எலிசா முதல் சாட் ஜிபிடி வரை – 2 | முதல் சாட்பாட் ‘உணர்வுபூர்வ’ எலிசா உருவான கதை!
கம்ப்யூட்டர் உலகின் முதல் பேசும் மென்பொருளாக கருதப்படுவதோடு, சாட் ஜிபிடிக்கு முன்னோடியாகவும் அமைகிறது ‘எலிசா’ மென்பொருள். மேலும், பல பேசும் மென்பொருள்களுக்கான ஊக்கமாகவும் அமைந்தது.
சாட்பாட்களின் கதையை ‘எலிசா’வில் இருந்து துவங்குவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில், ‘எலிசா’ தான் சாட் ஜிபிடிக்கும், சாட்பாட்களுக்கும் முன்னோடி. ஆம், கம்ப்யூட்டர் உலகில் உருவாக்கப்பட்ட முதல் சாட்பாட் ‘எலிசா’ தான்.
சாட் ஜிபிடி அல்லது நவீன சாட்பாட்களுடன் ஒப்பிடும்போது எலிசா மென்பொருளின் திறன் சொற்பமானது என்றாலும், மனிதர்களுடன் உரையாடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட முதல் மென்பொருளாக எலிசா முக்கியத்துவம் பெறுகிறது.
கம்ப்யூட்டருடன் மனிதர்கள் பேசினால், கம்ப்யூட்டரும் தன் பங்கிற்கு பதில் சொல்லி உரையாடலை மேற்கொள்ளும் எனும் சாத்தியத்தை ‘எலிசா’ உணர்த்தியது.
எலிசா அறிமுகமான காலத்தில் இது நம்ப முடியாத புதுமையாக அமைந்தது.
அமெரிக்காவின் எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஜோசப் வெய்சன்பாம் (Joseph Weizenbaum ) தான் எலிசா மென்பொருளை உருவாக்கினார். 1964 முதல் 1966 வரை மூன்று ஆண்டுகள் இந்த மென்பொருளுக்கான புரோகிராமை அவர் எழுதினார்.
கம்ப்யூட்டர் மேதை டூரிங்!
எலிசா பற்றி மேற்கொண்டு பார்ப்பதற்கு முன், ஆலன் டூரிங்கை நினைவில் கொள்வது அவசியம். நவீன கம்ப்யூட்டர்களின் தந்தை என போற்றப்படும் டூரிங் தான், செயற்கை நுண்ணறிவின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார். செயற்கை நுண்ணறிவின் சாத்தியங்களை தொலைநோக்குடன் விவரிக்கும் ஆய்வுக் கட்டுரை ஒன்றில், ‘கம்ப்யூட்டர் மென்பொருள் மனிதர்களுடன் உரையாடும்போது மறுமுனையில் உள்ளவருக்கு, தான் பேசிக்கொண்டிருப்பது ஒரு புரோகிராமுடன் என்ற எண்ணம் ஏற்படாத வகையில் உரையாடல் அமையுமானால், அந்த மென்பொருள் செயற்கை நுண்ணறிவு பெற்றிருப்பதாக கருதலாம்’ எனும் கருத்தை டூரிங் முன் வைத்திருந்தார்.
டூரிங் சோதனை (Turing Test) என பிரபலமாகக் குறிப்பிடப்படும் இந்தக் கருத்தாக்கமே, செயற்கை நுண்ணறிவுக்கான அளவுகோளாக கருதப்படுகிறது. ஒருவிதத்தில் பார்த்தால், மனிதர்களுடன் உரையாடக்கூடிய புரோகிராம்களை உருவாக்குவதற்கான கருத்தாக்க துவக்கப் புள்ளியாகவும் டூரிங்கின் கருத்து அமைந்திருந்தது.
டூரிங்கின் சோதனையை நடைமுறையில் சோதித்துப் பார்க்கும் சாத்தியம் வரும் என்று பல ஆண்டுகளுக்கு பெரும்பாலானோர் நினைத்து பார்க்காத நிலையில், ‘எலிசா’ மென்பொருளை உருவாக்கினார் ஜெய்சன்பாம்.
