம்பித்தோம். என் படிப்பையும், அறிவையும் நம்பித்தான் இந்த தொழிலில் இறங்கினேன்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களை ஃபைபராக மாற்றி, பின்னர் அதனை நூலாக்கி, கடைசியில் அதனை பேப்ரிக்காக மாற்ற ஆரம்பித்தோம். பணரீதியாகவும், தொழில்ரீதியாகவும் சரியான பின்புலம் இல்லாததால், ரொம்பவே சிரமப்பட்டோம். என் பெற்றோர் கல்லூரிகளில் பகுதி நேரமாக வகுப்பெடுத்து, அதில் வந்த வருமானத்தில்தான் எங்களது குடும்பமே ஓடியது.
ஊழியர்களே பலம்
வங்கியில் வாங்கிய கடன் தொழிலுக்கு பத்தவில்லை. பொருளாதார ரீதியாக ரொம்பவே கஷ்டப்பட்டோம். கடன் வாங்கித்தான் தொழிலாளர்களுக்கு சம்பளமே கொடுத்தோம். இருந்தபோதும் தொழிலாளர்கள் எங்களுக்கு ஆதரவாகவே இருந்தார்கள். அவர்களது பெயரில் கடன் வாங்கிக் கொடுத்து, எங்கள் தொழிலை வளர்க்கும் அளவிற்கு எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. என் சிரமமான காலகட்டத்தில் அவர்கள் தான் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள், என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் செந்தில்.
மனம் தளராமல் உழைத்ததன் விளைவாக, 2016ம் ஆண்டில் வெற்றிகரமாக பெட் பாட்டிலை மறுசுழற்சி செய்து பிளாக்ஸ் செய்து, பின்னர், பாலியெஸ்டர் பைபர் உருவாக்கத் தொடங்கியது ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ். கூடவே, கார்மெண்ட்ஸ் பற்றிய அறிவும் இருந்ததால், 2018ல் கார்மெண்ட்ஸும் ஆரம்பித்துள்ளனர்.
யான் பேப்ரிக், யான் கார்மெண்ட்ஸ் என இரண்டையுமே இந்தியா முழுவதும் ரீடெயில் செய்ய ஆரம்பித்ததனால், 'Ecoline Clothing' என்ற பிராண்ட் பெயரை 2020ம் ஆண்டு உருவாக்கியுள்ளனர்.
தினமும் சுமார் 15 லட்சம் பாட்டில்களை ரீசைக்கிளிங் செய்கிறோம். அதிலிருந்து சராசரி 25 டன் பாலியெஸ்டர் நார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பெட் பாட்டில்களைச் சேகரித்து தரும் டீலர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள்.
“நமது பிரதமர் அணிந்து வந்தது மாதிரியான ஜாக்கெட் ஒன்றைத் தயாரிக்க சுமார் 15 பெட் பாட்டில்கள் தேவைப்படுகிறது. அதேசமயம், முழு ஆடையைத் தயாரிக்க சுமார் 28 பெட் பாட்டில்கள் வரைப் பயன்படுத்துகிறோம். வரும் காலங்களில் பெட் பாட்டில்கள் மூலம் ஆடைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருக்கிறோம்,” என எதிர்காலத் திட்டம் குறித்துக் கூறுகிறார் செந்தில்.
கேஷுவல், ஸ்போர்ட்ஸ், குளிர்கால மற்றும் இரவு நேர ஆடைகள் என ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியே பல ரகங்களில் ஆடைகளைத் தயாரித்து வருகிறது ஈகோலைன் குளோதிங். கூடவே பிரதமர் மோடி அணிந்தது மாதிரியான ஜாக்கெட்டுகளையும் தயாரிக்கின்றனர்.
பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் இந்த ஜாக்கெட்டின் சந்தை விலை வெறும் 2,000 ரூபாய் மட்டுமே. ecolineclothing.com என்ற இணையதள முகவரியில் ஆன்லைனிலும் இவர்களது ஆடைகளை வாங்கும் வசதியும் உள்ளது. இவர்களது நிறுவனத்தில் மொத்தமாக 400 ஊழியர்கள் உள்ளனர்.
புதிய ஸ்டார்ட் அப்களுக்கு உதவி
“ஓரளவுக்கு பணம் சம்பாதித்த பிறகு அதை நிலத்தில் அல்லது மற்ற தொழில்களில் முதலீடு செய்யத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். ஆனால், நாங்கள் சற்று வித்தியாசமாக சிந்தித்தோம். நாங்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு வளரத் துடிக்கும் மற்ற தொழில்முனைவோருக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தோம். நாங்கள் ஆரம்பத்தில் எதிர்கொண்ட சிரமங்களை மனதில் வைத்து, கஷ்டப்படும் ஸ்டார்ட் அப்களுக்கு முடிந்தளவு நிதி உதவி செய்து வருகிறோம்,” என்கிறார் செந்தில்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் msme விருதுகளைப் பெற்றுள்ளது ஸ்ரீரெங்கா பாலிமர்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையைக் காக்க வேண்டும்.. பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சமீபகாலமாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் ஈகோலைன் குளோதிங் போன்ற நிறுவனங்களின் பிளாஸ்டிக்கிற்கு எதிரான இந்த முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே.