பைஜூஸ் சந்தை மதிப்பு 22 பில்லியன் டாலராக உயர்வு – $400 மில்லியன் முதலீடு செய்துள்ள பைஜு ரவீந்திரன்!
சுமேரு வென்ச்சர்ஸ், விட்ருவியன் பாட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்ற 800 மில்லியன் டாலர் அளவிலான புதிய நிதிச்சுற்று மூலம் கல்வி நுட்ப நிறுவனமான பைஜுஸ் 22 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை பெற்றுள்ளது.
கல்வி நுட்ப டெகாகார்ன் நிறுவனமான 'பைஜுஸ்', நிறுவனர் பைஜு ரவீந்திரனின் தனிப்பட்ட 400 மில்லியன் டாலர் முதலீட்டை உள்ளடக்கிய 800 மில்லியன் டாலர் புதிய சுற்று நிதியை திரட்டியதாக அறிவித்துள்ளது.
இந்த நிதிச்சுற்றில் சுமேரு வென்ச்சர்ஸ், விட்ருவியன் பார்ட்னர்ஸ், பிளாக்ராக் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் நிறுவன சந்தை மதிப்பு 22 பில்லியன் டாலராக கருதப்படுகிறது.
பைஜு ரவீந்திரன் முதல் முறையாக தனது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். 2021 நவம்பர் மாதம் பைஜூஸ் நிறுவனம் வெளிநாட்டு நிதி கழகங்களிடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் கடன் நிதி திரட்டியது.
“இயல்பான மற்றும் திட்டமிட்ட வழிகளில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் வேகமான வளர்ச்சியை காண்கிறோம். நீண்ட கால இலக்குகளை அடைந்து, வாழ்நாள் அடிப்படையில் கற்றுக்கொள்பவர்களுக்கு மதிப்பை உண்டாக்குவது எங்கள் நோக்கமாகும். இதற்காக எதிர்காலத்தில் மாணவர்கள் கற்றுக்கொள்வதை, மறு கற்றலை மாற்றியமைக்கும் வகையில் சிந்தித்து வருகிறோம்,” என பைஜு ரவீந்திரன் கூறியுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொறுக்கு மத்தியில் பைஜூஸ் ஆன்லைன் கல்வி பிரிவில் வேகமான வளர்ச்சி கண்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பைஜுஸ் நிறுவனம் முதலீட்டாளர்களை அதிகம் ஈர்த்ததோடு, கல்வி நுட்பப் பிரிவில் கையகப்படுத்தலையும் மேற்கொண்டது. நிறுவனம் தற்போது தனது மேடையில் 150 மில்லியன் பயனாளிகளைக் கொண்டுள்ளது. இதன் புதுப்பித்தல் விகிதம் 86 சதவீதமாக இருக்கிறது.
12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பயிற்சி, நிறுவனத்தின் மைய பலமாக அமைகிறது. மேலும், ஜே.இ.இ, நீட், கேட், ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பிரிவுகளையும் கொண்டுள்ளது.
“கல்வி நுட்ப பிரிவில் முன்னணி நிறுவனம் என்ற முறையில் சர்வதேச மற்றும் இந்திய சந்தையில் பைஜுஸ் நிறுவனத்தின் வலுவான வளர்ச்சி பிரகாசமாக உள்ளது. இந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தும் நிலையில், பைஜுஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறோம்,” என Vitruvian பார்ட்னர்ஸ் நிர்வாகப் பங்குதாரர் மைக் ரிஸ்மன் கூறியுள்ளார்.
நிறுவனத்தின் பிரதான சந்தை இந்தியாவாக விளங்கினாலும், அமெரிக்கா, யூ,கே, ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
“செலவு, தரம், வளர்ச்சி வாய்ப்பு ஆகிய மூன்று விஷயங்களுக்குத் தீர்வாக அமையும் சர்வதேச அளவிலான முன்னணி நிறுவனங்களை கல்வி நுட்பப் பிரிவில் இந்தியாவால் உருவாக்க முடியும் என எப்போதும் நம்பி வருகிறேன். உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க பல வகை மாதிரிகளில் தொடர்ந்து முதலீடு செய்வோம்,” என பைஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில்: திம்மையா புஜாரி | தமிழில்: சைபர் சிம்மன்