எலிசா அறிமுகம்
வெய்சன்பாமும் டூரிங் வழியில் மனிதர்களுக்கும் கம்ப்யூட்டர்களுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை ஆய்வு செய்யும் நோக்கத்துடன்தான் எலிசா மென்பொருளை உருவாக்கினார். வெய்சன்பாமே எழுதிய ’ஸ்லிப்’ (SLIP) எனும் புரோகிராமிங் மொழியில், ஐபிஎம் 7094 கம்ப்யூட்டரில் செயல்படும் வகையில் எலிசா மென்பொருள் அமைந்திருந்தது.
பெர்னார்ட் ஷா எழுதிய பிக்மேலியன் நாவலில் வரும் முக்கிய பாத்திரமான எலிசா டூலிட்டிலை ஊக்கமாக கொண்டு, இந்த மென்பொருளுக்கு எலிசா என பெயரிட்டிருந்தார். மனிதர்களுடன் உரையாடலை மேற்கொள்வதற்காக கார்ல் ரோஜர்ஸ் எனும் புகழ்பெற்ற உளவியல் வல்லுனர் முன்வைத்த உரையாடல் முறையை அடிப்படையாக கொண்டிருந்தது.
கேள்விகளை டைப் செய்து சமர்ப்பித்தால் எலிசா மென்பொருள் பதில் அளிக்கும் திறன் கொண்டிருந்தாலும், அதன் பதில்களில் ஒருவித புத்திசாலித்தனமே இருந்தது. கேள்விகளின் அமைப்பைக் கொண்டு அதற்கேற்ற பொருத்தமான பதிலை தனது தரவு பட்டியலில் இருந்து எலிசா அளித்தது. பதில் தெரியாத கேள்வி எனில், அதற்கு நேரடி தொடர்பில்லாத பொதுவான பதிலை அளித்து அடுத்த கேள்விக்கு தயாரானது. உதாரணத்திற்கு...
“எனது அம்மா காலையில் சமையல் செய்வார்” எனக் கூறினால், அதில் உள்ள அம்மா எனும் சொல்லை அடிப்படையாக கொண்டு, “உங்கள் குடும்பத்தில் வேறு யார் இருக்கின்றனர்?” எனும் கேள்வியை எழுப்பும். ஆக, எலிசா மென்பொருள் கேள்விகளை புரிந்துகொண்டு பதில் அளித்ததை என்பதைவிட, அப்படி ஓர் உணர்வை உண்டாக்கியது.
உளவியல் தாக்கம்
இது ஒரு சோதனை முயற்சி என்பதை மீறி, எலிசாவிடம் உரையாடிய மனிதர்கள் பலரும் அதனிடம் தங்கள் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். உளவியல் சார்ந்த இந்த விஷயங்களை எலிசாவிடம் தெரிவித்தபோது, அறையில் வேறு யாரும் இருக்கக் கூடாது என நினைக்கும் அளவுக்கு எலிசாவில் அவர்கள் ஒன்றிப்போயிருந்தனர்.
எலிசாவிடம் பலரும் காட்டிய இந்த ஈடுபாட்டை வெய்சன்பாம் எதிர்பார்க்கவில்லை. சிந்திக்கும் இயந்திரங்களின் துவக்கம் என பேசப்பட்டதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. எலிசா ஓர் செயற்கை நுண்ணறிவுக்கு உதாரணம் காட்டப்படுவதை பின்னாளில் அவரே தீவிரமாக மறுத்தார். செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட மென்பொருள்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான அச்சங்களையும் அவர் விரிவாக பதிவு செய்தார்.
எலிசாவை உருவாக்கியவரே, அது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அல்ல எனும் கருத்தை வலியுறுத்தியதை மீறி, எலிசா முதல் பேசும் மென்பொருள் என அறியப்படுகிறது. அதற்கு காரணம், எலிசாவின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பேசும் மென்பொருள்கள் அறிமுகம் ஆகத் துவங்கியன என்பது தான்.
