தெரிந்த நகரம் தெரியாத பல கதைகள்: 'ஸ்டோரி ட்ரெயில்ஸ்' கதை!
தொழில்முனையும் ஒருவர் வண்ணம் தீட்டும் ஓவியர் போன்றவர். மனதில் ஒரு விஷயத்தை நினைத்து, நினைத்ததை, எவ்வாறு நடத்தி முடிப்பது என்பதையும் மனதிலேயே உருவகப்படுத்தி அதை நடைமுறை படுத்துபவர்.
அதற்கு சிறந்த எடுத்துகாட்டு விஜய் பிரபாத் கமலாகரா. ஐஐஎம் இந்தூரில் எம்பிஏ பட்டம் பெற்று, எச்எஸ்பிசி வங்கியில் சில காலம், டிசிஎஸ் நிறுவனத்தில் சில காலம் என 8 வருட அனுபவத்திற்கு பிறகு 2006 டிசம்பர் மாதம் தொழில்முனையும் எண்ணம், அவரது மனதில் தோன்றியது.
'ஸ்டோரி ட்ரெயில்ஸ்' (Storytrails), என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, சிங்காரச் சென்னையின் அழகையும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தூங்கா நகரமான மதுரையின் அழகையும், தனது நிறுவனம் மூலம், சுற்றுலா வருவோருக்கு கதைகளாக கூறுகிறார். ஆம். கதைகளாக ..!! ஸ்டோரி ட்ரெயிலிஸின் நிறுவனர் விஜய் பிரபாத்துடன் தமிழ் யுவர்ஸ்டோரி நிகழ்த்திய நேர்காணல் இதோ...
எப்படி உருவானது 'ஸ்டோரி ட்ரெயில்ஸ்'?
நான் எப்போதும் பயணிப்பதை விரும்புபவன். நான் கடைசியாக வேலை செய்த நிறுவனத்தில், வெளிநாடுகளில் இருந்து எங்கள் வாடிக்கையாளர்கள் சென்னைக்கு வருகை புரிவார்கள். ஒவ்வொரு முறை அப்படி வெளிநாட்டவர் வருகையின் போதும் எங்கள் நிறுவனமும், எங்களை போன்ற மற்ற நிறுவனங்களும் ஒரே முறையை கையாள்வதை கண்டேன்.
வழிகாட்டி ஒருவரை நியமித்து, மதியம் ஆடம்பரமான ஒரு விடுதியில் உணவு ஏற்பாடு செய்து, ஒரு வாகனத்தை அமர்த்தி, அவர்களை மகாபலிபுரம் அனுப்பி வைப்பர். அந்நேரத்தில், நான் அந்த விருந்தினராக இருந்திருந்தால், இந்த நகரத்தை பற்றியும், இங்கே உள்ள வாழ்வியல் முறை பற்றியும் அறிந்து கொள்ள அதிகப்படியான விஷயங்கள் இருப்பதாய் உணர்ந்தேன்.
அப்படித்தான் ஸ்டோரி ட்ரெயில்ஸ் யோசனை என்னுள் உதித்தது.
"நகரை சுற்றி காண்பிக்கும் ஒரு நிறுவனமாக அல்லாது, இந்நகர மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பளிக்கும் ஒரு நிறுவனமாக இருக்கவேண்டும். அதே நேரம் அதிக தகவல்களை உங்கள் மீது திணிக்காது, தெருக்களில் நீங்கள் பார்ப்பவற்றை பற்றியும், அவற்றின் பின் உள்ள கதைகளை பற்றியும் நீங்கள் அறியவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்கிறார் விஜய்.
ட்ரெயில்ஸ் பற்றி?
சென்னையில் 10 விதமான ட்ரெயில்ஸ் உள்ளன. ஒவ்வொரு ட்ரெயிலிலும், ஏதோ ஒரு இடத்தை பற்றியது அல்ல. ஒவ்வொன்றும், ஒரு கருவை உள்ளடக்கியது. அந்த கருக்கள், இங்குள்ள வாழ்வியலை சார்ந்திருக்கும்.
