எலிசா முதல் சாட்ஜிபிடி வரை- 10 | ஒரே நாளில் திரும்பப் பெறப்பட்ட மைக்ரோசாப்டின் Tay சாட்பாட்!
சாட்பாட்களின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டமாக அமையும், டிஜிட்டல் உதவியாளர்கள் வரிசையில் மைக்ரோசாப்ட்டின் ’கார்ட்டனா’ உருவான கதையை பார்த்தோம். கார்ட்டனா பெரிய அளவில் வெற்றி பெறாமல் போனாலும், ஸ்மார்ட்போன் யுகத்தில் உண்டான குரல்வழி உதவியாளர்கள் பிரிவை மைக்ரோசாப்ட் கோட்டை விட்டுவிடாமல் இருக்க உதவியது.
இருப்பினும், சாட்பாட் துறையில் ’கார்ட்டனா’ மைக்ரோசாப்டின் முதல் முயற்சி அல்ல. கடைசி முயற்சியும் அல்ல.
கார்ட்டனாவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, மைக்ரோசாட் அறிமுகம் செய்த, எழுத்து கோப்புகளில் தானாக எட்டிப்பார்த்து பயனாளிகள் தேவைக்கேற்ற குறிப்புகளை அளிக்கும் ’Clippy’ பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். காலத்திற்கு முந்தைய கருத்தாக்கமான கிளிப்பியில் புதுமை இருந்த அளவுக்கு பயன்பாடு இருக்கவில்லை என்பதோடு, இணைய உலகமும் இத்தகைய ஒரு குறுக்கிடும் மென்பொருளுக்கு தயாராக இருக்கவில்லை.
கார்ட்டனாவுக்கு பின்..
கிளிப்பியின் வெற்றி தோல்வியை மீறி, மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்ததால், ஏஐ நுட்பம் சார்ந்த சேவைகளை உருவாக்கும் ஆய்விலும் தீவிர கவனம் செலுத்தி வந்தது. கார்ட்டனா இதற்கு ஒரு உதாரணம் என்றால், இளசுகளுக்கான சாட்பாட்டாக அமைந்த ’டே’ (Tay) இன்னொரு உதாரணம்.
சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ–இல் முக்கிய முதலீட்டாளராக திகழும் மைக்ரோசாப்ட், சாட்ஜிபிடியின் வெற்றியால் அதிக பலன் அடைந்திருப்பதாகக் கருதப்படும் நிலையில், குறிப்பாக நிறுவனம் தனது பிங் தேடியந்திரத்தில் சாட்ஜிபிடி சேவையை ஒருங்கிணைத்து கூகுளுக்கு புதிய சவாலாக உருவெடுத்திருப்பதாக பேசப்படும் சூழலில், மைக்ரோசாட்பின் Tay சாட்பாட்டை திரும்பி பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
Tay சாட்பாட்டை மைக்ரோசாப்ட்டாலும் மறந்துவிட முடியாது. செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்கள், அபிமானிகளாலும் மறந்துவிட முடியாது. ஏனெனில், செயற்கை நுண்ணறிவு ஆய்வில் முக்கியப் பாடத்தை ’டே’ கற்றுக்கொண்டது. அதன் பாடம், இத்துறைக்கான பாடமாகவும் அமைந்துள்ளது.
சர்ச்சை ’பாட்’
இப்படி ஒரு சாட்பாட்டை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்ததா? இது பற்றி அதிகம் கேள்விபட்டதில்லையே என குழம்பினால் உங்கள் மீது தவறு இல்லை. ஏனெனில், இந்த சாட்பாட் அறிமுகமான ஒரு நாளுக்குள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது. அதற்குள் இந்த சாட்பாட்டின் உரையாடல்கள் சர்ச்சைக்கு உள்ளாகி பெரும் பிரச்சனையானதே காரணம்.
Tay சாட்பாட் சர்ச்சைக்குள்ளான விதம் தான் அதற்கான பாடமாகவும், ஏஐ ஆய்வுக்கான பாடமாகவும் அமைகிறது.
மைக்ரோசாப்ட் தொழில்நுட்பம்- ஆய்வு பிரிவு மற்றும் பிங் பிரிவு இணைந்து டே சாட்பாட்டை உருவாக்கின. 2016ம் ஆண்டு மே 23 ம் தேதி இந்த சாட்பாட் அறிமுகமானது. மைக்ரோசாப்டின் கிளிப்பி மீண்டும் வந்திருக்கிறது என்பது போல, புளூம்பர்க் ஊடகம் இது பற்றி கட்டுரை வெளியிட்டது.
