எலிசா முதல் சாட்ஜிபிடி வரை- 11 | ஒரு சாட்பாட்டின் மோசடியும்; சாட்ஜிபிடியின் சாகசமும்!
சாட்பாட்களை உருவாக்கத்துவங்கியதன் நோக்கம் மனிதர்களோடு உரையாடலை மேற்கொள்வது தான் என்றாலும், மனிதர்கள் போலவே உரையாடுவதில் மென்பொருள்களுக்கு உள்ள சவால்களை எளிதாக உணரலாம்.
சாட்பாட்கள் வரலாற்றில் சாட்ஜிபிடியை நெருங்கி வந்துவிட்டோம். சாட்பாட்களில் இதுவரை இல்லாத ஆற்றலோடு உருவாகியிருக்கும் சாட்ஜிபிடி பற்றி விரிவாகவும், அதன் பின்னே இருக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் பார்ப்பதற்கு முன், சாட்பாட்கள் வகைகள் மற்றும் செயல்பாடுகளை பார்ப்பதோடு, இன்னும் சில முக்கிய சாட்பாட்களை திரும்பி பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
சாட்பாட்களை பயணத்தில் சாட்ஜிபிடி எத்தனை பெரிய பாய்ச்சல் என்பதை சரியாக புரிந்து கொள்ள இது உதவும்.
சாட்பாட்களை உருவாக்கத்துவங்கியதன் நோக்கம் மனிதர்களோடு உரையாடலை மேற்கொள்வது தான் என்றாலும், மனிதர்கள் போலவே உரையாடுவதில் மென்பொருள்களுக்கு உள்ள சவால்களை எளிதாக உணரலாம்.
காலப்போக்கில் தொடர் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, இந்த சவால்கள் பலவற்றை வெற்றி கொண்டிருந்தாலும், சாட்பாட்கள் வரம்புகள் கொண்டதாகவே இருக்கின்றன. ஐபிஎம் வாட்சனும், வம்பில் மாட்டிக்கொண்டு விலக்கிக் கொள்ளப்பட்ட மைக்ரோசாப்ட் டே சாட்பாட்டும் இதற்கான உதாரணங்கள்.
சாட்பாட்கள் பலவிதம்
சாட்பாட்களின் வரம்பை உணர்த்தும் இன்னொரு அருமையான உதாரணமாக கூகுளின் ’லாம்டா’ சாட்பாட்டை (LaMDA) குறிப்பிட வேண்டும். சாட்பாட்களின் தொழில்நுட்ப சிக்கலை மட்டும் அல்லாமல், அவை தொடர்பாக தத்துவார்த்த கேள்விகளை எழுப்பக்கூடிய லாம்டா உருவான கதையை தனியே பார்க்கலாம்.
மேலும், கூகுளின் மினா சாட்பாட் (google meena) மற்றும் முன்னோடி மொழி மாதிரியான பெர்ட் (BERT ) பற்றியும் பார்க்கலாம். இப்போது, யூஜின் கூஸ்ட்மன் (Eugene Goostman) சாட்பாட் கதையை தெரிந்து கொள்ளலாம்.
சாட்பாட்களுக்கான டூரிங் சோதனையை வென்ற முதல் சாட்பாட் என்று யூஜின் வர்ணிக்கப்படுகிறது. ஆனால், இதுவே ஒரு மோசடி என்றும் குற்றச்சாட்டு இருக்கிறது.
டூரிங் சோதனை தான் நவீன செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வுக்கான துவக்கப்புள்ளிகளில் ஒன்று என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
கம்ப்யூட்டர் வழியே உரையாடலை மேற்கொள்ளும் போது மறுமுனையில் இருப்பவருக்கு தான் ஒரு இயந்திரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படாத வரை ஒரு சாட்பாட் செயல்பாடு அமையும் என்றால், அந்த மென்பொருள் செயற்கை நுண்ணறிவுத்திறன் பெற்று விட்டதாகக் கருதலாம் என்பதே டூரிங் சோதனையின் சாரம்சம்.
டூரிங் சோதனை
உண்மையான செயற்கை நுண்ணறிவு ஒரு போதும் சாத்தியமாகாது என பலரும் கருதுவது போல, டூரிங் சோதனையை ஒரு போதும் சாட்பாட்களால் வெல்ல முடியாது என்றும் கருதப்பட்டு வந்தது. டூரிங் சோதனை சரியான அளவுகோள் அல்ல என மறுப்பவர்களும் உண்டு என்றாலும், டூரிங் சோதனையை வெல்லக்கூடிய ஒரு சாட்பாட் இன்னமும் உருவாக்கப்படவில்லை, இனியும் உருவாக்கப்பட முடியாது என்று கருதுபவர்களும் இருக்கின்றனர். (இந்த கருத்தாக்கங்களை புரிந்து கொள்ள வேண்டும் எனில், செயற்கை நுண்ணறிவு வகைகளையும், அவற்றில் இதுகாறுமான அனைத்து ஆய்வுகளும், முன்னேற்றங்களும், குறுகிய செயற்கை நுண்ணறிவு எனப்படும் முதல் நிலை செயற்கை அறிவின் கீழே வகைப்படுத்தப்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்).