அப்படி ஒரு கரு, உள்ளூர் மக்களின் பழக்க வழக்கங்களை பற்றியும் அவர்களின் பாரம்பரியத்தை பற்றியதும் ஆகும். சாதரணமாக தெருக்களில் நாம் காண்பவற்றின் பின்னால் உள்ள கதைகளை தேடிப்பிடித்துள்ளோம். அந்த ட்ரெயில் (நடை) நிகழ்வது மைலாப்பூரில். எனவே அதற்க்கு 'பீக்காக் ட்ரெயில்' என பெயர் வைத்துள்ளோம். இரண்டரை மணி நேர நடையின் முடிவில் மைலாப்பூரில் சில இடங்களை பார்ப்பது மட்டுமின்றி அவற்றை பற்றிய கதைகளும் நீங்கள் அறிந்திருப்பிர்கள். மேலும், சில ட்ரெயில்களை பற்றி வினவியபோது, அவர் பிரிட்டிஷ் ப்ளூ ப்ரிண்ட்ஸ் பற்றி கூறினார்.
பிரிட்டிஷ் ப்ளூ ப்ரிண்ட்ஸ் (British Blueprints)
காலனித்துவ ஆதிக்கத்தின் போது கட்டப்பட்ட கட்டிடங்கள் சொல்லும் கதைக்கான ஒரு ட்ரெயில் உள்ளது. அதன் பெயர் "பிரிட்டிஷ் ப்ளூ ப்ரிண்ட்ஸ்". இது மற்ற ட்ரெயில்களை போன்று நடந்து சென்று இடங்களை பார்ப்பது அல்ல. குளிர்சாதனம் பொறுத்தப்பட்ட கோச்சில், நீங்கள் நகரின் சில இடங்களை சென்று பார்ப்பீர்கள்.
ஸ்டீபில் சேஸ் (Steeple Chase)
கிறித்துவ மதம் எவ்வாறு இந்த பகுதிகளில் பரவியது என்பதை பற்றியும், இங்குள்ள நினைவுச் சின்னங்கள், சர்ச்சுகள் பற்றிய வரலாற்றுடன் கூடிய கதைகளை, இந்த ட்ரெயிலில் அறிந்துகொள்வீர்கள்.
கண்ட்ரி ரோட்ஸ் (Country Roads)
இது கிராமப்புற வாழ்க்கையை பற்றியது. இது உங்களை நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். அது எங்களிடம் உள்ள நீண்ட ட்ரெயில்களில் ஒன்றாகும். ஒரு முழு நாள் அதற்கு செலவாகும். அங்கு உள்ள விவசாயியின் இடத்திற்கு சென்று, அவர் செய்வது போன்றே நீங்களும் ஏர் பிடித்து நிலத்தை உழுது, விதை விதைத்து, பயிர்களை அறுவடை செய்து, பார்க்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். முக்கியமாக விவசாயம் என்பது அவ்விடங்களில் ஒரு வாழ்க்கை முறையாக எப்படி பின்பற்ற படுகின்றது என்பதை நீங்கள் அறிய இயலும். மேலும் கிராமப்புற பொருளாதாரம், பற்றியும் அறிவீர்கள், அங்குள்ள கதைகளை கேட்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
ஸ்பைஸ் ட்ரெயில் (Spice Trail)
முன்னர் கூறியதில் விவாசாயம் செய்வது போன்று இதில் நீங்கள் சமைக்க வேண்டும். காலையில் கடைத்தெரு சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, நீங்கள் ஒரு சமையல் அறைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு எங்கள் நிறுவனத்தின் கதை' சொல்லி' மற்றும் ஒரு சமையல் கலைஞர் உங்களை சந்திப்பர். அவர்கள் இருவரும் இணைந்து, இந்திய சமையல் பற்றியும் இங்குள்ள உணவு பழக்கங்கள் பின்னணியில் உள்ள கதைகளை சுற்றியும் உங்களை அழைத்துச்செல்வார்கள்.
மதுரையில் என்ன என்ன ட்ரெயில்கள் உள்ளன?