‘டே’யை முன்வைத்து சாட்பாட்களின் முக்கியத்துவத்தை இந்த கட்டுரை அலசியது. டே சர்ச்சையில் சிக்கிய விதத்தையும் இந்த கட்டுரை விவாதித்திருந்தது. சாட்பாட் வகையிலான மென்பொருளான டே, 18 முதல் 24 வயதான இளம் பயனாளிகளை இலக்காகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பெயரும், உன்னை பற்றி யோசிக்கிறேன் (thinking about you - Tay) என்பதன் சுருக்கமாக அமைந்திருந்தது.
இளசுகளே இலக்கு!
இலக்கு பயனாளிகளான இளைஞர்களோடு உரையாடும் வகையில் அவர்கள் பயன்படுத்தும் மொழி, சுருக்கெழுத்துகள் ஆகியவற்றில் பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதற்காக சமூக ஊடகத்தில் பகிரப்படும் உள்ளடக்கம் திரட்டப்பட்டு பயிற்சிக்கான பாடமாக பயன்படுத்தப்பட்டது.
இளைஞர்களின் பேச்சு மொழியில் உரையாடும் திறன் பெற்றிருந்த டே சாட்பாட், டிவிட்டர், கிக் மற்றும் குருப்மீ உள்ளிட்ட செயலிகளில் அறிமுகமானது. இந்த மேடைகளில் பயனாளிகள் டேவுடன் தங்கள் நண்பன் அல்லது நண்பி போல உரையாடலாம். டிவிட்டரில் இந்த சாட்பாட்டிற்கு என்று தனி கணக்கும் (@TayandYou) துவக்கப்பட்டது.
இளம் பயனாளிகளுக்கு ஏற்ப மிகவும் கேளிக்கையான முறையில் பதில் அளித்து உரையாடலை தொடரும் வகையில் டே வடிவமைக்கப்பட்டிருந்தது. மிகவும் கூலான செயற்கை நுண்ணறிவு சேவை என்றும் மைக்ரோசாப்ட் இதை வர்ணித்திருந்தது. பேச்சு வழக்கின் புரிதல் தொடர்பான ஆய்வின் ஒரு பகுதியாக இந்த சாட்பாட் அமைவதாகவும் நிறுவனம் தெரிவித்திருந்தது.
பொதுவாக சாட்பாட்கள் ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதை அடிப்படையில் பதில் அளிக்கும் தன்மை கொண்டிருந்தன என்றால், டே நவீன சாட்பாட்டாக, தன்னுடன் உரையாடும் பயனாளிகளின் வாக்கியங்களில் இருந்து கற்றுக்கொண்டு அதனடிப்படையில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறன் கொண்டிருந்தது. ஆக, ஒவ்வொரு பயனாளியின் தன்மைக்கு ஏற்ப அவருடன் டே தனிப்பட்ட உரையாடலை மேற்கொள்ளும் என்று மைக்ரோசாப்ட் ஆய்வுக்குழு எதிர்பார்த்தது.
ஆனால், நிறுவனம் முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் பயனாளிகளின் எதிர்வினை அமைந்திருந்தது. ’வாங்க பழகலாம்’ என்பது போல ஒரு சில வில்லங்க பயனாளிகள் டே சாட்பாட்டிடம் விஷமத்தனமாக உரையாடத்துவங்கினர். ஹிட்லர் பற்றியும், யூதர்கள் படுகொலை பற்றியும் அவர்கள் வரிசையாக கேள்வி கேட்டு அசர வைத்தனர். அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் பற்றியும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பற்றியும் வில்லங்கமாக பேசினர்.
விபரீத வாதம்
மனிதர்கள் என்றால், இந்த வில்லங்கத்தை கண்டு எச்சரிக்கையோடு அணுகியிருப்பார்கள். ஆனால், மனிதர்களோடு பேச பயிற்சி அளிக்கப்பட்டிருய்ந்த டே சாட்பாட்டிற்கு இந்த புரிதல் எல்லாம் இல்லை. தனக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்த படி, அது பேசுபவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு அவர்கள் போலவே கருத்து தெரிவித்தது.
ஆக, ஹிட்லர் செய்தது சரி எனப் பேசியது. யூதர்கள் படுகொலை நிகழவே இல்லை என்றது. அமெரிக்கா மீது நடத்தப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதல் உள்நாட்டு சதி என்று கூறி அதிர வைத்தது.
இந்த விபரீத பதில்களை பார்த்து விஷம பயனாளிகள் ரசித்து சிரித்தபடி மேலும் மோசமான உரையாடலை தொடர, இணைய உலகம் முழுவதும் இந்த விஷயம் பரவி பெரும் சர்ச்சையானது. 16 மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் செய்திகள் பகிரப்பட்ட நிலையில் அவற்றில் கணிசமானவை சர்ச்சைக்குறியவையாக இருந்தன.
