எலிசா முதல் சாட்ஜிபிடி வரை- 8 |சாட்பாட்களின் பாதையை மாற்றிய Siri
ஐபிஎம் உருவாக்கிய வாட்சன் சாட்பாட்டிற்கு பிறகு பெரும் பாய்ச்சலாக சாட்ஜிபிடி நிகழ்ந்தது. இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் எண்ணற்ற சாட்பாகள் உருவானதோடு, அவற்றின் வகைகளும் பெருகத்துவங்கின.
இவற்றில் ஒன்றான 'Siri' நட்சத்திர அந்தஸ்து பெற்ற சாட்பாட்களில் ஒன்றாக திகழ்வதோடு, சாட்பாட்களின் திசையில் ஏற்பட்ட முக்கிய மாற்றத்தின் அடையாளமாகவும் அமைகிறது.
மெய்நிகர் உதவியாளர் வகை மென்பொருளாக அமையும் சிறி (Siri), சாட்பாட்களில் புதிய வகையான குரல் வழி உதவியாளர் சேவைகளில் முன்னோடியாகவும் திகழ்கிறது.
சாட்பாட் வகை மென்பொருள்கள் பெரும்பாலும், எழுத்து வடிவிலான உரையாடல் சார்ந்து இயங்குபவையாக அமையும் நிலையில், சிறி, மனித குரலை புரிந்து கொண்டு குரல் வடிவில் பதில் அளிக்கும் டிஜிட்டல் உதவியாளராக வடிவம் எடுத்து பயனாளிகளைக் கவர்ந்தது.
’பேச்சறிதல்’ எனும் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் குரல்வழி உதவியாளர் பாட்கள் மனித குரலை உணரும் ஆற்றலும் பெற்றிருக்கின்றன.
உள்ளங்கை எந்திரன்கள்
ஸ்மார்ட்போன் அலை வீசத்துவங்கிய காலத்தில் அறிமுகமான சிறி, கைப்பேசியிடம் பயனாளிகள் கட்டளையிடுவதன் மூலம், தேவையான தகவல்களை பெறுவது அல்லது சேவைகளை நிறைவேற்றிக்கொள்வதை சாத்தியமாக்கியது. மொபைல் போனை பார்த்து பேசலாம், அதற்கு பதில் பெறலாம் என்பது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் செயல்பாட்டின் மாயத்தை கைமேல் உணர்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.
அமேசானின் அலெக்சா, மைக்ரோசாப்டின் கார்ட்டனா, சாம்சங்கின் பிக்ஸி. கூகுள் நவ் போன்ற எண்ணற்ற குரல்வழி டிஜிட்டல் உதவியாளர்கள் சேவை அறிமுகமாவதற்கான துவக்கப்புள்ளியாகவும் ’சிறி’ அமைந்தது.
எழுத்து வடிவிலான உரையாடலில் இருந்து குரல் வழி உரையாடலுக்கு சாட்பாட்கள் மாறியது ஒரு திசை மாற்றம் போல தோன்றினாலும், உண்மையில் குரல்வழி உரையாடல் சேவைகளுக்கான முயற்சி எழுத்து வடிவிலான சாட்பாட்களுக்கு முன்னதாகவே துவங்கிவிட்டன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆடியோ யுகம்
1922ல் ’ரேடியோ ரெக்ஸ்’ (Radio Rex) எனும் சாதனம் அறிமுகமானது. மரத்தால் ஆன நாய் வடிவிலான இந்த பொம்மை சாதனத்தின் முன் பெயர் சொல்லி அழைத்தால் உள்ளேயிருந்து நாய் எட்டிப்பார்க்கும். இது தான் மனிதக் குரலி உணர்ந்து செயல்பட்ட முதல் இயந்திர சாதனம் எனக் கொள்ளலாம்.
அடுத்ததாக 1952ல், பெல் லேப்ஸ் நிறுவனம் ஆட்ரே (Audrey – ஆட்ரே என்றால் தானியங்கி எண் உணரும் சாதனம்) எனும் சாதனத்தை அறிமுகம் செய்தது. ஆறு அடி உயரத்திற்கு சிக்கலான அமைப்பு கொண்ட இந்த இயந்திரம், பேசுபவர்களின் உச்சரிப்பு எண்களை உணரும் தன்மை கொண்டிருந்தது. தானாக போனை இயக்க இது பயன்பட்டது.
1962ல் ஐபிஎம் நிறுவனம், ஷுபாக்ஸ் டிஜிட்டல் பேச்சுறிதல் சாதனத்தை அறிமுகம் செய்தது. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற கண்காட்சியில் அறிமுகமான இந்த கம்ப்யூட்டர் சாதனம், அதிகபட்சம் 16 வார்த்தைகளையும், 9 எண்களையும் உணரும் தன்மை கொண்டிருந்தது. ஒரு இயந்திரம் மனிதர்கள் சொல்வதை புரிந்து கொண்டு செயல்பட்டது என்ற அளவில் அந்த காலத்தில் தொழில்நுட்ப அற்புதமாக விளங்கியது.