அந்த நகரத்தின் தனித்தன்மையை உணர்த்துவது போன்று ட்ரெயில்கள் உள்ளன. அதில் முக்கியம் "பாட்டர்ஸ் ட்ரெயில்" (Potters Trail). அதில் நீங்கள் மதுரைக்கு வெளியே அழைத்து செல்லப்படுவீர்கள். அவ்விடத்தில் கிராமத்தில் உள்ள அனைவரும் பானை தயாரிப்பில் ஈடுபட்டிருப்பர். மேலும் அங்கு பானை செய்முறை பற்றியும், அங்குள்ள ஐயனார் கடவுள் பற்றியும், பானைக்கும் அக்கடவுளுக்கும் உள்ள இணைப்பு பற்றியும், மேலும் மதுரைக்கு மட்டும் தனித்துவமான பல விஷயங்களை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
ஒரு நிறுவனத்தின் வெற்றி அதில் பணிபுரியும் ஆட்களை வைத்துள்ளது. உங்களது அணியை பற்றி கூறுங்கள்?
எங்களுக்கு அமைந்த அணியை பொறுத்தவரையில் அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்துள்ளது என்றே கூறவேண்டும். ஆரம்பம் முதல், மிக நல்லவர்களை நாங்கள் ஈர்க்க முடிந்தது. ஏழு எட்டு வருடங்களுக்கு மேலாக அவர்கள் எங்களோடு இணைந்து பயணித்துள்ளனர்.
"முதலில் நாங்கள் துவங்கும் பொழுது, எங்களுக்கு கதை கூறுபவர்கள் வேண்டும் என நினைத்தோம். ஆனால் கதை கூறுபவர்கள் யார்? அவர்களை எங்கு தேடுவது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஏன்னென்றால், கதை கூறுவதற்கு என்று தனியாக தகுதிகள் இல்லை. பின்னர் நாங்கள் அடிப்படை விஷயங்களுக்கு வந்தோம். எங்கள் தேவை மக்களிடம் இயல்பாக பேசமுடிகின்ற, ஆய்வுசெய்து தகவல்களை அறிந்து கொள்கின்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம்".
ஏன்னென்றால் எங்கள் ட்ரெயில்கள் பலவிதமானவை. உங்களுக்கு தெரியாவிட்டாலும் அதை பற்றி கற்றுக்கொண்டு, செயல் பட வேண்டும். எனவே அவ்வகையில் எங்களோடு ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், பொறியாளர்கள், மாணவர்கள், வானொலி வர்ணனையாளர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் என பல தரப்பட்ட மக்கள் பணிபுரிந்துள்ளனர்.
நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை பற்றி?
கடந்த 8 வருடங்களில் நாங்கள் எங்களை பயணம் சம்மந்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஈடுபடுத்திக்கொள்ளாமல், பள்ளிகளுக்கும், கதைகளை மையமாக வைத்து கற்பிக்கும் முறை மீது கவனம் செலுத்துகிறோம். தற்போது சென்னை மட்டும் அல்லாது, நாட்டின் பல முன்னோடி பள்ளிகளில் எங்கள் கல்விமுறை அமலில் உள்ளது. மேலும் வயதிற்கு ஏற்ற பாடத்திட்டங்களையும் நாங்கள் வடிவமைகின்றோம். அதன் பெயர் "ஸ்டோரி ட்ரெயில்ஸ் இன் ஸ்கூல்ஸ்"(Story Trails in Schools) .மேலும் கார்பரேட் நிறுவனங்களுக்கும், எங்கள் கதை சார்ந்த கல்வி திட்டம் மற்றும் கதைகள் சார்ந்த பயிற்சித் திட்டம் உள்ளது. அதன் மூலமாகவும் நாங்கள் நாட்டின் பல இடங்களுக்கு பயணித்துள்ளோம்.
ஆனால் முதலில் எங்களை ஒரு பயணம் சார்ந்த நிறுவனமாகவே நாங்கள் நிலைநிறுத்துகின்றோம். தற்போது சென்னை மதுரை திட்டங்கள் வெற்றியை தொடர்ந்து அடுத்து பெங்களுரு மீது கவனம் உள்ளது அதற்கு பின்பு மும்பை மற்றும் டெல்லி எங்கள் திட்டத்தில் உள்ளது.
8 வருடத்தில் நீங்கள் கடந்து வந்த பாதையை பற்றி?