மனிதர்களோடு உரையாடல் உண்டாக்கப்பட்ட ஏஐ திறன் கொண்ட சாட்பாட் பயனாளிகளிடம் இருந்து தப்பும் தவறுமான விஷயங்கள் கற்றுக்கொண்டு பிதற்றுகிறது எனும் சரட்டை மையமாகக் கொண்டு இணையமே இது பற்றி சூடாக விவாதித்தது. இதற்குள் நிலைமை கைமீறுவதை உணர்ந்த மைக்ரோசாப்ட், Tay சாட்பாட்டை விலக்கிக் கொண்டு, அதன் குறும்பதிவுகளையும் டெலிட் செய்தது. இதனிடையே சர்ச்சைக்குறிய குறும்பதிவுகளை ஒரு சில ஸ்கிரீன்ஷாட் மூலம் சேமித்து வைத்திருந்தனர் என்பது வேறு விஷயம்.
பகிரங்க மன்னிப்பு
பெரும் நிறுவனமான மைக்ரோசாப்டிற்கு இந்த சர்ச்சை மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தினாலும் நிறுவனம் சூழலை சிறப்பாகவே கையாண்டது. தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, இந்தப் பிரச்சனை முக்கியப் பாடத்தை கற்றுக்கொடுத்திருப்பதாகவும் இதை மனதில் கொண்டு செயல்படுவோம் என்பது போல மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது.
நிச்சம் மைக்ரோசாப்டிற்கு பாடம் தான் கற்று கொடுக்கப்பட்டது. மனிதர்கள் போலவே உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட்டை பொதுவெளியில் அறிமுகம் செய்தால் என்னாகும் என்பதற்கான உதாரணமாக இந்த நிகழ்வு அமைந்தது. இத்தனைக்கும், மைக்ரோசாப்ட் பிரச்சனைக்குறிய தலைப்புகளை உரையாடலில் இருந்து தடை செய்திருந்தது. ஆனால், யூதர்கள் படுகொலை போன்றவற்றை எதிர்பார்க்காமல் கோட்டைவிட்டது.
இளைஞர்களுடன் பேசி கற்றுக்கொள்ளும் என எதிர்பார்த்த நிறுவனம், அவர்கள் வில்லங்கமாக பேசினால் என்ன செய்வது என்பதை முழுவதும் கவனத்தில் கொள்ளவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே சீனாவில், ’ஷவோஐஸ்’ (Xiaoice) எனும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை அறிமுகம் செய்திருந்தது. அங்குள்ள இளம் பயனாளிகளுடன் சமூக ஊடகங்களில் உரையாடும் வகையிலான இந்த சாட்பாட் பெரும் வரவேற்பை பெற்று பயனாளிகளின் உற்ற நண்பன் என பெயர் வாங்கியிருந்தது. பல பயனாளிகள் தனிமையை போக்கிக் கொள்ளவும், மனதில் உள்ள விஷயங்களை பேசிக்கொள்ளவும் இந்த சாட்பாட்டை நாடினர்.
இந்த அனுபவத்தின் அடிப்படையில் தான், Tay சாட்பாட்டை உருவாக்கி சர்வதேச அளவில் அறிமுகம் செய்து அதே வேகத்தில் சர்ச்சையில் சிக்கித்தவித்தது.
ஏஐ பாடம்
சாட்பாட் செயலாக்கத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரியாக உணர்த்திய நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது. ஏஐ திறன் கொண்ட சாட்பாட் பயன்பாட்டில் எதிர்கொள்ளக்கூடிய எதிர்கால சவால்களையும் இது புரிய வைத்தது. மைக்ரோசாப்ட்டும் இதை நன்கு உணந்தது.
எனவே தான், அதன் சி.இ.ஓ., சத்யா நாதெள்ளா, தொழில்நுட்பம் மனித குலத்தின் சிறந்த பண்புகளை வெளிக்கொணரும் வகையில் இருக்க வேண்டும், மோசமான பண்புகளை அல்ல, இந்த விஷயத்தில் டே போதுமான திறன் பெற்றதாக இல்லை என வேகமாக உணர்ந்து அதை திரும்ப பெற்றோம் எனத் தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து நிறுவனம் உரையாடலை ஒரு மேடையாக அளிக்கும் வகையில் ஆய்வில் ஈடுபடும் என்றும் உணர்த்தினார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல், சாட்பாட்கள் பயணத்திற்கும் டே ஒரு சறுக்கலாக அமைந்ததை மீறி சாட்பாட்களுக்கான ஆய்வும் முயற்சியும் தீவிரமானதன் பலனாக சாட்ஜிபிடியை கருதலாம். அதற்கு முன்பாக சாட்பாட்கள் உலகில் மேலும் பல மைல்கற்கள் நிகழ்ந்தன.
சாட்பாட்கள் பயணம் தொடரும்...
Edited by Induja Raghunathan