உதாரணத்திற்கு முதல் சாட்பாட்டான எலிசாவை எடுத்துக்கொள்வோம். உளவியல் சிகிச்சையாளர் போல உருவாக்கப்பட்ட, எலிசா மனித மொழியிலான கேள்விகளை புரிந்து கொண்டு பதில் அளிக்கும் திறன் பெற்றிருந்தது என்றாலும், அதன் பதில்களுக்கான பரப்பு மிகவும் குறுகலானது. எழுதிக்கொடுத்ததை படிப்பது போல, இந்த மென்பொருள் அதன் நிரலுக்கு உள்பட்ட வகையில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்.
எலிசாவின் சூட்சமம் என்னவெனில், கேள்வியில் உள்ள முக்கிய குறிச்சொல்லை அடையாளம் கண்டு, அதற்கேற்ற பொதுவான ஒரு பதிலை அளிக்கும். உரையாடலை தொடர்வதற்கு வசதியாக, மிக பொதுவான பதில்களை அளித்து, அடுத்த கேள்விக்கு காத்திருக்கும். அதற்கு பயிற்சி அளிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகி எந்த கேள்வி கேட்டாலும், திகைத்துவிடும்.
கேள்வி பதில்
ஆக, எத்தனை புத்திசாலித்தனமான உரையாடும் மென்பொருளை உருவாக்கினாலும், மனிதர்களின் சாதாரண கேள்விக்கு முன் அவை செயலற்று திகைக்கும் தருணம் வந்துவிடும். எனவே, தான் உரையாடும் மென்பொருள்களுக்கான டூரிங் சோதனை வெற்றி கொள்ளப்பட முடியாதது எனக் கருதப்படுகிறது. இந்த சோதனையில் ’யூஜின் கூஸ்ட்மன்’ சாட்பாட் வெற்றி பெற்றதாக 2014ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது தான் ஏஐ உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனிதர்களிடம் இருந்து பிரித்தறிய முடியாத வகையில் உரையாடியதற்கான டூரிங் சோதனையில் வெற்றி பெற்ற சாட்பாட் என்று ஒரு சிலரால் கருதப்படும் சாட்பாட் என்றே யூஜின் கூஸ்ட்மன் பற்றிய விக்கிபீடியா அறிமுகம் தெரிவிக்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு புரோகிராமர்களும், உக்ரைன் புரோகிராமர் ஒருவரும் இணைந்து உருவாக்கிய இந்த சாட்பாட் உக்ரைன் நாட்டின் 13 வயது இளைஞரின் குணாதிசயத்தை கொண்டிருந்தது என்பதே விஷயம்.
2001ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சாட்பாட் பல்வேறு டூரிங் சோதனை போட்டிகளில் பங்கேற்ற நிலையில், 2005 மற்றும் 2008 ஆண்டுகளில் சாட்பாட்களுக்கான இன்னொரு போட்டியான லியோப்னர் பரிசை (Loebner Prize) வென்றது. 2012ம் ஆண்டில், ஆலன் டூரிங்கின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மிகப்பெரிய டூரிங் சோதனை போட்டி நிகழ்வில் பங்கேற்று, 29 சதவீத நடுவர்களை மனித உரையாடல் என நம்ப வைத்தது.
இதனைத்தொடர்ந்து 2014ல், டூரிங் மறைவின் 60வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் பங்கேற்று 33 சதவீத நடுவர்களை மனித உரையாடல் என நம்ப வைத்தது. இதுவே கூஸ்ட்மன் ஆற்றலுக்கு சான்று என, போட்டியின் ஏற்பாட்டாளரான கெவின் வார்விக் (Kevin Warwick), டூரிங் சோதனையை இந்த சாட்பாட் வென்றுவிட்டதாக அறிவித்தார்.
ஆலன் டூரிங் தனது மூலக்கட்டுரையில், 2000 மாவது ஆண்டுவாக்கில் கம்ப்யூட்டர்கள் 5 நிமிட உரையாடலில் மறுமுனையில் உள்ள 30 சதவீத நடுவர்களை தாங்கள் சாட்பாட்டுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என மறக்க வைத்துவிடும் எனத் தெரிவித்திருந்த கணிப்பை அடிப்படையாகக் கொண்டு வார்விக் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வெற்றி சாட்பாட்
இந்த அறிவிப்பு ஏஐ உலகில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. தொழில்நுட்பத் தளங்களிலும், முக்கிய ஊடகங்களிலும் இந்த செய்தி பெரிய அளவில் வெளியிடப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் டூரிங் சோதனை, சாட்பாட் போன்ற விஷயங்களை எல்லாம் அறியாதவர்களுக்கு சாட்பாட் கருத்தாக்கத்தை அறிமுகம் செய்ய இந்த பரபரப்பு உதவியது என்றால், இன்னொரு பக்கம் வல்லுனர் உலகம், இந்த வெற்றி அறிவிப்பையே விவாதத்திற்கு உள்ளாக்கி கடுமையாக விமர்சனம் செய்தது.