இதனிடையே, 1960-களில் அறிமுகமான எலிசா பாட், எழுத்து வடிவிலான உரையாடலுக்கான புதிய பாதையை காட்டி நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சாட்பாட்களுக்கு எல்லாம் வித்திட்டது.
கம்ப்யூட்டருக்கான இடைமுகம் எழுத்து வடிவிலானது என்பதால், மனிதர்களோடு எழுத்து வடிவில் உரையாடக்கூடிய மென்பொருளை உருவாக்குவது ஓரளவு எளிதாகவே இருந்தது. ஆனால், ஒப்பீட்டளவில் மனிதர்கள் பேச்சை கம்ப்யூட்டர்கள் புரிந்து கொள்ள செய்வது மிகவும் கடினமாக இருந்தது.
பேசு கம்ப்யூட்டர் பேசு!
பேச்சறிதலில் என்ன சிக்கல் என்றால், மனிதக் குரலுக்கு ஏற்ப வேறுபடும் குரல் வழி உச்சரிப்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட பிரச்சனையும் உள்ளன. ஒரே சொல் உச்சரிப்பில் வேறு சொல் போலவும் தோன்றலாம். கம்ப்யூட்டர்களை இவற்றை எல்லாம் எப்படி பகுத்தறியும்?
இந்த கேள்விக்கு தீர்வாகத் தான், சொற்களின் ஆதார அங்கங்களாக அமையும், பீனோம் (phonemes) எனப்படும் ஒலியன்கள் கருத்தில் கொள்ளப்பட்டு அவற்றுக்கு எண்ணிக்கை அளவீடு கொடுப்பதன் மூலம் கம்ப்யூட்டர்கள் பேச்சை புரிந்து கொள்ள வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பேச்சறிதல் மென்பொருள் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக, 1990-களில் டிராகன் நிறுவனத்தின் நேச்சுரலி ஸ்பீக்கிங் (Naturally Speaking) மென்பொருள் அமைந்தது. இதனிடையே, 1970-களில் கார்னகி மெலான் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆதரவுடன் பேச்சறிதல் மென்பொருள் முயற்சியில் ஈடுபட்டு, 1000 வார்த்தைகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்ட மென்பொருளை உருவாக்கியது. ஸ்டான்போர்டு ஆய்வு கழகமும் இதில் முக்கியப் பங்கு வகித்தது.
இதன் பிறகு, 1986-ல், ஐபிஎம் நிறுவனம் பேசினால் தட்டச்சு செய்யக்கூடிய டைப்ரைட்டரை அறிமுகம் செய்தாலும், மனிதர்கள் பேசப்பேச அதை புரிந்து கொண்டு டைப் செய்து காட்டிய டிராகன் மென்பொருள் பரவலாக கவனத்தை ஈர்த்தது. ஆனால் செயல்திறனில் மேம்பட டிராகன் மென்பொருள் அடுத்தடுத்த பதிப்புகளில் மேலும் மெனக்கெட வேண்டியிருந்தது.
இதனிடையே, 1984ல் அறிமுகம் ஆன ஐபிஎம் நிறுவனத்தின் சைமன் கையடக்க டிஜிட்டல் சாதனம், இன்றைய ஸ்மார்ட் போன்களுக்கான முன்னோடியாக அமைந்ததோடு, டிஜிட்டல் உதவியாளர் மென்பொருள்களுக்கான அடிப்படையாகவும் அமைந்தது.
ஸ்மார்ட் போன் யுகம்
இவற்றின் தொடர்ச்சியாக 2010ல் சிறி அறிமுகமானது. ஐபோனுக்கான டிஜிட்டல் உதவியாளர் சேவையான சிறியை இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் சிறி எனக் குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம், இந்த மென்பொருளை உருவாக்கியது ஆப்பிள் நிறுவனம் அல்ல என்பது தான். ஆனால், ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த குரலறிதல் மென்பொருளை கண்டறிந்து கையகப்படுத்தி இந்த பிரிவுக்கு புதிய பாதை காட்டியதில் ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.
சிறி உண்மையில் ஒரு செய் இயந்திரமாக உருவானது. அதாவது, கட்டளைகளை கேட்டு அதற்கேற்ப செயல்படும் இயந்திரம். மனிதர்கள் கோரிக்கைக்கு ஏற்ப இணையத்தில் உள்ள தகவல்களை அளிப்பது அல்லது சொல்லப்பட்டதை செய்வது உள்ளிட்ட திறன்களை இந்த மென்பொருள் கொண்டிருந்தது. ஹே கூகுள், ’வரைபடத்தில் கூடுவாஞ்சேரியை காட்டு’ அல்லது, அலெக்சா, ’டிவியை இயக்கு’ என்று கட்டளையிடுவதற்கெல்லாம் முதலடி எடுத்துக்கொடுத்தது சிறியின் ஆற்றல் தான்.