பேசும் மென்பொருள் என இங்கே குறிப்பிடக் காரணம், அந்தக் காலகட்டத்தில் அரட்டை மென்பொருள் என பொருள் தரக்கூடிய சாட்பாட் எனும் வார்த்தை அறிமுகம் ஆகியிருக்கவில்லை. இத்தகைய மென்பொருள்கள் பெரும்பாலும் சோதனை முயற்சியாகவே கருதப்பட்டன. மனிதர்களுடன் இயந்திரத்தால் உரையாடலை மேற்கொள்ள முடியும் எனும் கருத்து ஈர்த்த அளவிற்கு, இது நிஜத்தில் நடக்கும் என்பதை பலரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
நானும் பாட் தான்
இரண்டாவது சாட்பாட் என கருதக் கூடிய பாரி (PARRY) அமெரிக்க உளவியல் வல்லுனர் கென்னத் கோல்பேயால் (Kenneth Colby ) 1972-ல் உருவாக்கப்பட்டது. மனச்சிதைவு நோய் கொண்ட ஒருவர் போல தோற்றம் தந்த பாரி, அனுமானங்கள், மேற்கோள் குறிப்புகள் மற்றும் உணர்வு நோக்கிலான எதிர்வினைகள் ஆகியவை கலந்த சிக்கலான அம்சங்களை கொண்டு செயல்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தனிநபர் ஒருவர் சிந்திப்பதை நகலெடுக்க முயற்சிக்கும் இயல்மொழி மென்பொருளாக (natural language program ) இது அமைந்திருந்தது தான்.
என்.எல்.பி. என சுருக்கமாக குறிப்பிடப்படும் இயல்மொழி நிரலாக்கமே அரட்டை மென்பொருள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனிடையே, அடுத்த பத்தாண்டுகளுக்கு பேச்சு மென்பொருள்கள் வளர்ச்சியில் ஆழ்ந்த மவுனமே நிலவியது. இந்தக் காலகட்டம் பொதுவாகவே ஏ.ஐ ஆய்வுக்கான சோதனை காலமாகவும் கருதப்படுகிறது. ஏ.ஐ மீதான நம்பிக்கை குறைந்து, ஆய்வுக்கான நிதி உதவியும் வரண்டு போயிருந்தது.
இந்நிலையில், 1988-ல், பிரிட்டன் மென்பொருளாலர் ரோலோ கார்பெண்டர் (Rollo Carpenter ) மூன்றாவது பேசும் மென்பொருள் என கருதப்படக்கூடிய ஜேபர்வேக்கியை (Jabberwacky) உருவாக்கினார். இயல்பான மனித உரையாடலை சுவாரஸ்யமான, பொழுதுபோக்கான முறையில் அமைத்து தருவதை இந்த மென்பொருள் நோக்கமாக கொண்டிருந்தது.
அந்தக்கால சாட் ஜிபிடி
டூரிங் சோதனையில் வெற்றி பெற வேண்டும் எனும் இமாலய இலக்கும் இதன் பின்னே இருந்தது. இந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஜேபர்வேக்கி பயனாளிகள் கவனத்தை ஈர்த்தது. இப்போது சாட் ஜிபிடியை பயன்படுத்துவது போல, பலரும் ஜேபர்வேக்கி இணையதளம் வாயிலாக அதை பயன்படுத்திப்பார்த்தனர்.
1992-ல் அறிமுகமான டாக்டர்.பைட்சோ (Dr. Sbaitso ) மற்றும் 1995-ல் அறிமுகமான அலைஸ் (A.L.I.C.E. ) பேசும் மென்பொருள்கள் அடுத்த கைல்கற்களாக அமைந்தன. பைட்சோ மென்பொருள் எம்.எஸ்.டாஸ் இயங்குதளத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதோடு, முதல் குரல் வழி சேவையாகவும் அமைந்திருந்தது. ஓர் உளவியல் வல்லுனர் போலவே இது பயனாளிகளுடன் உரையாடியது.
ரிச்சர்டு வேலஸ் உருவாக்கிய ‘அலைஸ்’ ஓபன் சோர்ஸ் தன்மை கொண்டிருந்ததோடு, மேலும் பலவிதங்களில் முக்கியமாக அமைந்திருந்தது. அலைஸ் அறிமுகமாவதற்கு ஓராண்டுக்கு முன் 1994-ல் பேசும் மென்பொருள்கள் வரலாற்றிலும், வளர்ச்சியிலும் மற்றொரு மைல்கல் நிகழ்வு அரங்கேறியது.
| சாட்பாட்கள் பயணம் தொடரும் |
முந்தைய அத்தியாயம்: எலிசா முதல் சாட் ஜிபிடி வரை - 1 | சாட்பாட் சரித்திரம்: ஓர் அறிமுகம்
Edited by Induja Raghunathan