வார்விக்கின் முடிவும், அறிவிப்பும் மிகையானது என கருதிய வல்லுனர்கள், இந்த சாட்பாட் 13 வயது இளைஞராக உருவாக்கப்பட்டது மற்றும் சிக்கலான கேள்விகளுக்கு எல்லாம் நகைச்சுவை அல்லது குணாதிசய கீற்றுகளை பதிலாக வழங்கி தப்பித்துக்கொண்ட நிலையில், டூரிங் சோதனையை இந்த பாட் முழுமையாக எதிர்கொண்டதாக கருத முடியாது எனத் தெரிவித்தனர்.
இதற்கு உதாரணமாக, கூஸ்ட்மனுடன் நடத்தப்பட்ட உரையாடலில் ஒரு கேள்வி பதிலை பார்க்கலாம்.
கே: ஷூபெட்டிய், எவரெஸ்ட் சிகரம், இரண்டில் எது பெரியது?
ப: என்னால் இப்போது தீர்மானிக்க முடியவில்லை, பின்னர் பதில் சொல்கிறேன். சரி நீங்கள் யார்?
இந்த உரையாடல் புத்திசாலித்தனமாகவும் தோன்றும், அதே நேரத்தில் சாட்பாட்டிற்கு பதில் தெரியவில்லை அல்லது கேள்வியை புரிந்து கொள்ளவில்லை என்பதை மறைப்பதாகவும் புரிந்து கொள்ளலாம். இதற்காகவே, 13 வயது இளைஞரின் குணாதிசயம் கொண்டதாக இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டிருந்தது.
கூஸ்ட்மனுக்கு வீடியோ கேம் பிடிக்கும் போன்ற தகவல்களோடு அவருக்கான (!) தொழில்நுட்ப பித்தர் தோற்றமும் உருவாக்கப்பட்டிருந்தது.
கூஸ்ட்மனை உருவாக்கிய மூவரில் ஒருவரான Vladimir Veselov, இந்த சாட்பாட் நம்பக்கூடிய ஆளுமை கொண்டதாக உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், இலக்கண பிழை, தவறான பதில்கள் போன்றவற்றை மறைக்கும் உத்தி இது என விமர்சிக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்த சாட்பாட் போலியானது என்றும் சில செய்திதளங்கள் எழுதின. இது ஒரு மோசடி என்பது போல கூட சிலரது கருத்துகள் அமைந்திருந்தன.
வெற்றி சர்ச்சை
எனவே, கூஸ்ட்மன், டூரிங் சோதனையை வெற்றி பெற்றதாக சொல்லப்படுவது சர்ச்சைக்குறிய கருத்தாகவே அமைகிறது. இதனிடையே, டைம் பத்திரிகை, கூஸ்ட்மனை பேட்டி கண்டும் வெளியிட்டது.
இந்த பரபரப்பும், விவாதமும் அடங்கிய நிலையில், கூஸ்ட்மனும் கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டது. கூஸ்ட்மனுக்கு அடுத்த கட்டமாக பெரிய அளவில் எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில், இப்போது சாட்ஜிபிடி சாட்பாட்டின் வெற்றியே கூஸ்ட்மனை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
கூஸ்ட்மன் கதை சாட்பாட்களின் திறன்களை விட அவற்றின் வரம்புகளையே உணர்த்துவதாக நினைக்கலாம். இதனுடன், மைக்ரோசாப்டின் ’டே’ சாட்பாட் பாடம் கற்றுக்கொண்டதையும் நினைத்தால், சாட்பாட்கள் நுட்பம் இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது என நினைக்கத்தோன்றும்.
இந்த பின்னணியில் 2022 இறுதியில் அறிமுகமான சாட்ஜிபிடி, சாட்பாட்களின் கதையை மாற்றி எழுதி வருகிறது. கூஸ்ட்மன் போலவே, இன்னும் பிற சாட்பாட்கள் போல எல்லாம் மனிதர்களின் சிக்கலான கேள்விகளுக்கு நழுவாமல், எந்த கேள்வி கேட்டாலும் என்னிடம் பதில் உண்டு என்பது போல அசத்திக்கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடியை சோதிக்க நினைப்பவர்களே கூட அந்த பதில்களில் வெளிப்படும் புத்திசாலித்தனத்தை பார்த்து வியந்து போய் கொண்டிருக்கின்றனர்.
சாட்ஜிபிடிக்கு எப்படி இந்த அதி திறன் சாத்தியமாயிற்று? என தொடர்ந்து பார்க்கலாம்.
சாட்பாட்களின் பயணம் தொடரும்...
எலிசா முதல் சாட்ஜிபிடி வரை- 10 | ஒரே நாளில் திரும்பப் பெறப்பட்ட மைக்ரோசாப்டின் Tay சாட்பாட்!
Edited by Induja Raghunathan