சிறி பின்னணி
சிறி உருவான கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. சிறியின் பெயர் காரணமும் இன்னும் சுவையானது. அதோடு சிறியின் பெயர் காரணமே அதன் வரலாற்றையும் சுருக்கமாக கொண்டிருக்கிறது.
சிறியை உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனர்களில் டேக் கட்டாலஸ் (Dag Kittlaus) தனது நார்வே நண்பர் ஒருவரின் பெயரான சிகிரிட்டின் சுருக்கமாக இந்த பேசும் மென்பொருளுக்கு சிறி என பெயர் வைத்ததாக கருதப்படுகிறது. சிறி என்றால், நார்வே மொழியில் அழகானவரை குறிக்கும் என்றும் பெயர் காரணம் சொல்லப்படுகிறது. மாறாக, ஸ்டான்போர்டு ஆய்வு கழகத்தின் இதற்கான மூலக்காரணம் என்றும் கருதப்படுகிறது.
பெயர் காரணம் எப்படியோ, ஆனால், ஸ்டான்போர்டு ஆய்வு கழகம் தான் சிறியின் ஆதியாக அமைகிறது. ஸ்டான்போர்டு ஆய்வு கழகத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் கிளைத்த நிறுவனமாகவே சிறியை கருதலாம். இங்கு உருவான காலோ (CALO) திட்டத்தின் நீட்சியாகவே கட்டாலஸ் மற்றும் அவரது சகாக்கள் இணைந்து சிறி சேவையை வளர்த்தெடுத்தனர். காலோ என்பது, ’காக்னட்டிவ் அசிஸ்டண்ட் தட் லேர்ன்ஸ் அண்டு ஆர்கனைசஸ்’ என்பதன் சுருக்கமாக அமைகிறது.
புத்திசாலித்தனத்தோடு கற்றுக்கொண்டு, ஒருங்கிணைப்பில் உதவும் திறனை கலோவின் விரிவாக்கம் உணர்த்துகிறது. சிறியின் நிறுவனர்களில் ஒருவரான ஆடம் செய்யார் இங்கு பணியாற்றும் போது, கலோ மென்பொருள் ஆற்றலை டிஜிட்டல் உதவியாளர் சேவைக்கான கற்றல் திறனாக பார்த்தார். இவர் தான் இந்தத் திட்டத்தின் 27 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ஒற்றை உதவியாளராக உருவாக்கினார்.
திருப்புமுனை
2003ல் துவங்கிய இந்த திட்டம் 2008ல் நிறுத்தப்பட்டது. செய்யார், இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வர்த்தக நோக்கிலான சேவையை உருவாக்க விரும்பினார். இதை புரிந்து கொண்டு கிட்டாலசும் அவருடன் இணைந்தார். இதன் பயனாக 2010ல் சிறி சேவை அறிமுகமானது. முதலில் ஆப்பிளின் ஐபோன்களுக்கான தனி செயலியாக அறிமுகமானாலும், பிளாக்பெரி, ஆண்ட்ராய்டு உள்ளிட்ட போன்களுக்கான சேவையாகவும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
மொபைல் போனில் இருந்த சிறி, பயனாளிகள் பேசுவதை கேட்டு செயல்படும் தன்மை கொண்டிருந்தது பரவலாக கவனத்தை ஈர்த்தது போல, ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கவனத்தையும் ஈர்த்தது. ஆப்பிள் நிறுவனம் குரல் வழி சேவைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஒரு சின்ன நிறுவனம் அதற்கு செயல்வடிவம் கொடுத்திருப்பதை பார்த்த ஜாப்ஸ், சிறி நிறுவனத்தை கையகப்படுத்த தீர்மானித்தார். இதற்கான முயற்சியில் ஜாப்சே ஈடுபட்டு நிறுவனர்களை அழைத்துப்பேசி நிறுவனத்தை வாங்கியது சிலிக்கான் வேலியில் சுவாரஸ்யமாக பேசப்படும் கதையாக இருக்கிறது.
சிறி குழு, ஜாப்சை நேரில் சந்தித்து பேசியும் முதலில் கையகப்படுத்தலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், பின்னர் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டது. ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்தலுக்கு பிறகு சிறி, அந்நிறுவனத்திற்கான பிரத்யேக சேவையாக மாறினாலும், குரல்வழி உதவியாளர் சேவைகள் பிரபலமாவதற்கான அடித்தளமாக அமைந்தது.
இந்த குரல்வழி சேவைகள், ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயனாளிகள் உள்ளங்கையில் கொண்டு வந்தன. ஆக, சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட் அறிமுகவாதற்கான களம் தயாராகி கொண்டிருந்தது.
சாட்பாட்கள் வரலாறு தொடரும்...
எலிசா முதல் சாட்ஜிபிடி வரை- 7 | எல்லா கேள்விக்கும் பதில் சொன்ன வாட்சன் பாட்!
Edited by Induja Raghunathan