முதலில் இந்த யோசனையை விடுதிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், பயண நிறுவனங்கள், ஏற்றுக்கொள்ள தயங்கினர். ஏன்னென்றால், முதலில் நாம் சுற்றுலா என்று நினைக்கையில், அல்லது அதற்காக பதிவு செய்கையில் நம் மனதில் தோன்றுவது, எவ்வளவு இடங்கள் பார்ப்போம் என்பதே. அக்கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை, ஏனெனில் எப்போதும் நாங்கள் எந்த நினைவுச் சின்னங்களுக்கும் செல்வதில்லை, உங்களுக்கு நகரை சுற்றிக் காண்பிக்க போவதும் இல்லை என்பதாகவே இருந்தது.
ஆனால் தற்போது, மக்கள் மனநிலையில், அவர்கள் சுற்றுலாவை பார்க்கும் கண்ணோட்டத்தில் ஒரு மாற்றம் இருப்பதை உணர முடிகின்றது. இங்கு வரும் அனைவரும், கையில் பார்க்கும் இடங்களுக்கான பட்டியலோடு வருவதில்லை. மேலும் எங்கள் திட்டத்திற்கு பல இடங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பாரட்டுக்களை பற்றியும் உங்களுடன் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களை பற்றி?
எங்கள் ட்ரெயில்களின் உள்ளடக்கம் மிகவும் நன்றாக இருப்பதால், முன்னணி கார்பரேட் நிறுவனங்கள் பயணப்பதிவு நிறுவனங்கள், மற்ற நாடுகளின் தூதரகங்கள், எங்களோடு இணைந்து பணி புரிந்துள்ளனர். மேலும் எங்களுக்கு வரும் விமர்சனங்களும் எங்களை பாராட்டியே உள்ளன. அவை "லோன்லி ப்லானட்", மற்றும் டிரிப் அட்வைசரில், நாங்கள் சென்னையின் "நம்பர் ஒன் அட்ராக்ஷனாக" கடந்த 3 வருடங்களாக தேர்ந்தேடுக்கபட்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் எங்களோடு பயணிப்பவர்களே அவர்களுக்கு எனது நன்றிகள்.
ட்ரெயில்களில் இருந்து நீங்கள் பெற்றவை?
நாங்கள் ஒரே ட்ரெயிலை 100 முறைக்கும் மேல் செய்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் எங்களுக்கு புதிய அனுபவமே கிடைகின்றது. காரணம் நாங்கள் ஒவ்வொரு முறையும் புதியவர்களை சந்திக்கின்றோம். அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். 18 வயது நிரம்பி, பணத்தினை பார்த்து பார்த்து செலவு செய்யும் இளைஞர் முதல், பணம் பற்றிய கவலையே இல்லாமல் சுற்றும் 81 வயது முதியவர் வரை பலரும் எங்களுடன் பயணித்துள்ளனர். இன்றும் அவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். நாங்கள் கூறும் கதையோடு சேர்த்து அவர்களின் கதைகளையும் கேட்பது, மிகவும் புதிய உணர்வாக இருக்கும்.
பயணம் செல்ல விரும்புவோருக்கு கூறுவது என்ன?
முதலில் உங்களை நீங்கள் கேள்வி கேளுங்கள். ஏன் நான் பயணிக்கின்றேன் என? எனது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட வேண்டும் என்றால் ஒரு ஊருக்கு சென்று அங்கு நினைவுச்சின்னங்களை பார்ப்பது சரி. ஆனால் என்னை பொறுத்த வரை அது பயணமல்ல. நீங்கள் அந்த பகுதிகளை உங்கள் தொலைக்காட்சி பேட்டியிலேயே பார்க்க இயலும்.
ஆனால் உண்மையிலேயே நீங்கள் பயணிக்க விரும்பினால், ஒரு நகரத்தில் தங்கி, அந்நகரத்தின் வாழ்க்கை, அங்கு கிடைக்கும் உணவு, அங்கு நிகழும் நிகழ்வுகள், அம்மக்கள் கலாச்சாரம் என அனைத்தையும் அனுபவியுங்கள். அப்போது தான் ஒரு நகரத்திற்கும், மற்றொரு நகரத்திற்கு இடையிலுள்ள வேறுபாடு உங்களுக்கு புரியும்.
இணையதள முகவரி: Storytrails